தரமான மரக்கன்றுகளை சிறந்த முறையில் உற்பத்தி செய்ய, உயிர் உரங்கள் பெரிதும் உதவுகின்றன. மரக் கன்றுகளின் வேர்ப்பகுதியில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், மரக்கன்றுகள் மண்ணில் நிலைத்து நின்று, நன்கு வளர்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கன்றுகளின் வேர்ப் பகுதியில் வேர்ப் பூஞ்சாணங்கள் மிகுந்து காணப்படுகின்றன. வேர்ப் பூஞ்சாணங்கள், மரக்கன்றுகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், நீண்டகாலத்துக்கு மண்ணிலேயே நிலைத்து நின்று, அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
மண்ணில் உள்ள பாஸ்பேட், ஜிங்க், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், சல்ஃபர் போன்ற நுண்ணூட்டச் சத்துகளை மரக்கன்றுகள் எடுத்துக்கொள்ள முடியாத நிலையில், அவற்றை உட்கொள்ளச் செய்து, வளர்ச்சிக்கு உதவுகின்றன பூஞ்சாணங்கள்.
மேலும், தீமை விளைவிக்கும் கிருமிகள், வறட்சி, மண்ணின் உவர்தன்மை, உப்புத்தன்மை, நச்சுத் தன்மை மிக்க உலோகங்கள் போன்றவற்றிலிருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கின்றன.
உயிர் உரங்கள் மற்றும் வேர்ப் பூஞ்சாணங்களின் வகைகள் குறித்தும், தரமான மரக்கன்றுகள் உற்பத்தியில் அவற்றின் பங்களிப்பு குறித்தும் விளக்குகிறார் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானி ஆ.கார்த்திகேயன்.
“உயிர் உரங்கள் என்பவை, காற்றிலிருந்து தழைச்சத்தை கிரகித்தல், மண்ணில் உள்ள மணிச்சத்தை எளிய மூலக்கூறுகளாக்கி மரக்கன்றுகளை உட்கொள்ள வைத்தல் போன்ற பணிகளைச் செய்யும் நுண்ணுயிர்களின் கூட்டுக் கலவையாகும்.
நுண்ணுயிர்கள் கலவையை நேரடியாக விதையிலோ, மண்ணிலோ, தொழுஉரத்துடன் கலந்தோ அளித்து துரித வளர்ச்சிக்கு உதவுகிறது. உயிர் உரங்களை ஆக்டினோரைசல், பாக்டீரியா, நீலப் பசும்பாசி, பூஞ்சாணம் என நான்கு வகைகளாக பிரிக்கலாம். ஆக்டினோரைசல், சவுக்கு, ஆல்னஸ் போன்ற மரப் பயிர்களில் தழைச்சத்தை நிலைப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பாக்டீரியா உயிர் உரமானது, பாக்டீரியா கூட்டுயிர் உயிர் உரம், தனி உயிர் உரம் என இருவகைப்படும். ரைசோபியம், பிரைடிரைசோபியம் போன்ற பாக்டீரியா நுண்ணுயிர்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வளரக்கூடிய பருப்பு வகை, மரக்கன்றுகளில் ஊடுருவி பல்கிப் பெருகுவதன் மூலம், வேர் முடிச்சுகளை ஏற்படுத்தி, நைட்ரஜன் சத்துகளை நிலை நிறுத்துகின்றன.
தனி உயர் பாக்டீரியாக்களான பாஸ்போ பாக்டீரியம், கரைக்க இயலாத மணிச்சத்து மூலக்கூறுகளை கரையக் கூடியதாக மாற்றி, மரக்கன்றுகளுக்கு கிடைக்கச் செய்கின்றன. இவை பெரும்பாலும் வேர்ப்பகுதியில் காணப்படும்.
அசோஸ்பைரில்லம், சுருள் வடிவம் கொண்ட, நகரும், இடம்பெயரும் தன்மையுடையது. புல், கோதுமை, சோளம் போன்ற பயிர்களின் வேர்களில் கூட்டுயிர்களாகவோ, தனித்தோ காணப்படுகிறது.
நீலப் பசும்பாசி உயிர் உரத்துக்கு, அனபீனா, அசோலாவை உதாரணமாகக் குறிப்பிடலாம். அசோலா என்பது நீரில் மிதக்கக்கூடிய மற்றும் வேகமாக பல்கிக் பெருகக்கூடிய பெரணி வகைத் தாவரம்.
அனபீனா என்பது அசோலா பெரணியின் இலைக்குமிழ்களுக்கு இடையில் வாழக்கூடிய நீலப் பசும்பாசி. இதை உரமாகப் பயன்படுத்தும்போது, 50 சதவீதம் அதிக உற்பத்தி கிடைக்கிறது. மேலும், காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்தி, தாவரங்களுக்கு கிடைக்கச் செய்கின்றன.
வேர்ப் பூஞ்சாணங்கள் அனைத்து வகை மரக்கன்றுகளிலும் பரவிக் காணப்படுகின்றன. இவை, வளம் குறைந்த மண்ணில் வாழும் மரங்களுக்குத் தேவையான மணிச்சத்தை கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வேர்ப் பூஞ்சாணங்கள், புறவளர் வேர்ப் பூஞ்சாணங்கள், உள்வளர் வேர்ப் பூஞ்சாணங்கள் என்று இருவகைப்படும்.
புறவளர் வேர்ப் பூஞ்சாணங்கள் பெரும்பாலும் பைனஸ் குடும்பத் தாவரங்களிலும், பெடுலேஸியே, பேகேஸியே, ஜக்லாண்டேஸியே, மிர்டேஸியே போன்ற ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரக் குடும்பங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. தாவர வேர்களின் புறஅடுக்கு முழுவதும் இவ்வகை பூஞ்சாணங்கள் மூடப்பட்டு, உறைபோன்று காணப்படுவது இதன் பண்பாகும். இந்த உறையானது, தீமை பயக்கும் மற்ற பூஞ்சாணங்களிலிருந்தும், புழுக்களிலிருந்தும் தாவரங்களின் வேர்களைப் பாதுகாக்கிறது. தாலஸ் என்ற இதன் உடல் போன்ற அமைப்பு வேரின் உள்ளடுக்கில் உள்ள செல்களுக்கு இடையில் நுழைந்து ‘ஹார்டிக் வலை’ என்ற அமைப்பை உண்டாக்குகிறது. இதுவே வேருக்கும், பூஞ்சைக்குமான உணவு பரிமாற்ற மையமாகத் திகழ்கிறது.
உள்வளர் வேர்ப் பூஞ்சாணங்கள், குமிழ் குறுமர பூஞ்சாணங்கள், எரிகாய்டு வேர்ப்பூஞ்சை, ஆர்க்கிட் வேர்ப்பூஞ்சை என்று மூன்று வகைப்படும். வேர் பூஞ்சாணங்கள் வேரின் மேற்பரப்பைச் சுற்றிலும் காணப்படும் மண்ணில் ஊடுருவி, நுண்ணூட்டச் சத்துகளைத் தாவரங்களுக்கு கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. தாவரங்களின் உறிஞ்சும் திறனை அதிகரித்து, அதன் வளர்ச்சிக்கும், மணிச்சத்து, ஜிங்க், காப்பர் போன்ற நுண்ணூட்டச் சத்துகளை கிரகிப்பதற்கும் உதவுகின்றன. தீமை பயக்கும் நுண்ணுயிர்கள், புழுக்கள், விஷப் பொருட்களிடமிருந்து தாவரங்களை காக்கின்றன.
நன்மைகள் என்னென்ன?
உயிர் உரங்கள் 25 சதவீதம் தொழுஉரச் செலவைக் குறைக்கிறது. தாவரத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, வறட்சியைத் தாக்குப் பிடிக்கவும் உதவுகிறது. மேலும், மண் வளத்தைப் பெருக்கி, உற்பத்தியை 10 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கிறது. தீமை பயக்கும் நுண்ணுயிர்களிடமிருந்து தாவரங்களைப் பாதுகாக்கிறது” என்றார் கார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago