நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள சிவரக் கோட்டையில் மு.க. அழகிரிக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது.

இந்தக் கல்லூரிக்காக அந்தப் பகுதியில் உள்ள கோயிலின் 44 சென்ட் நிலத்தை அபகரித்துவிட்டதாக, நில அபகரிப்பு தடுப்பு போலீஸில் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி புகார் கொடுத்தார். இதன்பேரில் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அழகிரி மனு தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்கள் வியாழக்கிழமை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கல்யாணசுந்தரம், அழகிரிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, இதே நீதிபதியால் வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனுக்காக அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜாராகி, மாவட்ட நில மோசடி தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிபந்தனை தற்போது வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனுக்கும் பொருந்தும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE