நெறி தவறாத தொழிலே வெற்றி தரும்!- கட்டுமானத் துறையில் சாதித்த யு.ஆர்.சி.தேவராஜன்

By த.செ.ஞானவேல்

ஜெயிக்கும்வரை தன்னம்பிக்கை அவசியம். ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம். யு.ஆர்.சி. நிறுவனத்தின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட வெற்றிப் பயணத்துக்கு தன்னம்பிக்கையும், தன்னடக்கமும் வேராகவும் நீராகவும் இருக்கின்றன. இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் எங்கள் தந்தை யு.ஆர்.சின்னசாமி கட்டுமானத் தொழில்துறைக்கு வந்தார்.  இன்று மூன்றாவது தலைமுறையாக இதே துறையில் வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறோம்.

அணைகள், ரயில்வே பாலங்கள், அரசு மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு தவிர்த்த தனியார் நிறுவனங்கள் என நாட்டின் வளர்ச்சிப் பாதை விரிந்துகொண்டே போகிறது. ராமர் கட்டிய பாலத்தில் அணிலின் பங்கு இருப்பதைப்போல யு.ஆர்.சி. நிறுவனத்தின் பங்களிப்பும் இதில் இருக்கிறது”  என்று  யூ.ஆர்.சி. நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சியை விளக்குகிறார் தேவராஜன்.

மதுரை எல்காட் ஐ.டி. பார்க், சென்னை விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம், புதுச்சேரி பல்கலைக்கழகம், பெங்களூரு இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திராவில் உள்ள வருமான வரித் துறை அலுவலகம், தமிழகத்தில் பல புகழ்பெற்ற தொழிற்சாலைகள் என கட்டுமானத் துறையில் யு.ஆர்.சி. நிறுவனம் கட்டியெழுப்பிய பிரம்மாண்டங்களின் பட்டியல் நீளமானது.

இன்று இந்தியாவின் 11 மாநிலங்களில் கட்டுமானத் தொழிலில் தடம் பதித்திருக்கிற யு.ஆர்.சி. நிறுவனத்தின் வளர்ச்சியில் யு.ஆர்.சின்னசாமியின் கனவும், கொள்கைகளும் பலமான அஸ்திவாரமாக இருக்கின்றன.

சின்னஞ்சிறிய கிராமம்...

“ஈரோடு மாவட்டத்தில் ஊஞ்சப்பாளையம் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த  அப்பாவுக்கு எவ்விதமான தொழில் பின்புலமும் கிடையாது. உழவும், நெசவும் இரு கண்களாகபாவிக்கும் கிராமத்தில், தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயம். காவிரி ஆறு பாய்ந்து வளம் சேர்க்கும் ஈரோடு மாவட்டத்தில் ‘மேட்டாங்காடு’ என்று சொல்லப்படுகிற உயர்வான பகுதியில் இருக்கிறது எங்கள் பூர்வீக கிராமம்.

அன்றைய சூழலில் நெசவு செய்யும் குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்தால், கூடுதலாக நான்கு தறி இயந்திரங்களை  அமைத்தாலே முன்னேற முடியும். ஆனால், 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிற குடும்பமாக இருந்தாலும், நான்கு பிள்ளைகள் இருக்கும் வீட்டில், அந்த நிலம் ஆளுக்கு ஐந்து ஏக்கராக சுருங்கிவிடும்.

விவசாயத்திலிருந்து கட்டுமானத்துக்கு...

இயற்கையை நம்பி வாழ்கிற விவசாயிகளுக்கு ஏற்றம் குறைவாகவும், இறக்கம் அதிகமாகவும் இருக்கும். இரண்டாம் வகுப்பைத் தாண்ட முடியாத சூழலில், ஆடு மேய்ப்பது தொடங்கி, விவசாயத்தின் அத்தனை வேலைகளையும் சிறுவயது முதலே செய்து பழகினார் அப்பா. வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், வேறு புதிய தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார். அதுதான் எங்கள் தொழில் பயணத்தின் முதல் படி.

அப்பாவின் பெரியப்பா மகன், பவானி ஆற்றில்  தடுப்பணைகள், வாய்க்கால் போன்ற கட்டுமானப்  பணிகளுக்கு ஆட்களை அழைத்துச் செல்கிற பணியை  ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டுவந்தார். அவருக்குத் துணையாக, 17 வயதில் கட்டுமானத் துறைக்கு வேலைக்குப் போனார் அப்பா.  ஏழு ஆண்டுகள்  தொழிலின் நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்த பிறகு,  தன்னால் தனியாக கான்ட்ராக்ட் எடுத்து, சிறப்பாக கட்டுமானங்களை முடித்துத் தரமுடியும் என்று நம்பினார்.

அந்த நம்பிக்கைதான் அவரின்  தொழில் முதலீடு. கடன் வாங்கித்தான் தொழிலைத் தொடங்கினார். அவருடைய தாய் மாமா ராமசாமியுடன்  இணைந்து,  மலம்புழா அணை கட்டுமானத்தில் சில பகுதிகளை செய்ய ஒப்பந்தம்  பெற்று, நிறைவாக வேலைகளை செய்து முடித்தார்.

தொழிலாளர்களுடன் நட்புறவு!

பெரிய அளவில் பணம் சம்பந்தப்படுகிற கட்டுமானத் தொழிலில், தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, குறித்த நேரத்தில், ஒப்புக்கொண்ட தொகைக்கு வேலையை முடித்துத் தருவதே ஒப்பந்தக்காரரின் பணி. அதிகாரத்தால் சாதிப்பதைவிட, அன்பால் அதிகம் சாதிக்க முடியும் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த அப்பா மீது, தொழிலாளர்கள் அபிமானத்துடன் இருந்தனர். அவர் கேட்டுக்கொண்டால் கூடுதல் நேரம்கூட வேலை பார்த்துத் தருகிற அளவுக்கு,  தொழிலாளர்களுடன் நட்புறவு பாராட்டினார்.

எங்களிடம் சாதாரண கூலி வேலைக்கு வந்தவர்கள்கூட, ப்ராஜெக்ட் மேனேஜராக உயர்ந்து, லட்சங்களில் சம்பளம் வாங்கும் நிலையை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார். அதையே தனது தொழில் சாதனையாகவும் கருதினார்.  `நம்மிடம் வேலை செய்கிறவர்கள் நன்றாக இருந்தால்தான், நாம் நன்றாக இருக்க இருக்கமுடியும்’ என்ற அப்பாவின் அற உணர்வு, சிறு வயது முதலே எங்கள் மனதுக்குள்ளும் வேரூன்றி வளர்ந்தது.

எடுக்கிற முடிவுகளில்  அப்பாவுக்கு இருந்த தெளிவும், உறுதியும், மற்றவர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. பெண் பார்க்கப்போன இடத்தில், மணமகனுக்கு சொந்தமாக பூமி எதுவும் இல்லையே என்று உறவினர்கள் கேட்டபோது,  `பூமி இல்லைன்னா என்னா? புத்தி இருக்கு இல்ல’ என்று நம்பிக்கையோடு பெண் கொடுத்தார் தாத்தா. திருமணம் முடிந்த மூன்றாம் நாள், வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கிளம்பியவர், 47 நாட்களுக்குப் பிறகே வீடு வந்து சேர்ந்தார். அந்த அளவுக்கு, ஒப்புக்கொண்ட காலகெடுவுக்குள்,  ஏற்றுக்கொண்ட பொறுப்பை முடித்துத் தருவதில் உறுதியாக இருப்பார்.

‘எடுத்துக் கொண்ட வேலையில் நேர்த்தியும்,  ஒழுங்கும் இருந்தால், நாம் வேலையைத் தேடிப்போக வேண்டியதில்லை. வேலை நம்மைத் தேடிவரும்’ என்பதை உணர்ந்து,  கடுமையாக உழைத்தார்.

25 வயதில் யு.ஆர்.சி. நிறுவனம்!

1948-ல் இளம் வயதில் வேலைக்கு வந்த அப்பா, 1956-ல் அவரது 25 வயதில் யு.ஆர்.சி நிறுவனத்தை உருவாக்கினார். கான்ட்ராக்டர்  என்றால், சொன்னபடி நடந்துகொள்ள மாட்டார்கள், ஒப்புக்கொண்ட நேரத்துக்கு  பணியை முடித்துத் தர மாட்டார்கள்,  கட்டுமானத்தின் தரத்தில் அவர்களை நம்பமுடியாது போன்ற எதிர்மறை எண்ணங்களே அதிகம்.  அதிலும், ஒப்பந்தக்காரர் என்றால், ஊழலோடு நேரடியாக தொடர்புடையவர் என்று அகராதியில் எழுதும் அளவுக்கு, இன்றைய சூழலில் பெயர் கெட்டுக் கிடக்கிறது.

இந்த நிலையை மாற்றி, ஒப்பந்தக்காரர்கள்  சொன்னபடி நடந்து கொள்வார்கள் என்ற நற்பெயரை ஈட்டியதுதான் யு.ஆர்.சி.  நிறுவனத்தின் மகத்தான வெற்றி.  ஒரு புதிய கட்டுமானப் பணி தொடங்கினால், அங்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுடன், தானும்  இரவு தங்குவதற்காக முதலில் ஒரு அறையைக் கட்டிவிடுவார் அப்பா.  மாதக்கணக்கில் கட்டுமானம் நடைபெறும்  இடத்திலேயே தங்கி, கடிதம் மூலமே குடும்பத்துடன் தொடர்பில் இருப்பார். அம்மா துளசியம்மாளும், அப்பாவின் வேலையின் தன்மையை உணர்ந்து, குடும்பத்தின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

முடக்கிவைத்தது முடக்குவாதம்...

நாம் ஒன்று நினைத்தால், விதி ஒன்று நினைக்கும் என்று சொல்லுவார்கள். தொழிலில் முழு கவனம் செலுத்தி, வளர்ச்சிகாண வேண்டிய நேரத்தில், அப்பாவுக்கு முடக்குவாதம் ஏற்பட்டு,  ஒரு கை செயலிழந்தது.  தனது தந்தையின் மரணத்துக்குக்கூட செல்ல முடியாத அளவுக்கு முடங்கிப்போனார்.

கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டுவசதி வாரியப் பணியை ஒப்பந்தம் எடுத்திருந்தார். குறித்த நேரத்தில் அதை முடித்து தரமுடியாமல் போனதில்,  பெரிய பண நஷ்டமும் ஏற்பட்டது. எங்கள் துறையில் இதுபோல  நெருக்கடிகள்  அடிக்கடி வரும். இந்த நிலையில்,  ஒப்பந்தக்காரர்கள் தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி, வேலையை முடித்துக் கொடுக்கவே பெரும்பாலும் முனைவார்கள். ஆனால், `நம்முடைய சூழ்நிலை நெருக்கடிகளை எந்தக் காரணத்துக்காகவும், கட்டுமானப் பணிகளில் வெளிப்படுத்தக்கூடாது’ என்ற கொள்கை பிடிப்புடன் இருந்த காரணத்தால்,  ஒப்புக்கொண்டபடி வேலையை செய்து கொடுத்தார். தொடர்ந்து செயல்பட உடல் ஒத்துழைக்காத நிலையில், பண நஷ்டத்தையும் எதிர்கொண்டார்.

கடன் அடைக்க வழியில்லாத சூழலில் யு.ஆர்.சி.  நிறுவனம் மீண்டு வர வாய்ப்பில்லை என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், மன உறுதியுடன் போராடி, அப்பா மீண்டு வந்தார். நஷ்டம் ஏற்பட்ட காலத்திலும், நெறி தவறாமல் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்.

கை கொடுத்த பங்குதாரர்...

துன்பம் இருள்போல சூழ்ந்த நிலையில் அம்மாவின் போராட்டமும், அப்பாவின் பங்குதாரராக இருந்த ஆர்.ரங்கசாமியின் துணையும் நம்பிக்கை வெளிச்சத்தை அளித்தன. குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, அப்பாவின் உடல்நலத்திலும் கவனம் செலுத்தி,  துணிச்சலுடன் கஷ்டத்தை எதிர்கொண்டார் அம்மா. கை செயலிழந்து அப்பா வீட்டுக்குள் முடங்கியபோதுகூட,  தொழில் முடங்காமல் பார்த்துக் கொண்டார் ரங்கசாமி. நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணைநின்றது போலவே, அவருடைய மகளை எனக்கு மணம் செய்துகொடுத்து,  என் வாழ்வுக்கும் வழிகாட்டினார்.

பூரணமாக குணமடைந்து, பழையபடி அப்பா உழைக்கத் தொடங்கிய பிறகு யு.ஆர்.சி.  நிறுவனத்தின் புதிய அத்தியாயம் உருவானது.   இரண்டாம் தலைமுறையின் முதல் நபராக என்னுடைய அண்ணன் கனகசபாபதி, யு.ஆர்.சி.  நிறுவனத்தில் இணைந்தார். அண்ணனுக்கு அடுத்து, நானும் நிறுவனத்தில் இணைந்துகொண்டேன். எனக்குப் பிறகு, எங்கள் தங்கை கணவர் பழனிசாமி நிறுவனத்தில் இணைந்தார். கூட்டு முயற்சியில்,  வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செயல்படத் தொடங்கினோம்.

பணியாளர்களே முதுகெலும்பு...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று நானும், கட்டுமானத் தொழிலையே வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டேன். எங்கள் நிறுவனத்தில் முதலில் பணிக்குச் சேர்ந்த இன்ஜினீயர் என்கிற பெருமை எனக்கு உண்டு. `மேஸ்திரிகளோடு நன்றாகப் பழகு. அவர்களோடு அமர்ந்து ஒன்றாக சாப்பிடு’ என்பதுதான், வேலைக்குச் சேர்ந்ததும் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். அதேபோல, ‘செலவு மிச்சம் பிடித்து, அதிக லாபம் ஈட்டலாம் என்று நினைக்காதே. பணியாளர்கள் மனம் நிறையும்படி வசதிகள் செய்து கொடுக்கும் அளவுக்கு, வருமானத்தை அதிகமாகப் பெருக்கு’ என்றும் சொல்லிக்கொடுத்தார். நிர்வாக பொறுப்புக்கு வந்தபிறகு,  இந்த இரண்டு பாடங்களும் பெரிய அளவில் எனக்கு வழிகாட்டுகின்றன.

கட்டுமானத் தொழில் குறித்த ஒரு கண்காட்சி,  சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. நானும், அப்பாவும் அங்கு போயிருந்தோம். இரண்டு பழச்சாறு குடித்தபோது, அறுபது ரூபாய் பில்  வந்தது. ‘இது  நம்மிடம் வேலை செய்கிற ஒரு பெண்ணின் எட்டு நாள் கூலியப்பா’ என்று அதிர்ந்து கூறினார் அப்பா.

எப்போதும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்மீதுதான் அவருக்கு கவனம் இருந்தது.  முதன்முதலாக நான் கார் வாங்கும்போது, ‘உன்னிடம் இருக்கும் வசதிகளை வைத்து,  யாரும் உன்னை பணக்காரனாக அடையாளம் காணக்கூடாது. அப்படி நினைத்தால், நீ வாழ்வில் தோற்றுவிட்டதாக அர்த்தம். எந்த உயரத்துக்குச் சென்றாலும்,  பண்புள்ளவனாகவும், எளிமையானவனாகவும், நல்ல மனிதனாகவும் நீ அடையாளம் பெற வேண்டும்’ என்று கூறினார். அவரது அறிவுரைகளும், ஆலோசனைகளும் எங்களை வழிநடத்தின.

சமூக நலனிலும் அக்கறை!

தொழிலில் மட்டுமின்றி, சொந்த வாழ்விலும் முன்னுதாரண மனிதராகவே எங்கள் தந்தை விளங்கினார். 27 வயதில் ஊர் பஞ்சாயத்துத்  தலைவர் பொறுப்புக்கு வந்தார். ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பார். அவருடைய காரில், பிரசவத்துக்கு இலவசம் என்று எழுதிப் போடவில்லையேதவிர, எத்தனையோ இரவுகளில், பிரசவவலியில் துடித்த பெண்களை அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன்.

அதேபோல, அம்மா துளசியம்மாள், குழந்தை பிறந்த பிறகு, தாயும்-சேயும் நலம் எனத்  தெரியும்வரை மருத்துவமனையிலேயே இருப்பார். இத்தகைய பெற்றோர்களைப் பார்த்து வளர்ந்த காரணத்தால், தொழிலையும், சமூகத்தையும் ஒன்றாகப் பாவித்தே நாங்களும் வளர்ந்தோம்.

சமூக அக்கறையுள்ள 37 பேர் ஒன்றாக இணைந்து,  கொங்கு அறக்கட்டளையை  நிறுவியபோது, அதன் தலைவராக விளங்கியவர் அப்பா. கொங்கு பகுதியில் உருவாக்கிய முதல் தனியார்  பொறியியல் கல்லூரி,  இந்த அறக்கட்டளையின் மூலமே உருவானது. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய, கொங்கு அறக்கட்டளை கல்லூரிகள்  இன்றும் தமிழக  அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களாக இயங்கி வருகின்றன.

கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர்...

1998-ல்  என்னை  கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளராக பொறுப்பேற்குமாறு  மற்றவர்கள் கூறியபோது,  எனக்கு வயது 37. தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய கட்டத்தில், பொதுநலக் காரியங்களில் ஈடுபட தயக்கம் காட்டினேன். அதை அப்பாவிடம் தெரிவித்தபோது, `இந்த வாழ்க்கை என்பது, நாம் மகிழ்ச்சியாக வாழறதுக்கு மட்டும் கிடையாது. மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்’ என்றார். மறுவார்த்தை பேசாமல்,  கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, என்னால் முடிந்த பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தேன்.

தினமும் அலுவலகம் போவதுபோல கல்லூரிக்குச் சென்றேன். பொதுநல காரியங்களில் பங்கெடுத்துக்கொண்டே,  தொழிலில் கவனம் செலுத்தி காண்கிற வளர்ச்சியே, சரியான வளர்ச்சி என்பதைப்  புரிந்துக்கொள்ள இந்த அனுபவம் பெரிதும் உதவியது.

‘தந்தை ஜில்லாவுல பெரிய ஆளா வரணும். மகன் மாநிலத்துலேயே பெரிய ஆளா வரணும். பேரன் இந்த தேசத்துலேயே பெரிய ஆளா வளரணும்’ என்று  தொழில் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை வழங்கினார் அப்பா. தந்தையாகவும், குருவாகவும் அவர் சொல்லிக்கொடுத்த நெறிகளை வாழ்விலும், தொழிலிலும் இன்றுவரை கடைப்பிடிக்கிறோம். அப்படி நெறிதவறாமல் வாழ்ந்தால், என்ன மதிப்பு கிடைக்கும் என்பதை அவரது மரணத்தில் உணர்ந்தோம். ‘அப்பா எனக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் தெரியுமா?’ என்று பலர் கண் கலங்கிச் சொல்லும்போதே,  அவரது முழுமையான ஆளுமையை எங்களால் உணர முடிந்தது. அவரது மறைவுக்குப் பிறகும்,  அதே நெறிகளோடு நிறுவனத்தை வளர்த்தெடுக்க வேண்டிய சவால் எங்கள் முன்னால் இருந்தது…

இடைவேளை...நாளை வரை...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்