எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் 1998-ம் ஆண்டிலிருந்து சரியான முடிவுகளைக் கூறவில்லை. இது குறித்த ஒரு பதிவு.
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் 2019-ம் ஆண்டு தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. சொல்லி வைத்தாற்போல் அனைத்து ஊடகங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என முடிவை வெளியிட்டன.
ஆனால்ம் கடந்த 5 ஆண்டுகளில் 2014-ல் இருந்த அளவிற்கு பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என தகவல்கள் வெளியானாலும், இதற்கு முன்னர் நடந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் அனைத்தும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தாலும், எக்ஸிட்போல் முடிவுகள் 2014-ம் ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் தே.ஜ.கூ வெல்லும் என்பதுபோன்று பதிவிடப்பட்டுள்ளது.
எக்ஸிட் போல் என்பது வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வெளியேவரும் நேரத்தில் அவர்களிடம் கேட்டுப் பதிவது. இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை எடுக்க பல புகழ்பெற்ற ஏஜென்சிகள் உள்ளன. யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளை வைத்து பதிவு செய்யப்படுவது ஆகும்.
எக்ஸிட்போல் கணிப்புகள் 1960-களில் ஆரம்பித்தாலும் 1980-ம் ஆண்டு பொதுத் தேர்தலில்தான் இந்தியாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கவனிக்கப்பட்டன. பிரனாய் ராய், டேவிட் பட்லர், அஷோக் லஹிரி உள்ளிட்டோர் எடுத்த கணிப்புகள் வெளியாகின. ஆனால் 1996-ல் நாடாளுமன்றத் தேர்தலில்தான் நாடெங்கும் தொலைக்காட்சிகளில் இது பரவலானது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126.எ-ன்படி எக்ஸிட் போல் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து அரைமணி நேரம் கழித்துதான் வெளியிடப்பட வேண்டும் என்பது சட்டம். மீறி நடந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எக்ஸிட் போலை பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்பதில்லை. காரணம் ஒருதலைப்பட்சமாக இவை இருக்கும் என்பது பெரும்பாலான கட்சிகளின் கருத்து. இவை எடுக்கப்படும் விதத்தில் உள்ள குறைபாடுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள், வாக்காளர்களிடம் குறிப்பிட்ட பதிலை வரவழைக்க கேட்கப்படும் கேள்விகள் போன்றவையே எக்ஸிட் போலை ஏற்காததற்குக் காரணம் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
அதை உறுதிப்படுத்தும்விதமாக கடந்த கால நிகழ்வுகள் கண்முன் சாட்சியாக நிற்கின்றன. இதுவரை 1998-ம் ஆண்டிலிருந்து வரிசையாக நடந்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் எக்ஸிட் போல் கணிப்புகள் பெரும்பாலும் சரியாக அமையவில்லை.
1998-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. ஆனால் 254 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
1999-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி 336 தொகுதிகளுக்குமேல் வெல்லும் என அனைத்து பெரும்பாலான எக்ஸிட் போல்களும் கூறின. ஆனால் பெற்றதோ 270 தொகுதிகள் மட்டுமே. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பின்னர் 296 ஆக ஆனது.
2004-ல் மீண்டும் பாஜக கூட்டணியே வெல்லும் எனவும் 250-லிருந்து 290 தொகுதிகள் கிடைக்கும் என பெரும்பாலான ஏஜென்சிகளின் எக்ஸிட் போல் தெரிவித்தது. ஆனால், பாஜக கூட்டணி பெற்ற தொகுதிகள் 189 மட்டுமே. காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸுக்கு அதிகப்பட்சம் 205 தொகுதி என ஒரே ஒரு ஏஜென்சி மட்டுமே கூறியது. மற்றவை அனைத்தும் 200-க்கு கீழே கூறின. ஆனால் கிடைத்தது 222 தொகுதிகள். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 275 தொகுதிகளுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.
2009-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எக்ஸிட் போல் கணிப்புகள் தவறாக அமைந்தன. அப்போதைய டிரெண்டை கணிக்கத் தவறின. இதனால் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி இரண்டுமே 200 தொகுதிகளுக்குள்ளேயே வரும் என கணிக்கப்பட்டது.ஆனால், மீண்டும் காங்கிரஸே ஆட்சிக்கு வரும் என யாரும் கணிக்கவில்லை. இம்முறை கூடுதலாக 42 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கூட்டணி வென்றது. காங்கிரஸ் 61 தொகுதிகளை கூடுதலாக வென்றது.
பாஜக சரிவைச் சந்தித்தது. கணிப்பைவிட 30 தொகுதிகள் குறைவாகப் பெற்றது.
2014 தேர்தல் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. பாஜகவில் மோடி புதிதாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு முதன்முறையாக குஜராத் மாடலைக் காட்டி மோடி அதைச்செய்வார், இதைச்செய்வார் என மாற்றுக்கட்சியினரையும் நம்பவைத்த தேர்தல். சமூக வலைதளங்கள் முதன்முறையாக அதிக சக்தியுடன் பயன்படுத்தப்பட்ட தேர்தல்.
10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி, 2ஜி ஊழல் என இந்தியா முழுவதும் மாற்றத்தை எதிர்நோக்கிய நேரம். அதனால் அப்போது எடுக்கப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகள் (எப்போதுமே தே.ஜ.கூ உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு) இம்முறை சரியாக வந்தது.
அனைவருமே 280 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும், (ஒரே ஒரு ஏஜென்சி 340 தொகுதிகள் என்றது) காங்கிரஸ் 100-க்குள் முடங்கும் என கூறப்பட்ட நிலையில் 282 தொகுதிகளை பாஜக வென்றது. கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து 336 தொகுதிகளைப் பெற்றது.
காங்கிரஸ் 44 தொகுதிகளை மட்டுமே பெற்றது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 60 இடங்களைப் பெற்றது. 2 ஜி அலை காங்கிரஸை வீழ்த்தியது.
இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் அனுப்பிய பதிலில் கூறியதாவது:
“தற்போது நடக்கும் கருத்துக் கணிப்புகள் அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இல்லாமல் ஒரு இயந்திரப் போக்கில் நடக்கின்றது. கருத்துக் கணிப்பு நடத்துபவர்களுக்கும், வாக்காளர்களுக்கும், இடைவெளியான தொடர்பில் புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
அவை யதார்த்தமாக இருப்பதில்லை. இந்த இடைவெளி கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மையைத் தகர்த்திவிடுகிறது. கருத்துக் கணிப்பு நடத்தும் சில நிறுவனங்கள் தங்களின் கருத்துகளை கருத்துக் கணிப்பில் திணிப்பதும் இன்றைக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில் இந்தக் கருத்துக் கணிப்புகள் எப்படி மெய்யாக இருக்க முடியும்?
தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றி பல்வேறு விதமான விவாதங்கள் நடக்கின்றன. இன்றைய நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சி மீதும், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி மீதும் பெரிய ஆதரவு இல்லை. அதிருப்தி தலைதூக்கி நிற்கிறது.
தேர்தல் களை கட்டிவிட்டாலே கருத்துக் கணிப்புகளும் தேர்தலுக்கு முன்னால் வரத் தொடங்கிவிடும். தற்போதைய கருத்துக் கணிப்புகள் யாவும் தவறாகிவிட்டன. 1996, 1998, 1999-க்குப் பின் வந்த எந்த கருத்துக் கணிப்பும் தேர்தல் முடிவுக்குப் பொருத்தமாக வரவில்லை.
வெறும் ஊகங்கள் அடிப்படையிலேயே 1999-க்குப் பின் நடந்த கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. 7 மாதங்களுக்கு முன்னால் பிஹார் தேர்தலில் வெளியிடப்பட்ட 13 கருத்துக் கணிப்புகளும் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறின. ஆனால் தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வெறும் 58 இடங்களே கிடைத்தன.
2015 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 10 கருத்துக் கணிப்புகளில் 6 கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா 31 இடங்கள் அதிகமாக பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறின. ஆனால் பாரதிய ஜனதா பெற்றதோ வெறும் 3 இடங்கள்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் 274 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்று மக்களவையில் உறுப்பினர்களை கொண்டு ஆட்சி அமைக்கும் என்ற அவுட்லுக் கருத்துக் கணிப்பும் பொய்த்துவிட்டது. அதே அவுட்லுக் இனிமேல் தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்பில் இறங்கமாட்டோம் என்று கூறிவிட்டது.
கருத்துக் கணிப்புகள் விஞ்ஞான முறையிலும், (psephology - தேர்தல் பற்றிய அறிவியல் ஆய்வு) மக்களுடைய உண்மையான மனநிலையை எடைபோட்டு அறிய வேண்டும். கிராமங்களுக்கு செல்லும் கருத்துக் கணிப்பாளர்களுடைய வினாக்களை கூட கிராம மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை.
அந்த மக்கள் அளிக்கின்ற விடைகளும் பொருந்தாமலும் உள்ளன. இந்த விடைகளைக் கொண்டு கருத்துக் கணிப்பு செய்யும்போது சரியாக இருப்பதில்லை. நகரங்களில் ஒரே இடத்தில் பெட்டியை வைத்துக்கொண்டு கருத்துக் கணிப்பாளர்கள் சோம்பேறித்தனமாக கருத்துகளைச் சேகரிப்பதும் உண்டு. இப்படி சேகரித்த கருத்துகள் மக்களின் முழுமையான முடிவுகளாக எப்படி இருக்க முடியும்?
இரண்டு கட்சிகள் நடைமுறையில் உள்ள நாடுகளில் கருத்துக் கணிப்புகள் ஓரளவு சரியாக இருக்கும். இந்தியா போன்ற பல கட்சிகள் குறிப்பாக மாநிலக் கட்சிகள் இருக்கின்ற நாட்டில் கருத்துக் கணிப்புகள் துல்லியமாக ஆய்வு செய்து முடிவுக்கு வரமுடியாது. குறிப்பாக, ஆளும் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைக்கும் கட்சிகளுடைய ஒத்துழைப்பும், ஒன்றையொன்றை அணைத்துச் செல்வதிலும் மாறுபடுவதால் எதிர்க்கட்சிகளுடைய வாக்குகள் எப்படி அமையும் என்ற துல்லியமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் நிரந்தரமாக ஒரு அணியில் இல்லாமல் மாறுபடுவதும் கருத்துக் கணிப்பில் வாக்காளருடைய உண்மையான நிலையை அறிய முடியவில்லை.
முதன்முதலாக தொலைக்காட்சியில் 1996, 1998 கட்டங்களில்தான் இந்தக் கருத்துக் கணிப்புகள் அரங்கேறின. இந்த அரங்கேற்றத்துக்கு முழுமையான கருத்துக் கணிப்புகள் இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக (Random) சீரற்ற முறையில் கருத்துக் கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
கோடிக்கணக்கான மக்கள் தொகையில் இப்படியான சீரற்ற முறை எப்படி வெற்றிபெற முடியும். இங்கு தேர்தல்கள் ஆரோக்கியமற்ற வகையில் சாதி, மதம் என பிரிந்து கிடக்கின்றது. இந்த நிலைப்பாடு 1966 தேர்தலுக்குப் பின் காண நேரிட்டது.
இப்போது நடப்பதெல்லாம் கருத்துக் கணிப்புகள் அல்ல. கருத்துத் திணிப்புகள். கருத்துக் கணிப்பு முறை (Methodology) சீரற்ற மாதிரிகளை வெறும் 2000க்கு கீழ் வைத்துக்கொண்டு கணிக்கப்படுவதெல்லாம் உண்மை என்று நம்ப முடியாது. இன்றைக்கு சராசரியாக ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் உள்ளன.
இந்த நிலையில் நம்பகத்தன்மை, முரண்பாடின்மை (consistency) ஆகியைவை முக்கியமான காரணிகளாகும். இப்படியெல்லாம் பல கோணங்களில் ஆய்ந்து முடிக்கவேண்டிய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப முக்கியமான அணுகுமுறைகளைக் கடைபிடிக்காமல் செய்கின்ற சூழலால்தான் கருத்துக் கணிப்புகள் பொய்யாகிவிடுகின்றன.
எந்த கருத்துக் கணிப்பும் இனிமேல் உண்மையோ அல்லது துல்லியமோ என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் என்ற நிலையில் கருத்துக் கணிப்புகள் யாவும் உறுதியாக உண்மையாகிவிடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து’’.
இவ்வாறு கே.ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago