மீண்டும் பள்ளிக்கு போகலாம்... மறுமலர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள்!

By ஆர்.டி.சிவசங்கர்

அன்னைத் தமிழும் பாழ் அல்ல; அரசுப் பள்ளியும் பாழ் அல்ல, அறியா மனமே பாழ் என்பார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பாடத் திட்டம் தொடங்கப்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் மறுமலர்ச்சி பெறுகின்றன அரசுப் பள்ளிகள். இதன் மூலம் கிராமப்  பொருளாதாரமும் உயர்வது ஆச்சரியமான உண்மை.

நீலகிரி மாவட்டம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டம் என்பதால், குழந்தைகளின் கல்விக்கு அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கின்றனர் பெரும்பாலான பெற்றோர். இம்மாவட்டத்தில் 153 அரசுப் பள்ளிகள் உள்ளன.  இதில், சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஆங்கில வழிக் கல்வி மோகத்தால், மாணவர்களை நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனர். இதனால், கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இல்லாததால், மூடப்பட்டன.

மாணவர்களின் கல்வித் தரம் உயர வேண்டும் என்று கருதி தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர், கல்விக்  கட்டணத்துக்காக அதிகம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 பெரும்பாலான பெற்றோர்,  விவசாயக் கூலிகளாவும், தினக் கூலிகளாகவும் இருப்பதால், கடன் வாங்கும் சூழலுக்குத்  தள்ளப்பட்டனர். இதனால் கந்து வட்டி மற்றும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களிடம்  சிக்கிப் பரிதவித்தனர். இந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்,  அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், பல கிராமங்களில் தனியார் பள்ளிகளில் இருந்த மாணவர்களை, பெற்றோர் மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்த்தனர்.

மேலும், அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஏராளமான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகள் மறுமலர்ச்சி பெற்றுவருவதாகத் தெரிவிக்கிறார், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கப்  பிரச்சாரம் செய்து வரும் தன்னார்வலரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான சு.மனோகரன்.

“அரசுப் பள்ளிகளை மீட்டெடுப்பது அவசியமாகும். 1856-ம் ஆண்டிலேயே நீலகிரி மாவட்டத்தில் வசித்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க பள்ளிக்கூடம் திறக்க வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை வலியுறுத்தினர்.

 அதிகரட்டி, தூனேரி உட்பட 3 கிராமங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பல கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்ட இடம் வழங்கியதுடன், கிராம மக்களே கட்டிடம் கட்டிக் கொடுத்தனர்.

காலப்போக்கில் தனியார் பள்ளிகள் பெருகியதன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து, ஒவ்வொரு பள்ளியாக மூடப்பட்டன. தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர், கல்விக் கட்டணத்துக்காக கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிக்கொண்டு, கடனாளிகளாக மாறினர்.

ஒன்னதலைப் பள்ளி...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள ஒன்னதலைப் பள்ளி, மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் மூடப்பட்டது.  இப்பள்ளியில் பயின்று, வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நாராயணமூர்த்தி என்ற மாணவர், பள்ளி மூடப்பட்டதையறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்.  அவர்,  தனது சொந்த முயற்சியால், கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோரிடம் பேசினார். மேலும், கல்வித் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு, தனது சொந்த பணம் மற்றும் கிராமத்தினரின் பங்களிப்புடன் அரசுப் பள்ளியை சீரமைத்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்னதலைப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 45 மாணவர்களுடன் செயல்படத் தொடங்கிய அந்தப் பள்ளியில் தற்போது 70 மாணவர்கள் பயில்கின்றனர். பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அணிக்கொரை, மணிய ஹட்டி, அதிகரட்டி, தாம்பட்டி கிராமங்களில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

தனியார் பள்ளிக்குச்  செல்லும் குழந்தைகள்,  காலை நேரத்தில் சாப்பிடுவதில்லை. இதனால், அவர்களது உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவ, மாணவிகள் நீண்ட தொலைவு வாகனங்களில் பயணம் செய்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளதால், மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு பெற்றோரின் அறியாமைதான் காரணம். இதுமட்டுமின்றி, பொருளாதார ரீதியாக பெற்றோர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தற்போது மக்களிடம் அரசுப் பள்ளிகள் குறித்த  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கதக்கது” என்றார்.

அரசுப் பள்ளியால் ரூ.50 லட்சம் சேமிப்பு!

நான்கு மாணவர்களுடன் செயல்பட்டு வந்த இடுஹட்டி பள்ளியை மூடுவதாக கல்வித் துறை அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இடுஹட்டி மக்கள்,  பள்ளியை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் அழைத்துப்பேசி, வெளியூர் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை,  அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.

கிராமம் சார்பில் 5 ஆசிரியர்களை நியமித்துள்ளனர். கிராமத்தில் உள்ள 100 குழந்தைகளையும் அப்பள்ளியில் சேர்த்து,  பள்ளிக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் கிராம மக்களே வாங்கிக்  கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்க்கவும்  முடிவு செய்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதால், கிராமத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக இடுஹட்டி ஊர் தலைவர் எம்.பெள்ளி கூறுகிறார். “கடந்த ஓராண்டில் மட்டும், தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.50 லட்சத்தை மீதப்படுத்தியுள்ளோம். இதனால், கடன் வாங்கி கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து மக்கள் விடுபட்டு, நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். மேலும், குழந்தைகள் உள்ளூர் கிராமத்திலேயே,  கலாச்சாரத்துடனும், ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியான மன நிலையிலும் உற்சாகமாகப் பயில்கின்றனர்”  என்றார்.

இதேபோல, மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, நஞ்சநாடு கிராம மக்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து, ரூ.1 கோடி வரை சேமித்துள்ளதாக பெருமிதம் கொள்கின்றனர்.

பி.டி.ஏ. உயிர்கொடுத்த அதிகரட்டி பள்ளி!

நீலகிரி மாவட்டத்தில் 1832-ல் தொடங்கப்பட்ட 4 பள்ளிகளில், அதிகரட்டி ஊராட்சி ஒன்றியத்  தொடக்கப் பள்ளியும் ஒன்றாகும்.  தங்களுக்கு கல்வி அளித்த பள்ளி மூடப்படுவதைத் தடுக்க, பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் களமிறங்கியது. இதன்  பயனாக, தற்போது இப்பள்ளியில் 140 மாணவர்கள் படிக்கின்றனர்.  மூடப்படும் நிலையிலிருந்த பள்ளிக்கு உயிரூட்டியுள்ளது பெற்றோர்-ஆசிரியர் கழகம்.

இங்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக,  மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி. சீருடை, புத்தகங்கள், கணினி பயிற்சி, வாகன வசதி, சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. மக்களிடம் அரசுப் பள்ளி தொடர்பான  விழிப்புணர்வு தொடர வேண்டும். அப்போதுதான், அரசுப் பள்ளிகள் மூடப்படுவது தவிர்க்கப்பட்டு, கிராமப் பொருளாதாரம் உயர்வதுடன், மாணவர்களின் கல்வித் தரமும் மேம்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்