தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்துடன் தமிழகம் பரபரப்புடன் எதிர்பார்க்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுடம் நடந்து முடிந்துள்ளது. மேலும் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை பரபரப்புடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கட்டிலில் அமரும், மோடி தொடருவாரா? அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்புகள் எங்கும் காணப்படுகின்றன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்களவைத் தேர்தலை விடவும் 22 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கூட அதிகமாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் பலம்
தமிழக சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 235. இவர்களில் ஒருவர் நியமன எம்எல்ஏ. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 136 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஆர்.கே.நகர் எம்எல்ஏ ஜெயலலிதா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே. போஸ், சூலார் எம்எல்ஏ கனகராஜ் ஆகியோர் மரணத்தால் எண்ணிக்கை 133 ஆக குறைந்தது. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிமுகவின் பலம் 114 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஒருவர் சபாநாயகர் என்பதால் உண்மையான பலம் 113 மட்டுமே.
திமுகவைப் பொறுத்தவரை தற்போது 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடந்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கு 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். இதன் மூலம் திமுக அணியின் பலம் தற்போது 97 ஆக உள்ளது.
அமமுகவின் தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு ஜெயலலிதா வென்ற ஆர்.கே நகரில் வெற்றி பெற்றுள்ளார்.
இவற்றைத் தவிர 22 தொகுதிகள் காலியாக இருந்தன. இவற்றில் 18 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 22 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
அப்போது, அதிமுகவின் பலம் 118 ஆக இருந்தால் மட்டுமே அவர்கள் ஆட்சியைத் தொடர முடியும். 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுகவின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 114. அதிமுகவைப் பொறுத்தவரை இந்த ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நிச்சயம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
அதேசமயம் திமுக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் தற்போது கூட்டணியுடன் சேர்ந்து கைவசம் உள்ள 97 எம்எல்ஏக்களுடன் சேர்த்து மேலும் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் 118 எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்பதால் எளிதில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
3 எம்எல்ஏக்கள்
download-7jpgjpg100
21 எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் கணிசமான இடங்களில் திமுக வென்றால் கூட அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவில் தற்போதுள்ள 114 எம்எல்ஏக்களில் சிலர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ளனர். அதிமுகவுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே அதிருப்தி எம்எல்ஏக்களாக உள்ளனர்.
இதனால் தான், இவர்கள் அதிமுகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் மனு அளித்தார். 3 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்களையும் பதவி நீக்கம் செய்யும் திட்டத்தில் அதிமுக தலைமை இருப்பதாகத் தெரிகிறது.
அதிமுக கணக்கு
234 பேரில் 3 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் மொத்த எண்ணிக்கை 231 ஆக குறைந்து விடும். சபாநாயகரைத் தவிர்த்து 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. 22 தொகுதிகளில் 3 இடங்களில் வென்றால் கூட அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதேசமயம் பதவி நீக்கம் என்ற மிரட்டலால், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் மற்ற எம்எல்ஏக்களையும் பணிய வைக்க முடியும் என அதிமுக தலைமை நம்புகிறது.
திமுக கணக்கு
அதிமுகவின் இந்த நடவடிக்கையை முறியடிக்கும் வேலையை இப்போதே திமுகவும் தொடங்கி விட்டது. சபாநாயகருக்கு எதிராக திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 3 எம்எல்ஏக்களும் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால் அதிமுகவுக்கு 4 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உளளது. அதுமட்டுமின்றி அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தைரியம் ஏற்படும் என்பதால் அவர்களும் இந்த அரசுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என திமுக தலைமை நம்புகிறது.
தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சட்டரீதியாக தற்போது அதிமுக எம்எல்ஏக்களாகவே உள்ளனர். ஆனாலும் அவர்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க தமிமுன் அன்சாரி ஏற்கெனவே மறுத்து விட்டார். எனவே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு என வரும்போது அதிமுகவுக்கு ஆதரவாக முடிவெடுப்பார்களா? என்பது உறுதி இல்லை. அதுபோன்ற சூழலில் நடைபெறும் இடைத் தேர்தலில் 15 இடங்களில் வென்றால் கூட அதிமுக அரசை உலுக்கிப் பார்க்க முடியும் என்பது திமுகவின் எண்ணமாக உள்ளது.
தினகரன் தீவிரம்
அமமுக பொதுச்செயலாளர் தினகரனைப் பொறுத்தவரையில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருபவர். இதற்காக பலமுறை நாட்கள் குறிக்கப்பட்டும் அது நடக்கவில்லை. பெரும்பான்மை பிரச்சினையில் அதிமுக அரசு சிக்கியுள்ள நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்த தினகரன் பகீரத முயற்சி மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
இதன் காரணமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பாகவே தமிழகத்தில் முன்கூட்டியே அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன. வேறு சில மாநிலங்களில் நடந்ததை போல தமிழகத்திலும், எம்எல்ஏக்கள் அணி மாறாட்டம், ஆள் இழப்பு போன்றவையும் நடைபெறவே வாய்ப்புள்ளது.
இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ம் தேதிக்குப் பிறகு அரசியல் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago