மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தம்

சென்னை மாநகராட்சி 35-வது வார்டு (மூலக்கடை) இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள 53 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி 35-வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப் பதிவு வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 48 வாக்குக் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக இருப்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 5 எண்ணிக்கை உள்பட மொத்தம் 53 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி, வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை தேர்தல் அலுவலர்கள் பொருத்தினர். பின்னர் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு செய்து, இயந்திரம் முறையாக செயல்படுகிறதா என பரிசோதித்தனர். பின்னர் முகவர்கள் திருப்தி அடைந்த நிலையில், அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனி அறையில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE