ஏரின்றி அமையாது உலகு...விவசாயிகளை ஒருங்கிணைக்கும் கூட்டுப்பண்ணையம்!

By எஸ்.கோவிந்தராஜ்

விவசாயிகள் மத்தியிலும், வேளாண்மைத் துறையினரிடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘கூட்டுப் பண்ணையம்’ என்ற சொல் அதிகமாகப்  பரவி வருகிறது. பொதுவாக ‘பண்ணையம்’ என்ற சொல் கொங்கு மாவட்ட வட்டாரங்களில் விவசாயம் செய்வதைக் குறிக்கும். கூட்டுப் பண்ணையம் என்பது பலர் கூட்டாகச் சேர்ந்து விவசாயத்தை மேற்கொள்வதைக் குறிப்பதாகும். ஒரே குடும்பமாக இருந்தாலும்,  அண்ணன், தம்பிகள் கூட்டாக வேளாண் தொழிலை செய்வது கடந்த காலங்களில் நடந்து வந்தது. ஆனால், மொத்த குடும்பமும் விவசாயப் பணியில் ஈடுபடுவது என்பது தற்போது அரிதாகிவிட்டது.

வறட்சி, இடுபொருட்களின் விலை உயர்வு என பல நெருக்கடிகளில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிக்கு, அவரது விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. அழியும் தன்மை கொண்ட தானியம், பயறு, காய்கள், கனிகள், மலர்களை விவசாயிகள் சேமித்து வைக்கவும் முடியாமல், பதப்படுத்தவும் இயலாமல்போவதால் கேட்ட விலைக்கே விற்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

விளைபொருட்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதை விட, முகவர்களிடம் வாங்குவதையே விரும்புகின்றன.

இந்த நிலையில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து,  சந்தையில் அதிகம் விரும்பப்படும் பயிர் ரகத்தை, அதிக பரப்பில் ஒரே சமயத்தில் பயிரிட்டு, தரம் பிரித்து, அதிக அளவு விற்பனைக்குத் தயார் செய்தால் மட்டுமே,  தொழிற்சாலைகளோடும், பெருநிறுவனங்களோடும் நேரடி வணிகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்கு உதவும் வகையில், குடும்ப அளவில் இருந்த கூட்டுப்பண்ணையம் முறைக்கு  உயிர் கொடுத்து, விவசாயிகளை ஒன்றிணைத்து,  கூட்டுப் பண்ணையம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது வேளாண்மைத் துறை.

தமிழக அரசால் தொடங்கப்பட்ட கூட்டுப்பண்ணையம்  திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டிலேயே சென்னை மாவட்டம் தவிர 31 மாவட்டங்களில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 2 லட்சம் விவசாயிகள் இதில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர். அதற்கு மூலதன நிதியாக ரூ.100 கோடி  வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பண்ணைக் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2018-19-ம் ஆண்டில் மேலும் 2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கட்டமைக்கப்பட்டு, அதிலும் 2 லட்சம் விவசாயிகள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடைமுறைப்படுத்திய வேளாண்மைத் துறைத் திட்டங்களில், நான்கு லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டி சாதனை படைத்திருக்கிறது கூட்டுப் பண்ணையம் திட்டம்.

இந்த திட்டம், விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் ‘ஏர்முனை கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனம்’  சான்றாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில்  2017-18-ல் வேளாண்மைத் துறை மூலம் கோபி, நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரங்களை உள்ளடக்கி, 900 விவசாயிகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதுதான் ‘ஏர்முனை கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனம்’.

இந்த நிறுவனத்துக்கு ரூ.45 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களும், ரூ.10 லட்சம் மானியத்தில் மதிப்புக் கூட்டும் பொருள் உற்பத்திக் கருவிகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.

கோபி அருகே உள்ள போடிசின்னாம்பாளையத்தில் 1000 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு வளாகத்தில், இந்த நிறுவனத்துக்கு  அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை,கடலை எண்ணெய், நிலக்கடலைப் பருப்பு உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்து, விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டி.பாபுவை சந்தித்தோம். “900 விவசாயப் பங்குதாரர்களைக் கொண்ட ‘ஏர்முனை’ நிறுவனம், தமிழக அரசின் மானியம் மூலம் பல்வேறு இயந்திரங்களைப் பெற்றதுடன், நிலக்கடலை விதைகளை இருப்புவைத்து விநியோகிப்பது, சத்துமாவு தயாரித்து விநியோகிப்பது ஆகியவற்றை மேற்கொள்கிறது.

அடுத்த ஆண்டில் கோபி வட்டாரம் நாதிபாளையம் கிராமத்தில் அமைய உள்ள நெல் வணிக வளாகத்தில், அரசு மானியத்தில் 300 டன் கொள்ளளவு கொண்ட விதை சுத்திகரிப்பு நிலையம், ரூ.1 கோடி மானியத்தில் ‘வெர்ஜின்’ தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த நிறுவனத்திற்கான தலைமை செயல் அலுவலருக்கான மாத ஊதியம் ரூ.33 ஆயிரத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு அரசே வழங்குகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.82 ஆயிரம் அலுவலக வாடகையையும் அரசே அளிக்கிறது. நிறுவனம் பதிவு செய்து ஓராண்டு முடிந்ததும், இதன் செயல்பாடுகளைப் பொறுத்து, இணை பங்கு நிதியாக ரூ.15 லட்சமும், தொழில் வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சமும் அரசே வழங்குகிறது.

கோபிசெட்டிபாளையத்தில் ‘ஏர்முனை’ நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முக்கியக்  காரணமாக இருந்த, கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறும்போது, “கடந்த 2017-18-ல் கூட்டுப் பண்ணையம் திட்டம் தொடங்கியபோது, விவசாயிகளிடம் இதற்கு வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. கிராமங்களில் பகலில் கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக, அதிகம் பேர் கூடும் வகையில் இரவில் விவசாயிகளைச் சந்தித்தோம்.

இரவு 7 மணிக்குத் தொடங்கி 11 மணி வரையிலும் நடக்கும் கூட்டத்தில், கூட்டுப் பண்ணையம் என்றால் என்ன என்று விளக்கினோம். விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக ரூ.500 முதல் ஆயிரம் வரை வழங்க வேண்டியிருப்பதால், அதன் தேவை குறித்தும் விளக்கினோம். இன்று ‘ஏர்முனை’ நிறுவனம் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. இந்த ஆண்டில் கோபி வட்டாரத்துக்காக தனியாக ஒரு உழவர் உற்பத்தி நிறுவனம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.

ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வ.குணசேகரன் கூறும்போது, “2017-18-ம் ஆண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் 225 உழவர் ஆர்வலர் குழுக்களும், 45 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு, ரூ.2.25 கோடி மானியத்தில் 261 பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘ஏர்முனை’ மற்றும் ‘நவரத்னா’ உள்ளிட்ட மூன்று உழவர் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மொத்தம் 4,500 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். அதேபோல,  2018-19-ல் 220 உழவர் ஆர்வலர் குழுக்களும், 44 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டு, ரூ.2.20 கோடி மானியத்தில் 212 பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,400 விவசாயிகள் இதில் இணைந்துள்ளனர். இந்த ஆண்டிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்