மும்பை நகரைத் தொடர்ந்து சென்னையில் முதல்முறையாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை அடுத்த 3 மாதங்களில் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் விரைவுப் பாதையில் ஏசி மின்சார ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இந்த தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஏசி ரயில் இயக்கத்தின் தேவை, அதிக மக்கள் பயணிக்கும் ரயில் நிலையங்களின் பட்டியலையும் அனுப்பியுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக மும்பையில் 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில்சேவை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் முதல்முறையாக ஏசி மின்சார ரயிலை இயக்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டுக்கான மின்சார ரயில் கால அட்டவணையில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பதுபோல், மாநகரின் எல்லையும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. பயணம் செய்வதற்கு மக்களின் முதல் தேர்வாக ரயில் போக்குவரத்து உள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார விரைவு ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து சென்னை கோட்ட உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, சென்னையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவை தொடங்குவது என முடிவெடுத்து ரயில்வே வாரியத்திடம் பரிந்துரை செய்துள்ளோம்.
அதில், மின்சார ஏசி ரயில் இயக்கத்தின் தேவை குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளோம். எனவே, வாரியத்திடமிருந்து விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும், இந்த ரயிலுக்கு குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தம் இருக்கும். இதேபோல், ஐசிஎப்-ல் ஏசி மின்சார ரயில்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுவதால், ஏசி ரயில் தொடர் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படாது. எனவே, அதிகபட்சமாக அடுத்த 3 மாதங்களில் சென்னையில் ஏசி மின்சார ரயில் ஓடும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ஐ.சி.எப் அதிகாரிகள் கூறும்போது, “சென்னை ஐசிஎப்-ல் ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பட்டு வருவது வழக்கமாக நிகழ்வுதான். ஆனால், இந்த ஏசி மின்சார ரயிலை சென்னையில் இயக்குவது குறித்து ரயில்வே வாரியம்தான் முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றனர்.
கட்டணம் எவ்வளவு?
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு முதல்வகுப்பு கட்டணமாக தற்போது ஒருவருக்கு ரூ.165 வசூலிக்கப்படுகிறது. இதுவே, மாதாந்திர பாஸ் வாங்கி பயன்படுத்தும்போது ஒருவருக்கு ரூ.1000 ஆக இருக்கும். இந்நிலையில் ஏசி ரயில்களில் முதல் வகுப்பு கட்டணத்தை விட ஒரு மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago