மத்திய - மாநில அரசுகளின் நல்லுறவுக்கு பாடுபடுவேன்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேட்டி

கேரள மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நல்லுறவை போற்றும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்கும் என்று, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.

கேரளா மாநிலம் செல் வதற்காக, சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்த நீதிபதி பி.சதாசிவம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

கேரளா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பொதுத் துறை, தனியார் பெரு நிறுவனங்கள் உள்ளிட்டவை சட்ட ஆலோசகராக சேர்த்துக்கொள்ள முன்வந்தன. ஆனால், அதனை நான் ஏற்கவில்லை. சொந்த கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு வந்த வாய்ப்புகளுக்கு செல்லாததால்தான், கேரள மாநில ஆளுநர் பதவியை மத்திய அரசு எனக்கு அளித்திருக்கிறதோ என்று கருதுகிறேன். கடந்த 19 ஆண்டு காலம் நீதிபதியாக பணிபுரிந்த அனுபவம் மூலமாக, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவை போற்றும் வகையில் செயல்பாடுகள் இருக்கும்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடைய வழக்கில் சாதகமாக நடந்துகொண்டதால்தான் ஆளுநர் பதவி வழங்கப்படுவதாக காங்கிரஸ் கூறியுள்ளதே?

அந்த வழக்கு சட்ட விதிகளின்படியே மேற்கொள்ளப்பட்டது. சட்டத்தை மீறி அவ்வாறு சாதகமாக செயல்பட்டிருந்தால், அந்தப் பணியில் நான் எப்படி தொடர முடியும்? நீதிபதி பணி என்பது தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கக் கூடியது அல்ல; சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுதான் அமித்ஷா விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கு நடைபெற்றபோது, பாஜக தலைவராக அமித்ஷா வருவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு இருக்கும்போது, நான் எப்படி அவருக்கு சாதகமாக நடந்துகொண்டதாகக் கூற முடியும்.

ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருதரப்பினரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?

இதுவரை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஆளுநராக பதவி வகித்தது இல்லை; இதனால் அவர்கள் எதிர்க்கலாம். நான் முன்னர் கூறியதுபோல், நானாக இந்த பதவியை தேடிச் செல்லவில்லை. என் மீதான நல்லெண்ணத்தின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை தட்டிக் கழிக்காமல் ஏற்றுக்கொண்டேன். வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் மீண்டும் எனது விவசாய நிலத்தை கவனிக்கச் செல்கிறேன்’’ என்றார்.

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE