ரூ.50 லட்சம் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: மர்ம கும்பலைப் பிடிக்க தனிப் படை

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை அருகே ரூ.50 லட்சம் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம கும்பல் கடத்திச் சென்றது.

வாலாஜா தேசாய் தெருவைச் சேர்ந்தவர் கோபி (54). ரியல் எஸ்டேட் மற்றும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு ஆற்காட்டில் உள்ள ஃபைனான்ஸ் அலுவலகத்தை மூடிவிட்டு ராணிப்பேட்டையில் உள்ள நண்பரைச் சந்திக்க சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து முத்துக்கடை வழியாக வாலாஜா நோக்கி இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அலுவலகப் பெண் ஊழியர் ஒருவர் கோபியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். திடீரென அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண் ஊழியர், கோபியின் நண்பரான ஏழுமலையிடம் தகவல் தெரிவித்துள்ளார். இணைப்பு துண்டித்ததால் விபத்து நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் கோபியின் தம்பி ராஜு மற்றும் ஏழுமலை ஆகியோர் மருத்துவமனைகளில் தேடிப்பார்த்துள்ளனர்.

இதற்கிடையில், ராஜுவின் செல்போன் எண்ணுக்கு கோபியின் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய கோபி, ‘‘என்னை ஒரு கும்பல் கடத்திவிட்டது. அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிடு’’ என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அதே எண்ணில் இருந்து பேசிய மர்ம நபர் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்டுள்ளனர்.

என்னிடம் ரூ.5 லட்சம் தயாராக இருக்கிறது என ராஜு கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் ரூ.50 லட்சம் பணம் வேண்டும். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

கடத்தல் கும்பலைப் பிடிக்க, சென்னைக்கு ஒரு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE