நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை வென்றதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்ற கருத்து வலுவாகியுள்ளது. ஆனால் தற்போதுள்ள 7 எம்.எல்.ஏக்கள் கையில்தான் ஆட்சியின் தலையெழுத்து உள்ளது என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 136 எம்.எல்.ஏக்களை அதிமுகவுக்கு வாரி வழங்கினார்கள் தமிழக மக்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 135 ஆனது.
ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய தினகரன் வெற்றி பெற்றதால் அதிமுக எண்ணிக்கை 135 ஆகவே தொடர்ந்தது. டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்தது.
இரண்டு எம்.எல்.ஏக்கள் மறைவு, நீதிமன்ற தீர்ப்பினால் அமைச்சர் ஒருவர் தகுதியிழப்பு காரணமாக மேலும் 3 பேர் குறைய தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 4 எம்.எல்.ஏக்களை வென்றால்போதும் என்கிற நிலையில் 9 தொகுதிகளை அதிமுக பெற்றதன் மூலம் அதன் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பான்மைக்கு 118 தேவை என்கிற நிலையில் 123 எம்.எல்.ஏக்கள் அறுதி பெரும்பான்மை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதிமுகவுக்குள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் பல்வேறு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் தற்போதுவரை இபிஎஸ்- ஒபிஎஸ்சுக்கு தலைவலி நீடிக்கிறது என்றே சொல்லலாம்.
காரணம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சியினரான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஒவ்வொரு முறையும் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதும், பின்னர் மீண்டும் பழைய நிலைப்பாட்டுக்கு திரும்புவதும் என உள்ளனர். அதேபோன்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்து அவர்கள் மீதான நோட்டீஸுக்கு உச்சநீதிமன்ற தடை காரணமாக தற்காலிகமாக தப்பித்துள்ளனர்.
இதனால் அவர்கள் 3 பேர் நிலை அதிமுக ஆதரவா? ஆதரித்தாலும் நீடிக்க முடியுமா? என்கிற நிலையில் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என தெரியாது. அதேப்போன்று தோப்பு வெங்கடாச்சலம் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அவரது கோரிக்கை அமைச்சர் பதவி இல்லாவிட்டால் எதிர்த்து வாக்களிப்பேன் என்பதாக உள்ளது என்று அதிமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.
மேற்கண்ட 7 பேரும் அதிமுக எதிர்ப்பு நிலை எடுத்தால் அதிமுகவின் நிலை கேள்விக்குறியே. 116 எம்.எல்.ஏக்களை வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஆகவே இவர்கள் 7 பேர் கையில் அதிமுக ஆட்சியின் தலையெழுத்து உள்ளது.
மறுபுறம் அமமுக அடைந்த தோல்வி, தேர்தலில் தாக்கத்தை செலுத்த முடியாதது ஆகியவை அதிமுக எம்.எல்.ஏக்களையும், மேற்கண்ட 7 பேரையும் யோசிக்க வைக்கும். அவ்வாறு நடந்தால் ஒருவேளை அவர்கள் அதிமுகவை ஆதரிக்கலாம். அப்படி ஆதரித்தால் ஆட்சி எவ்வித பிரச்சினையும் இன்றி 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்.
3 அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் நிலை, ஆதரவு கொடுத்தாலும் நித்யகண்டம் பூர்ண ஆயுசு நிலைதான். காரணம் தற்போது 123 பேர் ஆதரவு உள்ள நிலையில் இந்த 3 பேரை இழக்க அதிமுக தலைமை தயங்காது என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.
அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை காலம் பதில் சொல்லும். அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் தொடருமா ? என்பதற்கும் காலம் தான் பதில் சொல்ல முடியும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago