இப்போதெல்லாம் மாணவர்களைக் காட்டிலும், மாணவிகள் அதிக அளவில் சாதிக்கின்றனர். குறிப்பாக, விளையாட்டுத் துறையில் மாணவிகளின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதனைப் பட்டியலும் நீள்கிறது. தனியார் பள்ளி மாணவிகள் மட்டுமே விளையாட்டுத் துறையில் சாதிப்பார்கள் என்ற உளுத்துப்போன வாதங்களைத் தகர்த்தெறிந்து, அரசுப் பள்ளி மாணவிகளாலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாய், கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கி வருகின்றனர், கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூடைப்பந்து விளையாட்டைப் பார்த்திராத கோவை மாவட்ட துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, இதுதான் கூடைப்பந்து என்று பயிற்சியாளர் அறிமுகப்படுத்தியபோது, வியப்புடனேயே பார்த்தனர். அவரிடமே பயிற்சி பெற்று, தற்போது மாவட்ட அளவிலான போட்டி முதல் தேசிய அளவிலான போட்டிகள் வரை பங்கேற்று, வெற்றி பெற்று வருகின்றனர்.
தினக் கூலிகளாக வேலை செய்யும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு அழைத்து வர முடியாத சூழல். அடிப்படைத் தேவையான உணவுக்கே சிரமப்படும்போது, விளையாட்டுக்குச் செலவளிப்பது எப்படி என்று யோசித்துள்ளனர் மாணவிகளின் பெற்றோர்.
விளையாட்டு உபகரணங்கள்!
பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்து, மாணவிகள் விளையாடுவதற்கு ‘ஷூ’ மற்றும் விளையாட்டு உபகரணங்களை, தனது சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து, கூடைப்பந்தாட்ட பயிற்சிக்கு வந்து, செல்ல வசதியும் செய்து கொடுத்திருக்கிறார், பயிற்சியாளர் செபாஸ்டியன் பிரபு. சீருடை உள்ளிட்ட உரிய விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சில மாணவிகள் வர மறுத்தபோது, அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார். பயிற்சியாளரின் விடாமுயற்சியும், மாணவிகளின் அசத்தலான திறமையும் தமிழக அளவில் கூடைப்பந்து விளையாட்டில் இந்தப் பள்ளிக்கு பெயர் தேடித் தந்துள்ளது. இங்கு 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீலட்சுமி, இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற, தேசிய அளவிலான பெண்கள் சப்-ஜூனியர் கூடைப்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி, அந்த அணி இரண்டாம் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் தனுஸ்ரீ, டீனா ஜோன்ஸ், 8-ம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீ, 7-ம் வகுப்பு மாணவி ராஜலட்சுமி ஆகியோர் கோவை மாவட்ட அணி சார்பில், தமிழக அளவில் நடைபெற்ற, மாவட்டங்களுக்கு இடையேயான சப்-ஜூனியர் பெண்கள் கூடைப்பந்துப் போட்டியில் விளையாடி, இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
தேசிய கூடைப்பந்து சங்கம் டெல்லியில் நடத்திய பயிற்சி முகாமில், துணி வணிகர் சங்க அரசுப் பள்ளி மாணவிகள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையால் வாடிக் கிடக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு, கூடைப்பந்து ஆட்டத்தில் கிடைத்திருக்கும் வெற்றி, தங்களது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்ட அளவில் கூடைப்பந்து ஆட்டத்தில் இப்பள்ளி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது, மாணவிகளிடம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோடைகால சிறப்பு முகாமில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பயிற்சி பெறுவதற்கு, தலைமை ஆசிரியை மணியரசி, உடற்கல்வி ஆசிரியை சுசீலா மற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
தேசியப் போட்டியில் பங்கேற்கும் மாணவி!
தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவி ஸ்ரீலட்சுமியை சந்தித்தோம். “கோவை ராமகிருஷ்ணாபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். எனது தந்தை எம்.பார்த்தசாரதி, கூலி வேலைக்குச் செல்கிறார். தாய் பி.கவிதா குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார். நான் 6-ம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே, கூடைப்பந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
கடந்த 2018-ல் கோவையில் நடைபெற்ற, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடினேன். எங்கள் அணி முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில், கோவை மாவட்ட அணிக்காக விளையாடினேன். அதிலும் எங்கள் அணி வெற்றி வாகை சூடியது.
இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவிலான ‘மினி இந்தியா’ கூடைப்பந்துப் போட்டியில் விளையாடத் தேர்வாகியுள்ளேன்.
கோவையில் இருந்து நான் மட்டுமே இதற்கு தேர்வாகி உள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சி முகாமிலும் பங்கேற்கிறேன். இதற்காக, தினமும் காலை 6 முதல் 9 மணி வரை, மாலையில் 3 முதல் 5 மணி வரை தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.
“கூடைப்பந்து விளையாட்டின் போது, ஆரம்பத்தில் அரசுப் பள்ளி மாணவிகள்தானே என அலட்சியமாகப் பார்த்தவர்கள்கூட, தற்போது இந்த மாணவிகள் விளையாடுவதைப் பார்க்க வருகின்றனர். இதற்கு காரணம், தனியார் பள்ளிகளே கோலோச்சி வந்த கூடைப்பந்துப் போட்டியில், அரசுப் பள்ளி மாணவிகள் அசத்தி வருவதைக் காண மக்கள் திரள்கின்றனர்.தொடக்கத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தாலும், சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இவர்கள் களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
மாணவிகளின் திறமையைக் கண்டுவியந்த தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ), அவர்கள் அமெரிக்கா சென்று பயிற்சி பெறும் வகையில், அனைவருக்கும் பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்துள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவிலும் சாதிக்கத் தயாராகி வருகின்றனர், இம்மாணவிகள்” என்கிறார் பயிற்சியாளர் செபாஸ்டியன் பிரபு.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago