‘சட்டசபை நடவடிக்கைகளில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது...’ 1980-களின் மத்தியில் பிரபலமான இந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அப்போது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன். அவர் சபாநாயகராக இருந்தபோது எடுத்த முடிவுகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றவை. சபாநாயகராக சில முன்மாதிரி தீர்ப்புகளையும் அளித்தவர்.
இப்போது, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் விருத்தாச்சலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்கக்கோரி பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழல் குறித்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனிடம் கருத்து கேட்டோம். அவரது பேட்டியிலிருந்து..
தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 3 பேருக்கு கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் பிறப்பித்த நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதே?
சட்டப்பேரவை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சபாநாயகர் முடிவே இறுதியானது. கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ.க்கள் மீது தகுதி நீக்க நட வடிக்கை எடுக்கலாமா என்பது பற்றி ஆராய்ந்து, நீக்கலாம் என்று சபாநாயகர் முடிவு செய்தால் அதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. 18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கிலும் கூட சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாகத் தானே நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
எம்எல்ஏக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக பேரவைத் தலைவர் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி..
பேரவைத் தலைவர் சட்டப்பேரவை தொடர்பான நடவடிக்கைகளில் நீதிமன்றத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அல்ல.
எப்படிச் சொல்கிறீர்கள்?
அதுதான் சபாநாயகருக்கு உள்ள அதிகாரம். நான் சபாநாயகராக இருந்தபோது அரசியல் சாசன நகலை எரித்ததற்காக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்தேன். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியது. நான் சம்மனை வாங்கவே இல்லை. மேலும், வழக்கு விசாரணையில் தகுதி நீக்கம் செல்லும் என்றுதான் தீர்ப்பு வந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் பிரதிநிதிகளான எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வது சரிதானா?
நான் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படவில்லையே. அரசியல் சாசனப்படி பதவியேற்றவர்கள் அரசியல் சாசனத்தின் நகலை எரித்தால் அது சட்டப்படி தவறு. மேலும், அந்தப் போராட்டம் நடப்பதற்கு முன்பே, அப்படிச் செய்தால் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்று எச்சரித்தேன். மீறி அரசியல் சாசன நகலை எரித்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுத்தேன். இதில் என்ன தவறு?
அப்போதும்கூட, அவர்களுக்கு பதவியை தக்கவைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக பேரவையில் நான் தீர்ப்பு அளிப்பதற்கு முதல் நாள் இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பழனியாண்டி உள்ளிட்டோர் என் வீட்டுக்கு வந்து பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நான் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்கச் சொன்னேன். அவரும் அரசியல் சாசன நகலை எரித்ததற்காக மன்னிப்பு கோரினால், நடவடிக்கையை கைவிடலாம் என்றார். ஆனால், திமுக தரப்பில் மன்னிப்பு கோரவில்லை. இதைத் தொடர்ந்துதான் திமுக எம்எல்ஏ.க்களை பதவி நீக்கம் செய்தேன்.
இப்போதும் பேரவைத் தலைவர் ஆராய்ந்து முடிவு செய்து கட்சித் தாவல் சட்டப்படி எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உண்டு.
அதற்குத்தான் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளேதே?
அதைத்தான் மீண்டும் சொல்கிறேன். சட்டப்பேரவை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்துக்கு சபாநாயகர் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் அல்ல. பேரவையில் அவரது முடிவுதான் இறுதியானது. 1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப் பேரவை அலுவலகம் அரசின் பொதுத் துறையோடு இணைக்கப்பட்டிருந்தது. நான் சபாநாயகராக இருந்தபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருடன் ஆலோசித்து, அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திரமான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகம் ஏற்படுத்தப்பட்டது. சபாநாயகரின் அதிகாரங்களை வலியுறுத் தும் சுதந்திரமான அமைப்பு இது.
அப்படியானால் நீதிமன்றத் தடை சபாநாயகரை கட்டுப்படுத்தாதா?
கட்டுப்படுத்தாது.
சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு அது நடைமுறைப்படுத்தப் பட்டதற்கும் முன்னுதாரணங்கள் உள்ளதே?
அரசியல் சாசனப்படி பேரவையில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரியவில்லை. ஒருவேளை, தெரிந்தாலும் நீதிமன்றத்துடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று நினைப்பதும் காரணமாக இருக்கலாம். தேர்தல் கமிஷனும் சுதந்திரமான அமைப்புதான். தேர்தல் தொடர்பான விஷயங்களில் கமிஷன் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அரசியல் சாசனப்படியான ஒவ்வொரு அமைப்புக்கும் தனித்த அதிகாரங்கள் உண்டு. அந்த அதிகார வரம்புக்குள் அவை செயல்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக டீனா என்பவர் தொடர்ந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், ‘மரண தண்டனை விதிக்கப்பட்டவரை தூக்கில் போடுவது தவறு. வேறு விதமான முறையில் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட், ‘‘மரண தண்டனையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. எந்த செயலும் சட்டப்படி நடக்கிறதா என்பதை உறுதி செய்வதுதான் நீதிமன்றத்தின் பணி’’ என்று குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
இன்னொரு பழைய சம்பவமும் நினைவுக்கு வருகிறது. காமராஜர் முதல்வராக இருந்தபோது பக்தவத்சலம் உள்துறை அமைச்சராக இருந்தார். சி.சுப்பிரமணியம் சட்ட அமைச்சராக இருந்தார். அப்போது, அரசு வழக்கறிஞராக என்.எஸ்.ராமசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பக்தவத்சலத்துக்கும் சி.சுப்பிரமணியத்துக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, ‘நாங்கள் சட்டமன்றத்துக்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களே தவிர, நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல முடியாது’ என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனே, பக்தவத்சலத்தையும் சி.சுப்பிரமணியத்தையும் கைது செய்ய நீதிமன்றம் ‘வாரன்ட்’ பிறப்பித்தது. இதற்கு எதிர்வினையாக சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது சபாநாயகரிடம் புகார் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. விஷயம் முற்றி முதல்வர் காமராஜரிடம் சென்றது. அவர் தலையிட்டு இருதரப்புக்கும் சமரசம் செய்துவைத்தார். அமைச்சர்கள் மீதான ‘வாரன்ட்’டும், நீதிபதிகளுக்கு எதிரான உரிமைக் குழுவின் நோட்டீசும் ‘வாபஸ்’ பெறப்பட்டன.
‘வரட்டும் பார்க்கலாம்’
‘திமுகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுக அரசைக் கவிழ்ப்போம்’ என்று அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம். (பலமாகச் சிரித்துவிட்டு) ‘‘தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்க்கலாம்’’ என்று முடித்துக் கொண்டார் பி.எச். பாண்டியன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago