தனித்துவமான முயற்சிகளால்சிகரம் தொடலாம்!- நம்பிக்கையூட்டும் சி.ஆர்.ஐ. சௌந்தரராஜன்

By த.செ.ஞானவேல்

எங்கள் தந்தை திடீரென்று மறையும்போது,  சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் ஆண்டு வருமானம்  1980-ல் ரூ.10 லட்சமாக இருந்தது. நாங்கள் நான்கு பேரும் பொறுப்பெடுத்து உழைக்கத் தொடங்கிய பிறகு, அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டு வருமானம் ரூ.4.30 கோடியாக உயர்ந்தது. 2000-ம் ஆண்டில் இது ரூ.77 கோடியாகவும், அதற்கடுத்த பத்தாண்டுகள் கழித்து 2010-ல் ரூ.648 கோடியாகவும் வர்த்தகம் உயர்ந்தது. 2020-ல் சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் ஆண்டு வர்த்தக இலக்கு ரூ.3,000 கோடி.  நான்கு சகோதரர்களின் கூட்டு உழைப்பும், இடைவிடாத புதிய முயற்சிகளுமே எங்களின் பலம்” என்கிற சௌந்தரராஜனின்  சிந்தனையில் தொலைநோக்குப் பார்வையும்,   சமூக அக்கறையும் இணைந்தே உள்ளது.

மோட்டார் பம்ப் தொழிலில் நாட்டின் முதல் நிறுவனமாகவும், ஆசியாவின் 5-வது பெரிய நிறுவனமாகவும் திகழும் சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் வெற்றிப் பின்னணியைத் தொடர்ந்தார்.

“விவசாயத்துக்கு தண்ணீர் தாய்ப்பால் போன்றது. லோ வோல்டேஜ் பிரச்சினை காரணமாக மோட்டார் பம்புகள் அடிக்கடி பழுதாகி,  பயிர்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டறிந்தால், சி.ஆர்.ஐ. நிறுவனத்துக்கு வேகமான வளர்ச்சி இருக்கும் என்று தோன்றியது.

லோ-வோல்டேஜ் மோட்டார் பம்ப்!

தம்பி ராஜேந்திரனிடம், `லோ-வோல்டேஜ் மோட்டார் பம்ப் தயாரிக்க நம்மால் முடியுமா?’  என்று கேட்டேன்.  எலெக்ட்ரிக்கல் துறையில் சிறந்த ஆளுமையாக விளங்கும் ராஜேந்திரன், தீவிர முயற்சியால் அதை சாதித்துக் காட்டினார்.  இந்தியாவிலேயே முதன்முறையாக சி.ஆர்.ஐ. லோ-வோல்டேஜ் மின்சார மோட்டாரை  அறிமுகப்படுத்தினோம். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆயிரம் நிறுவனங்கள் போட்டி போட்டாலும், தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டால், நாம் மார்க்கெட்டில் நிலைத்து நிற்கலாம் என்ற வெற்றியின் ரகசியம் பிடிபட்டது. அதற்குப் பிறகு, வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தீர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தினோம். சி.ஆர்.ஐ. என்ற மூன்றெழுத்துக்கு ‘கமிட்மென்ட், ரிலையபிலிட்டி, இன்னோவேஷன்’ என்று புதிய விளக்கத்தை வரையறை செய்தோம்.

விவசாயிகளின் ஆதரவு கிடைத்தவுடன்,  நிறுவனம் வேகமாக வளர்ந்தது.  கொஞ்ச நாட்களில் அடுத்த சவால் வந்து நின்றது. பருவமழையில் மாற்றம் ஏற்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையத் தொடங்கியது. 100 அடிக்குமேல் கிணற்றை ஆழப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. மழையின் அளவைப் பொறுத்து, கிணற்றில் நீரின் மட்டம் உயர்வதும், தாழ்வதுமாக நிலையில்லாமல் இருந்தது. ஒரே கிணற்றிலிருந்து நீர் இறைக்க,  மூன்று மோட்டார்கள் வரை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. இது அதிக செலவு பிடிப்பதாகவும், பராமரிப்பது சிக்கல் நிறைந்ததாகவும் இருந்தது.

நீரிலேயே மூழ்கியிருக்கும் மோட்டார்!

குறிப்பாக, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டப் பகுதிகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருந்தது. இதற்குத் தீர்வாக, நீரிலேயே மூழ்கி இருக்கும் மோட்டாரை கண்டுபிடித்தால், நீர்மட்டத்தின் அளவு மாறுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த காலமாற்றத்தின்  தேவையை உணர்ந்து,  தம்பி செல்வராஜ் சவாலை ஏற்றுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அவரை நாங்கள் செல்லமாக, அமைதிப் புயல் என்றே குறிப்பிடுவோம். அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரது  செயல் சிறப்பாக பேசும். இந்தியாவிலேயே முதன்முறையாக  துருப்பிடிக்காத `சி.ஆர்.ஐ. நீர்மூழ்கி  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்’  பம்புகளை  தம்பிகள் ராஜேந்திரனும், செல்வராஜும் உருவாக்கினர். அதன்பிறகு நிறுவனம் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இந்தியா முழுவதும் தொழிலை விரிவாக்கம் செய்தோம். மார்க்கெட்டிங் துறையில் கிடைத்த என்னுடைய அனுபவத்தை அப்படியே ஒரு ஃபார்முலாவாக மாற்றி, புதிதாக சேரும்  ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்த பிறகே, அவர்களை  களத்தில் இறக்கினோம்.

நாடு முழுவதும் சின்ன சின்ன நகரங்களில் கிளை அலுவலகங்களை அமைத்து, வேலைக்கு ஆட்களை நியமித்தோம்.

மாரத்தான் ஓட்டம்!

எந்தவிதமான தொழிலும் ஒரு மாரத்தான் ஓட்டம் போன்றது. ஓடத் தொடங்கி விட்டாலே வெற்றி கிடைத்துவிடாது. இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பட்ட இலக்கை அடைந்துவிட்டோம் என்று சொல்லும்போதே,  புதிய இலக்கு உருவாகிவிடும்.

ஐரோப்பிய நாடுகளில் நடந்த தொழில்முறை கண்காட்சிக்குப் போனபோது,  நாங்கள் எங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம். இந்தியஅளவில் தரமான பம்புகள் எனப் பெயர் பெற்றிருந்தாலும், சர்வதேச தரத்தை ஒப்பிடும்போது  நாங்கள் பல படிகள் பின்னோக்கி இருந்தோம். இந்தியாவில்  சர்வதேச தரத்தில் மோட்டார்களை உற்பத்தி செய்யவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்ப நிறுவன கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினோம்.

கணினிமயமான நிறுவனம்!

சி.ஆர்.ஐ. என்ற பெயரை மக்கள் அனைவரின் மனதிலும் பதியவைக்க முடிவெடுத்தோம்.  இந்திய மோட்டார் பம்ப் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிட்டது சி.ஆர்.ஐ. நிறுவனம்.

அதேபோல, எங்கள் கிளை அலுவலகங்களை கணினிமையப்படுத்தி, வர்த்தக கணக்குகளை வெளிப்படையாக்கினோம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த நிறுவனத்தையும்  கணினிமயமாக்க ஒரு தனித் துறையை ஏற்படுத்தியது புதிய முயற்சி.  வெளிநாட்டு பொருட்கள் எல்லாம் மேட் இன் அமெரிக்கா, மேட் இன் ஜப்பான், மேட் இன் ஜெர்மனி என்று இந்தியாவில் விற்பனை ஆகும்போது, மேட் இன் இந்தியா என்று எங்கள் பிராண்டில் பெருமையுடன் பொறித்து, எங்கள் தயாரிப்புகளை வெளிநாடுகளில் விற்பனை செய்யவேண்டும் என்று விரும்பினோம். அதற்கு நிறைய விலைகொடுக்க வேண்டியிருந்தது.

முதலில், வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் வர்த்தகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டோம். அதிக அளவு இந்திய வம்சாவழியினர் வாழ்கிற நாட்டில்  சி.ஆர்.ஐ. நிறுவனப் பொருட்களை விற்பனை செய்யும் ஆரம்ப முயற்சிகளில்  பின்னடைவுகளே ஏற்பட்டன. அலுவலகம் இரண்டு முறை உள்ளூர் ஆட்களால் சூறையாடப்பட்டது. ஏற்றுமதி தொழில் நமக்கு ஒத்துவருமா? என்று குழப்பம் உருவானது.

120 நாடுகளில் சி.ஆர்.ஐ...

சொந்த ஊரிலேயே பத்தாண்டுகளுக்கு மேல் போராடித்தான் தொழிலை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. சம்பந்தம் இல்லாத நாட்டில் தொழில் தொடங்கியதுமே, பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு என்று உணர்ந்தோம்.  எந்த சோதனை வந்தாலும், அந்த நாட்டில் வெற்றிகரமாக தொழில் செய்வதுவரை நிலைத்து நின்றுப்  போராடுவது என்று உறுதியுடன் இருந்தோம். இன்று 120 நாடுகளில் வெற்றிகரமாக, ‘மேட் இன் இந்தியா’ என்ற அடையாளத்துடன் சி.ஆர்.ஐ. நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்ய, எங்களின் இந்த மன உறுதிதான் முக்கியக்  காரணம்.

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பல நிறுவனங்கள், எங்களுடைய தயாரிப்புகளை, அவர்களுடைய பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய முன்வந்தன. பெரும்பாலான  துறையிலும் ஏற்றுமதி என்றால் இதுதான் நடைமுறை. ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் சி.ஆர்.ஐ என்ற அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்று தீர்மானமாக இருந்தோம். அதனால் தொழில் வளர்ச்சிக்கான பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறோம். சி.ஆர்.ஐ. பிராண்டில் மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்ததால், ஸ்பெயினில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளும், பிரேசில் நாட்டில் எட்டு ஆண்டுகளும் தொடர் நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் சமரசம் செய்துகொள்ளவில்லை.

சீனாவுக்கே பம்ப் விற்பனை!

சவால்களை எதிர்கொண்டு நிலைத்து நின்ற பிறகு, வெளிநாடுகளிலும் வெற்றி பெற முடிந்தது. சீனத் தயாரிப்புகள்  இந்தியாவில் செலுத்துகிற ஆதிக்கம் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த சீனாவிலேயே ‘சி.ஆர்.ஐ’ என்ற இந்திய பிராண்டின் பெயர் பொறித்து,  பெருமிதமாக  விற்பனை செய்கிறோம்.

உலகம் முழுவதும் 21 உற்பத்திக் கூடங்கள், 120 நாடுகளில்  20,000 விற்பனை மையங்கள், 1,500 சர்வீஸ் சென்டர்கள், 12 நாடுகளில் துணை நிறுவனங்கள்  என சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் வேர் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. பல்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் 9,000 வகையான மாடல்களில் சி.ஆர்.ஐ. பம்புகள் இருக்கின்றன.

சி.ஆர்.ஐ. ஆப்....

வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து சரியான பம்புகளை தேர்வு செய்வதற்காக, நாடு முழுவதும் இரண்டு லட்சம் மெக்கானிக் வேலை செய்கிறவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறோம். எங்கள் நிறுவனத்  தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க சிறப்பு செயலியாக ‘சி.ஆர்.ஐ. ஆப்’ உருவாக்கி இருக்கிறோம்.

2010 எங்களுக்கு முக்கியமான வருடமாக மாறியது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டமிடலில்,  மிக முக்கியமான முடிவுகளை எடுத்தோம். அதுவரை விவசாயம், வீட்டு உபயோக பம்புகள் மட்டுமே தயாரித்து வந்தோம்.  தண்ணீர் தொடர்பான மோட்டார் பம்ப் உற்பத்தியைக்  கடந்து,  திரவ நிலையில் இருக்கிற எதையும் திறமுடனும், தரமுடனும் உறிஞ்சுகிற மோட்டார் பம்புகளைத் தயாரிக்கத்  தொடங்கினோம்.

வெளிநாட்டு நிறுவனங்கள்...

கெமிக்கல், உணவகம், சுரங்கம், எண்ணெய், எரிவாயு, தீயணைப்பு, கடற்படை, ராணுவம், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பல துறைகளில் தடம் பதித்தோம்.  இதற்காக  பல ஆண்டுகால அனுபவம் கொண்ட,  இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாட்டில் இயங்கிய புகழ் பெற்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கினோம். புதிதாக கண்டுபிடிப்பில் இறங்கி காலத்தை வீணாக்காமல், அனுபவம் உள்ள நிறுவனங்களை  கையகப்படுத்தியதன் மூலம்  விரைவான வளர்ச்சியை அடைந்தோம்.

மோட்டார் பம்ப் கருவி,  திரவ நிலையில் இருப்பதை உறிஞ்சுவதற்கும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அந்த திரவத்தை இடம்மாற்றவும் பயன்படுகிறது. மோட்டார் பம்ப் உற்பத்தியுடன் நின்றுவிடாமல், அந்த குறிப்பிட்ட திரவத்தை இடம் மாற்றத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்வது என்ற அடுத்த அதிரடி முடிவை எடுத்தோம்.  இதை ‘சொல்யூஷன் ப்ரவைடிங்’ என்று குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக, வீட்டின் குளியலறைக்கு நீர் வர வேண்டுமானால், மோட்டார் பம்ப் மூலமாக நீரை ஏற்றவும், வீட்டில் தேவையான இடங்களுக்கு அதை கொண்டு செல்லவும் பைப்புகள், வால்வுகள், மின்சார கேபிள்கள் என பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. திரவ நிலையில் உள்ள எதையும் வாடிக்கையாளர்களின் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுசெல்ல, முதலிலிருந்து முடிவு வரை  பயன்படும்  அனைத்தையும் சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் மூலம் தயாரிக்கத் தொடங்கினோம். இதன்மூலம் எங்கள் விற்பனை சந்தை பலமடங்கு விரிவடைந்தது. இதற்காக ரிஸ்க் எடுத்து, பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்தோம்.

புதிய முயற்சிகளுக்கு 20  சதவீதம்!

இப்படி ஆண்டு வருமானத்தில் 20 சதவீதமாவது, எங்களது புதிய முயற்சிகளிலிருந்து கிடைக்க வேண்டும் என்பதை, நிறுவனக்  கொள்கையாகவே வகுத்துச் செயல்படுகிறோம். அதிக அளவில் மின் சேமிப்பு செய்யவல்ல, 12 லட்சம் ஸ்டார் ரேட்டட் பம்புகளை உருவாக்கி,  நாட்டுக்கு சுமார் ரூ.5,000 கோடி மின் செலவை சேமித்திருக்கிறோம். 

அடுத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார்கள் தயாரிப்பு, சிம்கார்டு பயன்படுத்தி, வைஃபை தொழில்நுட்பத்துடன் இயங்கும் எலெக்ட்ரானிக் மோட்டார் உற்பத்தி  என புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வெற்றியடைந்தோம். வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிற எங்களின் தேடல், இன்னும் விரிவாகிக் கொண்டே இருக்கிறது. சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் வர்த்தக வெற்றியை அங்கீகரித்து, மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி இருக்கின்றன.

சமூக மாற்றத்தில் பங்கு!  

நாம் அடைகிற வெற்றியில் சமூகத்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. சி.ஆர்.ஐ. நிறுவனம் மூலம் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும்,  உண்மையான சமூக மாற்றத்துக்காகவே வழங்குகிறோம்.

ஆண்டுதோறும் இயற்கை முறையில் விவசாயம் செய்கிற உழவர்களை, தமிழகம் உட்பட ஐந்து மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் தேர்ந்தெடுத்து, ‘விவசாய செம்மல்’ விருது வழங்குகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க அனைத்து வசதிகளையும் உருவாக்கித் தந்திருக்கிறோம். இதுவரை 30,000-க்கும்  மேற்பட்ட  அரசுப் பள்ளி மாணவர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.

சி.ஆர்.ஐ. நிறுவனம் சார்பில் 100 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். சுகாதார விழிப்புணர்வு மேம்படவும், பெண்கள் விளையாட்டை ஊக்கப்படுத்தவும் நிறுவனம் சார்பில் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

எரியூட்டு தகன மையம்!

கோவை மாநகராட்சியுடன் இணைந்து சரவணம்பட்டி பகுதியில் சுகாதாரமான,  திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். கோவையில் மக்கள் பயன்பாட்டுக்காக அதிநவீன எரியூட்டு தகன மையம் மற்றும் 300 கழிப்பிடங்களுக்கு மேல்  நிறுவி இருக்கிறோம். மேலும், கோவையில் மக்கள் பயன்பாட்டுக்காக, லாப நோக்கம் இல்லாத ஒரு மருத்துவ மையத்தை நடத்துகிறோம். ரூ.30 கட்டணத்தில்,  சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். அங்கு மருத்துவப்  பரிசோதனைகளை பாதி கட்டணத்தில் மேற்கொள்ளலாம்.

நவீன மருத்துவமனை கனவு!

ஏறத்தாழ 600 வகையான அத்தியாவசிய மருந்துகளை, ஏழை மக்கள் பயன்படும் வகையில் மிகக் குறைந்த விலையில் வழங்குகிறோம். இந்த மருத்துவ மையம் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இதில் பற்றாக்குறை ஏற்படும் நிதியை, ஒவ்வொரு மாதமும் நிறுவனம் சார்பாக வழங்குகிறோம். விரைவில்,  சி.ஆர்.ஐ. நிறுவனம் சார்பில், ஏழை மக்களுக்கான ஒரு நவீன மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்பதே  எங்களது கனவு. அதற்காக 30 ஏக்கரில் இடத்தையும் வாங்கிவிட்டோம்” என்கிறார் உற்சாகத்துடன் சௌந்தரராஜன்.

காலம் தரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி, காலம் உருவாக்குகிற மாற்றத்தை துல்லியமாக உள்வாங்கி வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது சி.ஆர்.ஐ. நிறுவனம். வேகம் குறையாமல் சரியான திசையில் அந்தப் பயணம் தொடர, கடுமையாக உழைக்கின்றனர் நான்கு சகோதரர்கள். அவர்களது  எண்ணங்களைப் போலவே,  சாதனைகளும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்