ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் விவசாயியின் வியர்வைத் துளிகள் கலந்திருக்கும். ஆனால், இப்போதெல்லாம் வியர்வைத் துளிகளைக் காட்டிலும், கண்ணீர்த் துளிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஒரு பயிரை சாகுபடி செய்து, வெள்ளாமை எடுத்து, அதை விற்றுப் பணமாக்குவதற்குள் விவசாயி பாடாய்ப்படுகிறார்.
இப்படி பாடுபட்டு விளைந்த வாழை மரங்கள், சூறாவளிக் காற்றில் கொத்துக்கொத்தாய் முறிந்து சேதமடைவதாலும், அரசுத் தரப்பில் வழங்கப்படும் இழப்பீடு மிகக் குறைவு என்பதாலும் தவித்து வருகின்றனர் விவசாயிகள். இயற்கை பேரிடர் மற்றும் வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு, அரசுத் சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவு என்றும், இதனால் விவசாயத்தை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் வாழை விவசாயிகள்.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளையும் நேந்திரன், கதளி, செவ்வாழை, ரோபஸ்டா போன்ற வாழை ரகங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இப்பகுதிகளில் அவ்வப்போது வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி, லட்சக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. ஓராண்டுப் பயிரான வாழை மரங்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், முற்றிலும் சாய்ந்து விட்டன.
ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டது முதல், அதை அறுவடை செய்யும்வரை ரூ.2 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், சூறாவளிபோன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் 100 சதவீதம் முழுமையாக சேதமடைந்த பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் 5.7 சதவீதமும், வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு வனத் துறை சார்பில் ரூ.22.5 சதவீதமும் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
அரசின் இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவானது என்று தெரிவிக்கும் வாழை விவசாயிகள், இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை வைத்துக்கொண்டு, சாய்ந்துபோன வாழை மரங்களை அப்புறப்படுத்தி, நிலத்தை சீரமைக்கவே போதாது என்பதால், மீண்டும் அடுத்தகட்டமாக விவசாயத்தை தொடர இயலாத சூழலுக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளைப் பாதுகாக்க, இதுபோன்ற சேதங்களுக்கு 75 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, பவானி நதிநீர் பாதுகாப்புக் குழுத் தலைவர் டி.டி.அரங்கசாமி கூறும்போது, “கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள இரும்பறை, இழுப்பநத்தம், சிறுமுகை கிராமங்களில் சூறாவளிக் காற்றால் ஏறத்தாழ 2 லட்சம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுத்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மூலம், ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த அடிப்படையில் ஒரு மரத்துக்கு ரூ.5 மட்டுமே நஷ்டஈடு கிடைக்கும். தோட்டத்தில் முறிந்து விழுந்த வாழையை அகற்ற வேண்டுமென்றாலே, ஒரு வாழைக்கு ரூ.10-க்கு மேல் செலவாகும். மேலும், வாழை பயிரிடுவதற்கு நிலத்தைப் பண்படுத்தி, நாற்றை நடவே ரூ.25 செலவாகும். வாழையைப் பாதுகாத்து, பராமரித்து, உரம் உள்ளிட்ட செலவுகளுடன் ஒரு வாழைக்கு ரூ.150 செலவாகிறது. எனவே, குறைந்தபட்சம் ஒரு வாழைக்கு நூறு ரூபாயாவது இழப்பீடு வழங்க வேண்டும்.
இதேபோல, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், பகுதி வாரியாக கணக்கிட்டு, நஷ்டஈடு வழங்குகின்றனர்.
இதனால், மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகையே கிடைக்கிறது. எனவே, தனிப்பட்ட விவசாயியைக் கணக்கெடுத்து, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனித்தனியே நஷ்டஈடு கணக்கிட்டு, வழங்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் முதலீட்டுத் தொகையில் 75 சதவீதமாவது நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago