முகநூலில் வானிலை அசத்தும் வெதர்மேன்!

By க.சக்திவேல்

மழைக் காலத்தில் எங்கெல்லாம் அதிக மழை பெய்யும், கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதேபோல, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களின் உயிர், உடமைகளைக் காப்பதில் வானிலை முன்னறிவிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதற்கு, சிறந்த உதாரணம் அண்மையில் ஒடிசாவை புரட்டிப்போட்ட ‘ஃபானி’ புயல் குறித்த முன்னறிவிப்புகள்.

இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்துக்கென பிரத்யேக வானிலை முன்னறிவிப்புகளை முகநூல் மூலம் அளித்துவருகிறார் கோவை இருகூர் ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் சந்தோஷ் கிருஷ்ணன்(27).விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், தொடக்கத்தில் நோக்கம் ஏதுமின்றி வானிலை குறித்த கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார். நாளடைவில் பலருக்கும் அவரது பதிவுகள் பயனளிக்கவே,  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், வானிலை முன்னறிவிப்பு குறித்த தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டு, தற்போது உரிய முன்னறிவிப்புகளை அவ்வப்போது அளித்து வருகிறார்.

குறிப்பாக, விவசாயிகள் பலர் அவரது ‘கோயம்புத்தூர் வெதர்மேன்’ முகநூல் பக்கத்தைப்  பின்தொடர்ந்து வருகின்றனர். பயணத்தைத் திட்டமிடுதல், வேளாண் பணிகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு சந்தோஷின் பதிவுகள் பயனளிப்பதாக முகநூல் பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படி வானிலையை முன்கூட்டியே கணிக்க முடிகிறது என சந்தோஷிடம் கேட்டதற்கு, “இங்கிலாந்தில் இயங்கி வரும் `யூரோப்பியன் சென்டர் ஃபார் மீடியம் ரேஞ்ச் வெதர் ஃபோர்காஸ்டிங்’, அமெரிக்காவைச் சேர்ந்த `குளோபல் ஃபோர்காஸ்டிங் சிஸ்டம்’  ஆகியவற்றில் கிடைக்கும் வரைபடங்கள், காற்றின்வேகம், காற்றின் திசை, காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வானிலை முன்னறிவிப்புகளை  பதிவிடுகிறேன். இந்தக் காரணிகளைக் கொண்டு  15 நாட்கள் வரை துல்லியமான முன்னறிவுப்பு வழங்க முடியும்” என்றார்.

நெகிழ்ச்சியான சம்பவம்...

மேலும் அவர் கூறும்போது, “போன வருஷம் கிணத்துக்கடவு அடுத்த சூலக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருத்தர்,  ஜூன் மாதம் நல்லா மழை பெய்யும்னு நான் கொடுத்திருந்த முன்னறிவிப்பை பாத்துட்டு, 2018 மே இறுதியில் தென்னை மரங்களுக்கு உரம் வைச்சுட்டாரு. நான் கணித்தது போலவே அந்த மாசம் நல்லா மழை பெய்தது. அதுக்குப்புறம், என்னை அவர் தொடர்புகொண்டு வாழ்த்தியது மிகுந்த மன நிறைவை அளித்தது. அதேபோல, கேரள வெள்ளம், கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணப் பணிக்

காக கோவையில் இருந்துபோன நிறைய பேர், எந்தப்  பகுதிக்கு சென்றால் மழை இருக்காது, எப்படி செல்லலாம்ங்கற முன்னறிவிப்புகள என்கிட்ட கேட்டுட்டுப் போனாங்க.

வானிலை முன்னறிவிப்பை மக்கள் அதிகம் எதிர்பார்க்குறாங்கனு முகநூல் பக்கம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. விவசாயிகள் பலர் எப்போ மழை பெய்யும், அதிக வெயில் எப்ப இருக்கும், காத்து எப்படி வீசும்ங்கற கேள்விகளை அதிகம் கேட்ப்பாங்க. முதல்ல என்னோட பதிவுகளை ஆங்கிலத்துல மட்டுமே பதிவு  செஞ்சிட்டு வந்தேன். தமிழ்ல கொடுத்தா,  அதிகம் பேர் பயன்பெறுவாங்கன்னு பலர் சொன்னதுக்கு அப்புறம், வீடியோ வடிவுல தமிழல்ல முன்னறிவுப்புகளை சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு” என்றார்.

சரி, நடப்பாண்டு கோவையில் மழை எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, “கடந்த ஆண்டைப்போல, நடப்பாண்டு அதிக அளவு மழையை எதிர்பார்க்க முடியாது. சராசரியாக மழைப்பொழிவு இருக்கும்” என்கிறார் கோவையின்  வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்