அக்.2 ல் மதுவிலக்கு பிரச்சார பாதயாத்திரை: தமிழருவி மணியன் அறிவிப்பு

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் கோவையிலிருந்து சென்னை வரை 100 கிராமங்களுக்கு பாதயாத்திரையாகச் சென்று மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய உள்ளதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை மேயர் பதவிக்கு எங்கள் இயக்கம் சார்பில் டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளையும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு முத்துக்குமரனும் போட்டியிடுகின்றனர்.

கோவையில் 6 வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் வீதம் அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற நினைக்கின்றனர். ஆனால், அதையும் மீறி காந்திய மக்கள் இயக்கம் நிச்சயம் வெற்றிபெறும்.

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக கூட அமல்படுத்தலாம். முதலில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை 5 மணி நேரமாக குறைக்கலாம். பொது இடத்தில் மது அருந்துவதை தடை செய்வதுடன் பார்களையும் மூட வேண்டும். 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க கூடாது என படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தினால், 2016 தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

தமிழக அமைச்சரவையில் 16-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இது ஜனநாயக கேலிக்கூத்து. ஒருவரை அமைச்சரவையிலிருந்தும் நீக்கும்போதும் மீண்டும் சேர்க்கும்போதும் அதற்கான காரணத்தை வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே.வாசன் வெளியேறி மீண்டும் தமாகாவையோ, புதிய கட்சியோ தொடங்கினால் அவருடன் கூட்டு சேர்ந்து களமாட தயாராக உள்ளோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மோடி அரசு சரியான பாதையில் செல்லவில்லை. ஊழல், லஞ்ச லாவண்யத்துக்கு எதிராக காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்து போராடும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE