தமிழகத்தின் பாரம்பரியமான தொழில்களில், கைத்தறியால் நெய்யப்படும் பவானி ஜமக்காளமும் ஒன்று. புவிசார் குறியீடு பெற்று, தனித்தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது பவானி ஜமக்காளம். அதேசமயம், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பவானி ஜமக்காளத்தை, முறைகேடாக விசைத்தறியால் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதால் தனித்தன்மையை இழந்து நிற்கிறது பவானி கைத்தறி ஜமக்காளம்.
மஞ்சள் நகரான ஈரோட்டுக்கு அருகில் உள்ள பவானி, `ஜமக்காள நகரம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பவானி, அந்தியூர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவு மூலம் ஜமக்காள உற்பத்தி செய்து வருகின்றனர். வழக்கமான விரிப்புகள் மட்டுமல்லாது, பல்வேறு தலைவர்கள், கடவுள் படங்கள், இயற்கைக் காட்சிகள் கொண்ட பட்டு ஜமக்காளங்கள் தயாரிக்கப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் வரை அனுப்பிவைக்கப்பட்டன.
ஆனால், அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது பவானி கைத்தறி ஜமக்காள உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மீறப்படும் சட்டம்!
கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில், 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது. இதில், ஜமக்காள ரகம் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால், இவற்றை விசைத்தறி மூலம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். விதிமுறை மீறி இந்த ரகங்களை உற்பத்தி செய்தாலோ, கடைகளில் விற்பனை செய்தாலோ 6 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.
எனினும், நடைமுறையில் இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதால், விசைத்தறியில் ஜமக்காளம் உற்பத்தி செய்யப்பட்டு, பவானிக்கு கொண்டு வரப்பட்டு, பவானி கைத்தறி ஜமக்காளம் என்ற பெயரில் வெளியூர்களுக்கு அனுப்பி, முறைகேடு நடப்பதாக குற்றம் சுமத்துகின்றனர் கைத்தறி நெசவாளர்கள்.
கொள்ளை லாபம்?
கைத்தறி ஜமக்காளத்துக்கு அரசு தள்ளுபடி வழங்கினாலும், விசைத்தறி ஜமக்காள
விலையுடன் போட்டிபோட முடியாத நிலையே உள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி சேர்வதால், கைத்தறி ஜமக்காளத்தின் விலை முன்பைக்காட்டிலும் கூடுதலான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கூட்டுறவு சங்கங்களில் இருந்து கைத்தறி ஜமக்காளங்களை வாங்கி விற்பனை செய்த வியாபாரிகள், தற்போது விலை குறைவாக கிடைப்பதால், விசைத்தறி ஜமக்காளங்களை வாங்கி, அதை கைத்தறி ஜமக்காளங்கள் என போலியாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது. நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுறவு சங்கங்களின் நோக்கமே சிதைந்துவிட்டது.
இதுகுறித்து பவானி கைத்தறி நெசவாளர்கள் கூறும்போது, "கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய ஜமக்காளத்தை, விசைத்தறியில் உற்பத்தி செய்வது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கவில்லை. மாவட்டத்தின் பல கிராமங்களில் 24 மணி நேரமும் விசைத்தறி மூலம் ஜமக்காள உற்பத்தி நடக்கிறது. அதிகாரிகளுக்கும் இது தெரிந்தே இருக்கிறது. பெயரளவுக்கு ஆய்வு நடத்தி, ஆண்டுக்கு ஒன்றிரண்டு பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்கிறார்கள். அதுவும், குறைந்த அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால், விசைத்தறியில் ஜமக்காளம் உற்பத்தி செய்வதை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை தொடர்கிறது.
பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காளத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், விசைத்தறி ஜமக்காள உற்பத்தியைத் தடுக்க அதிகாரிகள், தீவிரமாக செயல்பட வேண்டும். அபராதத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜமக்காளங்களை பறிமுதல் செய்ய வேண்டும்" என்றனர்.
பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் (ஏஐடியுசி) செயலர் வ.சித்தையன் கூறும்போது, "பவானி, அந்தியூர் பகுதிகளில் கைத்தறி ஜமக்காளம் உற்பத்தி செய்துவரும் 52 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள, தரமான கைத்தறி ஜமக்காளங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி நிலுவையையும் அரசு வழங்கவில்லை. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், நெசவாளர்களுக்கு நூல் கொடுப்பதைக்கூட கூட்டுறவு சங்கங்கள் நிறுத்தியுள்ளன. இதனால் நெசவாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது.
கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள தரமான பவானி ஜமக்காளங்களை, கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து, விற்பனை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் நெசவுப்பணியைத் தொடர, தடையின்றி நூல் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பவானி ஜமக்காள உற்பத்தி என்பது பாரம்பரியமான தொழில். இது அழிந்தால், மீண்டும் கொண்டுவர முடியாது. ஜமக்காள உற்பத்திக்கு ஒரு தறி அமைக்க குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் செலவாகும். அதிக உழைப்பும் தேவை. ஆனால், கைத்தறி நெசவுக்குத் தகுந்த கூலி கிடைக்காத நிலை தொடர்கிறது.
கூட்டுறவு சங்கங்களோடு இணைந்து பணியாற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு, 1994-ல் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஊதியம் ஆண்டுதோறும் மாற்றம் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக, மற்ற துறைகளைக் காட்டிலும் குறைந்த சம்பளத்தில் கைத்தறி நெசவு வேலை பார்க்க இளம் தலைமுறையினர் முன்வராததால், தொழில் அழிவின் பிடியில் உள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி அரசிடமும், அமைச்சர்களிடம் பேசுகிறோம். எனினும், எந்த நடவடிக்கையும் இல்லை. இலவச வேட்டி, சேலைகளை கைத்தறியில்தான் நெய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், விசைத்தறியில் நெய்வதற்கு அரசே அனுமதி கொடுக்கிறது. இப்படி செய்தால், கைத்தறி நெசவாளர்களை எப்படி காப்பாற்ற முடியும்?" என்றார்.
அதிகாரிகள் எச்சரிக்கை
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, "கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
குறிப்பிட்ட புகார்கள் மட்டுமல்லாது, அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வுகளை நடத்தி, தவறு செய்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ஜமக்காளம் மட்டுமல்லாது, கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இதர ரகங்களை உற்பத்தி செய்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago