தமிழகத்தில் தனியார் மகளிர் விடுதிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கடந்த 2 மாதங்களில் 10 விடுதிகள் மூடப்பட்டுள்ளன. 7 மகளிர் விடுதிகள், ஆண்கள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவையான சட்டதிருத்தம் செய்யாவிட்டால் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று மகளிர் விடுதிகள் நடத்துவோர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உரிமம் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல், முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் ஏராளமான தனியார் மகளிர் விடுதிகள் செயல்படுவதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மகளிர் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தை (2014) அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேயிங் கெஸ்ட்
தமிழகத்தில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 500 மகளிர் விடுதிகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தங்கியுள்ளனர். மகளிர் விடுதிகள், ஆண்கள் விடுதிகள், ‘பேயிங் கெஸ்ட்’, ஆண்கள், பெண்கள் அடுத்தடுத்த அறைகளில் தங்கும் விடுதிகள் என பலவகையான விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் சேர்த்து மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வரை வசூ லிக்கின்றனர். சொகுசு மகளிர் விடுதிகளில் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
சென்னை சூளைமேடு, மேத்தாநகர் மகளிர் விடுதிகளில் எழும்பூர், நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ளனர். ஈக்காட்டுத்தாங்கல், சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் விடுதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். அண்ணாநகரில் உள்ள மகளிர் விடுதிகளில் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள் அதிகமாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும் பாலான பெண்கள் 21 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கண்ட சட்டத்தின்படி உரிமம் பெற்று மகளிர் விடுதிகளை நடத்த வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். “சென்னை மாவட்டத்தில் இதுவரை 1,046 மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 7 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 48 விடுதிகளுக்கு தற்காலிக அனுமதி தரப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு (மே 27) வந்தபிறகு உரிமம் பெறாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மகளிர் விடுதி உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “மேற்கண்ட சட்டம் தனியார் மகளிர் விடுதிகளில் உள்ள பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நாங்களும் விடுதி நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். மேலும், இச்சட்டத்தைக் கொண்டு அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் மிரட்டும் போக்கு அதிகரித்துள்ளது. ‘கவனித்தால்’ மட்டும் காரியம் நடக்கிறது. அதனால் தொடர்ந்து விடுதிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விடுதி உரிமை யாளர்கள் நலச் சங்கத் தலைவர் ஷோபனா மாதவன் கூறியதாவது:
தனியார் மகளிர் விடுதிகளில் தங்கியிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டிட உள் பரப்பளவில் 120 சதுர அடி ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம். ஏற்கெனவே லட்சக்கணக்கில் முன்பணம் கொடுத்து வாடகை கட்டிடத் தில் இயங்கும் மகளிர் விடுதிகளில் இந்த ஏற்பாட்டைச் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் தேர்வுக் குழுவில் உள்ள பொறியாளரின் அனுமதி, தீ தடுப்பு, சுகாதாரத் துறை ஆகியவற்றின் உரிமம் பெற வேண்டியது கட்டாயம். சுகாதாரத் துறையில் மட்டும் சுகாதார ஆய்வாளர், சுகாதார அதிகாரி, கூடுதல் சுகாதார அதிகாரி ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும்.
இதற்கு காலதாமதமும், மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது. விடுதியில் வேலை செய்வோர் சம்பளம், பலசரக்கு, காய்கறி உள்ளிட்டவற்றுக்கு லட்சக்கணக்கில் செலவிடுகிறோம். தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.2 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு செலவைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறோம்.
மேற்கண்ட சட்டத்தால் நீர்நிலைகளை ஆக்கிர மித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், பட்டா இல்லாத கட்டிடங்களில் செயல்படும் மகளிர் விடுதிகள் மற்றும் தி குறுகலான சந்துகளில் நடத்தப் படும் மகளிர் விடுதிகளை தீ தடுப்புக்கான உரிமம் வழங்காததால் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோரிடம் விழிப்புணர்வு
மேற்கண்ட சட்ட வரையறைக்குள் வராத கார ணத்தால் கடந்த 2 மாதங்களில் 10 மகளிர் விடுதி கள் மூடப்பட்டுள்ளன. கடும் கட்டுப்பாடு களால் 7 மகளிர் விடுதிகள் ஆண்கள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலை நீடித்தால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மகளிர் விடுதிகளை மூடும் நிலை ஏற்படும். அதற்குள் விடுதி உரிமை யாளர்களை அரசு அழைத்துப்பேச வேண்டும். தேவையான சட்டதிருத்தம் செய்ய வேண்டும். மேற்கண்ட சட்டம் குறித்து பொதுமக்களிடம் குறிப்பாக பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து விடுதி களையும் மூடிவிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார் ஷோபனா மாதவன்.
இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கேட்டபோது, “இச்சட்டப்படி உரிமம் பெறுவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்பில் நிறைய மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு, தனியார் மகளிர் விடுதிகள் நடத்தி நீண்ட அனுபவம் உள்ளவர்களின் பராமரிப்பில் விடும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago