மண் வளத்தை பாதுகாக்கும் இயற்கை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள்!

By த.சத்தியசீலன்

மரப்பயிர் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பூச்சிகளும், நோய்களும் கட்டுப்படுவது மட்டுமின்றி, மரப்பயிர்களும், மண்ணும் பாதிக்கப்பட்டு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறார் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானி ஏ.பாலு.

“பூச்சிகளைத் தாக்கும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சாணங்கள் இயற்கை சார்ந்த பயிர் பாதுகாப்பில் முக்கியப்  பங்கு வகிக்கின்றன. இவ்வகை நுண்ணுயிர்கள் மரப்பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் உடலுக்குள் சென்று, நோயை ஏற்படுத்தி அழிக்கும் வல்லமை கொண்டவை.

பூச்சிகளை, குறிப்பாக புழுக்களையும், வண்டுகளையும் கொல்லக்கூடிய பாக்டீரியா, ‘பாஸில்லஸ் துரின்ஜன்ஸில்’ வைரஸ், பூஞ்சாண்கள், புவேரியா மற்றும் மெட்டாரைஸ்யியம் போன்றவை பிரபல உயிர் பூச்சிக்கொல்லிகள்.

இவற்றைக் கொண்டு பலவகை விவசாயப் பயிர்களையும், மரப்பயிர்களையும் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். நுண்ணுயிர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உயிர்க் கொல்லிகள் பருத்தி, நிலக்கடலை, கரும்பு போன்ற விவசாயப் பயிர்களையும், வில்லோ, பைனஸ், ஸ்புரூஸ் போன்ற மரப்பயிர்களையும் தாக்கும் பூச்சிகளை அழிக்கக்கூடியவை.

டெல்ஃபின், பயோலெப், பயோ ஆஸ்ப், பயோபிட், ஹால்ட், லூப்பின், ஸ்பெக்டிரின், அக்ரி போன்றவை இத்தகைய பாக்டீரியா உயிர் கொல்லிகள்.

மைக்கார், மெட்டாகுயினோ, வெட்டேல், மைக்கோடால், த்ரிப்டால், பயோ கியூர் அண்டு பயோ வார் போன்றவை பூஞ்சாண நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகள்.

பூச்சிகளைத் தாக்கி அழிக்கக்கூடிய ஸ்டைனர் நீமா மற்றும் ஹெட்டிரோ ரேப்டிட்டிஸ் போன்ற நூற்புழுக்களும் பயிர் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதைக் கொண்டு வேர்ப்புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான் புழுக்களை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம்.

சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு!

வேம்பு, துளசி, ஆடாதொடை, நொச்சி, அகத்தி, புகையிலை, பூண்டு, மிளகாய், போன்றவை தாவரப் பூச்சிக்கொல்லிகளாக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சாறு, துகள், பசை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிர் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. நன்மை தரும் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கும் தீங்கு ஏற்படுவதில்லை. இவற்றை நாமே தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்” என்கிறார்  விஞ்ஞானி ஏ.பாலு.

வேம்பு பால் தயாரித்தல்!

தொடர்ந்து அவர் கூறும்போது, “நன்கு முதிர்ந்த வேப்பம் பழங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை தண்ணீரில் 3-5 நாட்கள் ஊறவைத்து, பிறகு பழங்களில் உள்ள சதை மற்றும் தோல்களை நீக்கி, விதைகளை மட்டும் நன்கு கழுவி எடுக்க வேண்டும்.

அவற்றை 8-10 நாட்களுக்கு நிழலில் உலர்த்தி, சுத்தமான பாத்திரங்கள் அல்லது பைகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பின்னர்,  விதைகளின் மேல் தோல் நீக்கி, பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

அதை 50 கிராம் அளவில் எடுத்து, நன்றாகத்  தூளாக்க வேண்டும். பின்னர், அதை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 8-10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்தக் கரைசலை,  மெல்லிய துணியைக் கொண்டு வடித்து எடுக்கவும்.

அந்தக் கரைசலுடன் ஒரு மி.லி. டீபால் அல்லது சேன்டோவிட் என்ற ஒட்டு திரவம் சேர்த்து,  நன்றாகக் கலந்து மாலை நேரங்களில் பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். விசை தெளிப்பானைக்  கொண்டும் தெளிக்கலாம். அல்லது சந்தையில் கிடைக்கும் அசூக், பைசால், கெமிசால், மார்கோசைடு, மார்கோசால், நீம் பிளஸ், நீம் கார்டு, நீம் பியூர், நிம்பிசிடின், பைட்டோவின், டிஎன்ஏயூ நீம், நீம் அஸால், ஈக்கோ மேக், நீமாக்ஸ், நீமாக்டின், நீமிஸைடு போன்ற வேம்பு மருந்துகளையும் பயன்படுத்தலாம்.

 புகையிலை, வேம்பு சோப்பு கரைசல்!

சுமார் 3.5 கிலோ புகையிலை இலை அல்லது தண்டை 7 லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து எடுத்து, அத்துடன் 500 கிராம் வேம்பு சோப்பை நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்தக் கரைசலை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம்,  சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

புகையிலை அல்லது தண்டுத் தூள், காய்ந்த மிளகாய் தூள் மற்றும் சலித்த மணல் ஆகியவற்றை 4:3:5 என்ற விகிதத்தில் கலந்து பயிர்களின் மேல் மாலை நேரத்தில் தெளிப்பதால், இலை உண்ணிகளை கட்டுப்படுத்த முடியும்.

பூச்சிகளை அழிக்கும் பூச்சிகள்...

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும், பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாத்து, பல்கிப் பெருகுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வகைப் பூச்சிகளை ஆய்வகங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்து, நாற்றங்கால் அல்லது தோட்டங்களில்

விடுவதன் மூலம், பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், இலை உண்ணிகள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்கலாம். இதுவும் சிறந்த பயிர் பாதுகாப்பு முறைகளில் ஒன்றாகும்.

இத்தகைய நன்மை விளைவிக்கும் பூச்சிகளில் முட்டை ஒட்டுண்ணி, டிரைக்கோகிராமா போன்ற மிகச்சிறிய குளவி இனத்தைச் சேர்ந்த பூச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முட்டை ஒட்டுண்ணியை பருத்தி காய்ப்புழு, கரும்பு தண்டு துளைப்பான், நிலக்கடலை, கம்பளிப்புழு போன்றவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் ஆப்பிள், தேக்கு, பைனஸ், ஸ்புரூஸ் போன்ற மரப்பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் இவற்றைப் பயன்படுத்தி அழிக்கப்படுகின்றன.

பூச்சித் தின்னிகள்!

பூச்சித் தின்னிகள், சிலந்தி, பொறிவண்டு மற்றும் பறவை இனத்தைச் சேர்ந்தவை. இவை விவசாய மற்றும் மரப்பயிர்களைத் தாக்கும் பலவகை பூச்சிகளின் முட்டை, புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் தாய் பூச்சிகளை உண்டு அழிக்கின்றன. சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவு மற்றும் செதில் பூச்சிகளை வெகுவாகக்  கட்டுப்படுத்துகின்றன. இவற்றை மற்ற இடங்களில் இருந்தும் சேகரித்து தோட்டங்களில் விடலாம். இதன்மூலம் இயற்கை முறையில் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், பயிர் மற்றும் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்