லட்சியப் பாதையில் நடைபோடும் மனிதர்களையும் சீரழித்து விடுகிறது போதைப் பழக்கம். எனில், சாதாரண மனிதர்களை மட்டும் விட்டுவைக்குமா? தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கவும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கவும் காரணமானவை போதைப் பழக்கம்தான். இதற்கு உடுமலை மட்டும் விதிவிலக்கா என்ன? போதை மருந்து, தாராள மது விற்பனை, அனுமதியற்ற பார், சாலைகளில் உருளும் குடிமகன்கள் என சீரழியும் உடுமலையை காக்க காவல் தெய்வங்கள் முன்வருமா என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. மது, போதைப் பொருட்களை உபயோகிக்கும் இந்தியர்கள் குறித்தான இந்த ஆய்வறிக்கை, பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தியர்களில் 5.70 கோடிக்கும் மேற்பட்டோர் மதுவுக்கு அடிமையாகவும், 8.50 கோடி பேர் போதைப் பொருட்களை உபயோகிப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 முதல் 75 வயதுக்குள் இருப்பவர்களின் 16 கோடி பேர் மது அருந்துபவர்களாக உள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்காக 186 மாவட்டங்களில் 2,00,111 வீடுகளில், 4,73,569 பேரை நேர்காணல் செய்துள்ளனர். சத்தீஸ்கர், பஞ்சாப், கோவா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்கள்தான் அதிக அளவில் மது உபயோகம் உள்ளது என்ற புள்ளிவிவரம், தமிழர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்தாலும், தமிழகத்திலும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் இல்லாமல் இல்லை. திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உடுமலை நகரம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. காமராஜரால் உருவாக்கப்பட்ட திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளால் இன்றளவும் பல லட்சம் பொதுமக்கள், விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேற்கண்ட இரு அணைகளும் இல்லாவிட்டால் உடுமலை பகுதியே பாலைவனமாகவே இருந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.
விவசாயம், காற்றாலை, பஞ்சாலை, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்கள் மற்றும் நெசவுத் தொழில் நிறைந்த பகுதியாக இது உள்ளது. திருப்பூரில் நிலவும் இடநெருக்கடி, ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வகையில், உடுமலையை ஒட்டிய கிராமப்புறங்களில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இதில், கணிசமான அளவுக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உடுமலை நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரும், மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சேர்த்து சுமார் 5 லட்சம் பேரும் வசிக்கின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் வருகைக்குப் பின், அவர்களில் ஒருபிரிவினரிடம் போதை சாக்லேட் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இவை தவிர, பான்பராக், பான்மசாலா, மாணிக்சந்த் உள்ளிட்ட, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கும் குறைவில்லை. இவற்றைத் தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத் துறை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களில், குடிமகன்களிடம் கட்டணக் கொள்ளையும் அரங்கேறுகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
பகல் 12 மணிக்கு மேல்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சிலருக்கு விடிந்த உடனேயே `சரக்கு’ தேவைப்படுவதால், அவர்
களுக்கென்றே பிரத்யேகமாக காலை 5 மணி முதல், திறந்தவெளிகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதுகுறித்தும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும், தாராள மது விற்பனையைத் தடுக்க முடியவில்லை. மது அருந்திவிட்டு, ஆடைகள் விலக சாலையில் விழுந்து கிடப்பவர்
களை சாதாரணமாகக் காணமுடிகிறது. இதேபோல, தடை செய்யப்பட்ட லாட்டரி என்ற போதைக்கு அடிமையானவர்களும் இங்கு அதிகம்.
மது, லாட்டரிக்கு அடுத்ததாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் வகையில், போதை ஊசி அல்லது போதை மாத்திரைகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. “உடுமலை நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த 19-வது வார்டு பாண்டியன் சந்து பகுதியில் உள்ள காலி இடத்தில் தினமும் சில இளைஞர்கள் வருவதும், போதை ஊசியை போட்டுக்கொண்டு மயங்கி கிடப்பதும் தொடர்கதையாகிவிட்டது” என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
அண்மையில் போதை மருந்து பழக்கத்துக்கு உள்ளான கூலித் தொழிலாளி ஒருவரின் 19 வயது மகன், கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்தக் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது. இறந்த மாணவரின் தாயார் கூறும்போது, “எனது கணவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்குச் செல்லும் அவர், மாலையில் வீடு திரும்பும்போது மது அருந்திவிட்டுத்தான் வருவார். நான் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவேன். இந்த நிலையில், கல்லூரியில் படித்து வந்த எனது மகன் போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையானது எனக்குத் தெரியவில்லை. கடைசி நேரத்தில் குளுக்கோஸ் செலுத்தினால் எனது மகனைக் காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் கூறினர். ஆனால், உடம்பில் பல இடங்களில் போதை ஊசி போட்டதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது அப்போதுதான் தெரியவந்தது. அதனால், சிகிச்சை எடுக்கும் முன்பாகவே எனது மகன் இறந்து விட்டான். மகனை இழந்து தவிக்கும் எங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எங்களைப்போல மற்றவர்களும் பாதிக்காமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாலதண்டபாணி கூறும்போது, “பொள்ளாச்சி சேத்துமடையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மது,போதை மருந்து விற்பனை, கேளிக்கை கொண்டாட்டத்தை உள்ளூர் போலீஸார் தடுக்கத் தவறியதும், உளவுத் துறையினர் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், குற்றவாளிகளை பாதுகாத்த சம்பவமும் தற்போது ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்கு வந்துள்ளது.
இதை விஞ்சும் வகையில், உடுமலையில் போதை மருந்து தாராளமாக விற்பனையாகி வருகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்நிகழ்வாகி வருகிறது. இதுகுறித்த புகார்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்கு முக்கியக் காரணம். அதேபோல, லாட்டரி விற்பனையும் தலைவிரித்தாடுகிறது. கூலித் தொழிலாளர்கள் தங்களின் தினசரி வருமானத்தை லாட்டரியில் இழந்து வருகின்றனர்.
தேர்த் திருவிழா கொண்டாட்டத்தைப் பயன்படுத்தி, சாலையோர வியாபாரிகளிடம் கட்டாய வசூல், மத்திய பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம் வசூல், சாலையோர தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம் வசூல் என, சமூகவிரோத நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த, காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களை வேதனையடைச் செய்துள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago