கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு 1,000 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். 4.5 லட்சம் ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கோதாவரி – காவிரி நதிகள்இணைப்புத் திட்டம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டது. இருப்பினும் கடந்த 2000-ம் ஆண்டில்தான் இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு, அதன் அறிக்கை 2004-ம்ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு கிடப்பில் போடப்பட்டது. மத்திய பாஜக அரசில் இத்திட்டத்துக்கான விரி வான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே, “புதிய அரசில் கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதே தனது முதல் பணியாக இருக்கும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இதற்கு முதல்வர் கே.பழனிசாமி நன்றி தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்துக்கான பணிகள் வேகமெடுத் துள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதலில் மகாநதி – கோதாவரி – பெண்ணாறு – காவிரி நதிகள் இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணிகளை மத்திய அரசு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. கோதாவரி நதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உற்பத்தியாகி கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மாநிலம், ராஜமுந்திரி மாவட்டம், காக்கிநாடா அருகே தவ்லேஸ்வரம் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கோதாவரி நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. இந்த நதியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கோதாவரி நதியின் தண்ணீர் அக்கினப்பள்ளி அல்லது ஜனம்பேட் என்ற இடத்தில் கதவணை கட்டி, அங்கிருந்து திருப்பிவிடப்படும். அங்கிருந்து கால்வாய் வழியாக கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகர்ஜூனாசாகர் அணை, பெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோமசீலா அணை,ஆரணி ஆறு, பாலாறு, தென் பெண்ணையாறு வழியாக காவிரியில் கல்லணையில் வந்துசேரும்.
அக்கினப்பள்ளியில் இருந்து கல்லணை வரையிலான தூரம் 1,250 கிலோ மீட்டராகும். தமிழகத்தில் மட்டும் 360 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்படும். இந்த கால்வாயில் விநாடிக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட முடியும்.
இக்கால்வாய் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் மேல்பகுதி வழியாகச் செல்லும். அப்போது சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரி வழியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதி, கல்லணை வரை கால்வாய் அமைக்கப்படும். இத்திட்டத்துக்காக ஏராளமான இடங்களில் சிறிய பாலம், தடுப்பணை, கதவணைகள் கட்டப்படும். பல இடங்களில் தண்ணீரைப் “பம்ப்” செய்ய வேண்டிவரும். அதனால் அந்த இடங்களில் எல்லாம் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்துக்கான தற்போதைய மதிப்பீடு ரூ.60 ஆயிரம் கோடி. ஐந்து ஆண்டுகளில் இதை நிறைவேற்ற திட்டமிடப்படுள்ளது. ஆனால், 10 ஆண்டுகள் வரை ஆகலாம். திட்ட மதிப்பீடும் ரூ.70 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால், ஆண்டுக்கு சுமார் ஆயிரம் டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தண்ணீரை குடிநீர் மற்றும் பாசனத்துக்காக மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டில் மட்டும் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாசனம் உறுதி செய்யப்படும். கோதாவரி நதியின் கிளை நதியான இந்திரா நதியின் குறுக்கே மின்உற்பத்தி நிலை யங்கள் அமைக்கவும், பாசன பரப்பை உருவாக்கவும் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்கள் திட்டமிட்டுள்ள போதிலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago