2 நாள் மழைக்கே நிலைமை படுமோசம்: முடிவுறாத சாலை பணிகளால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் தொடங்கும் முன்பும் சாலைப் பணிகளை முடித்து விடுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் வாக்குறுதி அளிப்பதும், பணிகள் முடியாமல் மக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. பருவ மழை தொடங்கு வதற்கு முன்பு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பட்டிய லிட்டது மாநகராட்சி.

ஆனால், மழைநீர் வடிகால்வாய் மற்றும் சாலைப் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால், லேசான மழை பெய்தாலே சாலைகள் ஆறுகளாகிவிடுகின்றன. குறிப்பாக உட்புறச் சாலைகளில் குளம் போல தண் ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கிறது.

மழை பெய்யாத 8 மாதங்க ளில் செய்ய வேண்டிய பணிகளை அப்போது செய்யாமல், மழைக் காலம் நெருங்கும் போது தான் அவசர அவசரமாக மேற்கொள்கிறது மாநகராட்சி. இதனால், அரை குறையாக போடப்படும் சாலைகள், மழையில் காணாமல் போகின்றன.

இதுகுறித்து பொதுமக்களில் சிலர் கூறியதாவது:

வனஜா (வேளச்சேரி): வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் மழைக்காலத்தில் படகில்தான் சவாரி செய்ய வேண்டும். எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் நீர் தேங்கி நிற்கும். குறிப்பாக சதாசிவம் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்குவதால் வேலைக்கு செல்வோரும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.

சுதா (பெரம்பூர்): கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நின்றுவிட்டன. வியாசர்பாடி, பெரம்பூரில் உட்புறச்சாலைகள் சேறும் சகதியுமாக நடக்கக்கூட முடியாத நிலையில் படுமோசமாக உள்ளது. ஓட்டேரி, புளியந்தோப்பு, ஜமாலியா, பெரம்பூர் பாலம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கவுன்சிலர் களைக் கேட்டால் மழைக்காலம் முடியட்டும் என்கின்றனர். கடந்த ஆண்டும் இதையே கூறினர். பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ?

தேவி (சூளைமேடு): அண்ணா நெடும் பாதையில் குடிநீர் இணைப்புகளுக்காக நான்கு மாதங்களுக்கு முன்ப சாலை கள் தோண்டப்பட்டன. மீண்டும் சாலை போடவில்லை. நெரிசலான மார்க்கெட் பகுதி என்பதால் மக்கள் அவதிப்படு கின்றனர். கடந்த 2 நாளாக பெய்த மழைக்கே இந்தப் பகுதி நாசமாகிவிட்டது.

சாமுவேல் (செங்குன்றம்): கடந்த 2 ஆண்டு களாக துறைமுகம் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் இந்த வழியாக சென்றதால் சாலைகள் மோசமாகி விட்டன. செங்குன்றம் முதல் ஆண்டார்குப்பம் வரை உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி அவ்வப்போது பழுதடைந்த சாலைகளை சரி செய்தாலும் மீண்டும் அதே நிலைக்கு திரும்பி விடுகின்றன.

ராஜா (அத்திபேடு): பாதாள சாக்கடைக் காக தோண்டப்பட்ட சாலைகள் ஒரு வருடமாக சீர் செய்யப்படவில்லை. அத்திபேடு முதல் வாவின் வரை சாலை மோசமாக உள்ளது. பாதாள சாக்கடை பணிகளும் நிறைவடையவில்லை. அவசரத்துக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால்கூட மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

‘‘சாலைகள் பழுதடைந்துள்ளதாக புகார்வந்தால் உடனே அங்கு சென்று சீர்செய்கிறோம். விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சிதான் சாலைகளை புதிதாக போட்டு வருகிறது. தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே சாலைகள் போடப்படுகின்றன. நூற்றுக்கணக் கான உட்புறச்சாலைகளை புதிதாக அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE