ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அவலம்;  எழுத்துப் பிழை, கருத்துப் பிழைகளுடன் புதுச்சேரியில் அமையும் வரலாற்று கல்வெட்டுகள்

By செ.ஞானபிரகாஷ்

ஸ்மார்ட்சிட்டி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நகரப்பகுதிகளில் வரலாற்றை அறிய வைக்கப்படும் கல்வெட்டுகள் எழுத்து மற்றும் கருத்துப் பிழைகளுடன் வைக்கப்படுவது முகம் சுளிக்க வைக்கிறது.

புதுச்சேரி நகரை அழகுபடுத்தவும், புதுச்சேரியில் உள்ள தெருக்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் கூடிய வகையில் ஒவ்வொரு தெருக்களிலும் அதன் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்கூறும் கல்வெட்டுகளைப் பதித்து வருகின்றனர். இந்த வரலாற்றுக் கல்வெட்டுகளில் தமிழில் ஏராளமான எழுத்து மற்றும் கருத்துப் பிழைகளுடன் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

குறிப்பாக கடற்கரை சாலையில் உள்ள கல்வெட்டில் பப்பா (பிரெஞ்சு மொழியில் அப்பா) குபேர்- பாப்பா குபேர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆவணக் காப்பகத்துக்கு ஒட்டியுள்ள கல்வெட்டில் தெருவின் பெயரையே தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆவணக் காப்பகம் உள்ள மாஹே லபோர்தெனே வீதியையும் அதிலுள்ள குறிப்புகளும் புதிதாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தவறாக உள்ளது.  இவ்வீதியை மாஹி தே லபூர்தோனே வீதி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பாண்டிச்சேரி என்பதற்குப் பதிலாக பண்டிச்சேரி என்றும் அதில் உள்ளது.

அதேபோல் புகழ் பெற்ற பிரெஞ்சு கல்வியாளரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய சகாவுமான ரோமன் ரோலண்ட் பெயர் கொண்ட வீதியே தவறாக கல்வெட்டில் அச்சிட்டுள்ளனர். ரோமேன் ரொலான் வீதி என்று குறிப்பிட்டுள்ளதுடன் கல்வெட்டு எங்கும் பிழைகள் பரவியுள்ளன. அதேபோல் சுய்ப்ரேன் வீதி கல்வெட்டிலும் ஏராளமான பிழைகள் உள்ளன.

புஸ்ஸி வீதியிலுள்ள கல்வெட்டுகளில் எழுத்துப் பிழைகளும் அமைந்துள்ளன. மதராஸில் என்பதற்குப் பதிலாக மதாரஸில் என்றும் மொழி பெயர்ப்புப் பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பான தகவல்களைக் குறிப்பிட்ட புதுச்சேரி அருங்காட்சியகத்தை நடத்தி வரும் அறிவன் கூறியதாவது:

''பாரதி, பாரதிதாசன் என தொடங்கி ஏராளமான புலவர்களுக்கு இங்கு சிலைகளுண்டு. ஆனால் தமிழ் அழிந்து வருகிறது.  புதுச்சேரியில் தமிழை இழிவுபடுத்துக்கின்றனர். தமிழ் மானம் கப்பலேறுகிறது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மலிவுப்பிழைகளை அதிகாரிகள் உருவாக்குகின்றனர். 

புதுச்சேரியை பாண்டிச்சேரி என்றும் பண்டிச்சேரி என்று கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளது தமிழே தெரியா அரைவேக்காட்டுத்தன அருவருப்பான செயல். பப்பா குபேர் என்று அழைக்கப்பட்ட புதுச்சேரியில் முதல் முதல்வரை பாப்பா குபேர் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள பிரெஞ்சு பெயர்ச் சொற்கள் பிழைகளுடன் உள்ளன. இது பிரெஞ்சியர்-தமிழர் உறவுக்கு நேரும் ஆபத்தின் தொடக்கக்காலம்.

பிரெஞ்சுத் தொடர்புகளைக் கூறும் இக்கல்வெட்டுகள் பிரெஞ்சு மொழியில் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வருத்தம் தருகிறது. இங்கு பிரான்ஸிலிருந்து வருவோர் இதை அறிய முடியாமல் போகிறது.

புதுச்சேரியின் மரபு அழிந்து வருகிறது. அழகான அமைப்பு அதன் நேரான தெருக்கள், தெருக்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் மட்டும் அமைந்திருக்கவில்லை. மக்களின் மனதோடு பிணைந்துள்ளது. தற்போதுள்ள பிழையான கல்வெட்டுகளை அகற்றி இனிவரும் காலங்களில் தமிழ் அறிஞர்களையும், வரலாற்று அறிஞர்களையும் கொண்டு ஒழுங்கான முறையில் இப்பணியைச் செய்ய வேண்டும்.

மொழியை இழந்து நாம் பிழைப்பை வளர்த்திட்டால் நம் பண்பாடு சீர்கெட்டு நமக்கான அடையாளங்கள் நம்மை விட்டுச் சென்றொழியும்''.

இவ்வாறு அறிவன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்