வருமான வரித்துறை வழக்கில் ஜெயலலிதாவின் தாமதமான முடிவு: கருணாநிதி கருத்து

வருமான வரித்துறை வழக்கில் துறை மூலமாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் முடிவை ஜெயலலிதா தாமதமாக எடுத்திருக் கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா மீது வருமான வரித்துறை தொடர்ந்த ஒரு வழக்கு, 18 ஆண்டுகளாக நீடித்து தற்போது முடிவுக்கு வரவுள்ளது. இந்நேரத்தில் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தட்சிணாமூர்த்தி கடுமையாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துறை மூலமாகவே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள மனு ஒன்றை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவிக்காததால், விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

18 ஆண்டுகளாக நடந்த வழக்கால் நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்டுள்ளனர். இந்த வழக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, அதன் பொன்னான நேரம் செலவழிக்கப்பட்டது. அப்போதே துறை வாயிலாக பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் கூறியிருக்கலாம்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE