எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை: கோமதி மாரிமுத்து

By நந்தினி வெள்ளைச்சாமி

எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை. தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து தங்கப் பதங்கத்தை வென்றார். சர்வதேச அளவில், கோமதி மாரிமுத்துவுக்குp பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உறுதுணையாக இருந்த தந்தை, பயிற்சியாளர் இறந்தபோதும், தன்னம்பிக்கையைக் கைவிடாமல், இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் கோமதி மாரிமுத்து. "கிழிந்த ஷூக்களுடன் போட்டியில் ஓடினேன்", "அரசு ஸ்பான்சர் செய்யவில்லை" என கோமதி மாரிமுத்து கூறும் வார்த்தைகள், தமிழக அரசு, விளையாட்டுத் துறையில் இன்னும் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு இன்று (சனிக்கிழமை), சென்னையில், 'எழுமின்' மற்றும் தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் இணைந்து பாராட்டு விழா நடத்தியது.

அந்நிகழ்ச்சியில் கோமதி மாரிமுத்து பேசியதாவது:

''நம் தமிழ்நாட்டில், விளையாட்டில் ஆர்வம் உள்ள என்னைப் போன்ற நிறைய பேர் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கும் விடுதிகளில் போதுமான உணவு கிடைப்பதில்லை. அவர்களுக்கு ஏற்ற, சத்தான உணவுகளை அரசு கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹீமா தாஸுக்கு அம்மாநில அரசாங்கம் உதவிகள் செய்தன. அதேபோன்று, தமிழக அரசும் உறுதுணையாக இருந்தால், தமிழ்நாட்டு வீரர்களும் உலக அளவில் சாதனை படைப்பார்கள்.

எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை. என்னுடைய சொந்த செலவில் தான் நான் இதனைச் சாதித்துள்ளேன். என் குடும்பத்திற்கு நான் பொருளாதார ரீதியாக உறுதுணையாக இருந்தேன். இப்பொழுது எனக்கு உதவி செய்கின்றனர். இதனால், நான் இன்னும் நிறைய சாதனைகள் புரிவேன்.

என் ஊரான முடிகண்டம் சிறிய கிராமம். காலை 4.30 மணிக்கு மைதானத்திற்குச் செல்ல, அப்பா என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வார். அப்போது, சாலையிலுள்ள மின்விளக்குகள் கூட எரியாது. அப்போதெல்லாம் டார்ச் லைட் பிடித்துக்கொண்டே தான் வண்டியில் செல்வோம். மழைக்காலங்களில் செல்லும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எங்கள் ஊரில் சாலை வசதிகளை ஏற்படுத்தினால், என்னைப் போன்றவர்களை நான் அதிகமாக உருவாக்குவேன்.

அப்பா தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லையென்றால், நான் இந்த இடத்தில் இல்லை.

3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கிழிந்த ஷூக்களுடன் தான் நான் போட்டியில் கலந்துகொண்டேன். எனக்கு அந்தச் சமயத்தில் வருத்தமாக இருந்தது. எல்லோரும் நல்ல ஷூ போட்டிருக்கும்போது, நாம் இதை அணிந்திருக்கிறோமே என்று. ஆனால், போட்டியின் போது எனக்கு அந்த எண்ணம் இல்லை. முதலிடம் வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

கிராமங்களில் விளையாட்டில் திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் வெளியில் வரவே மாட்டார்கள். அவர்களுள், மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெறுபவர்களை, அவர்களின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் உதவித்தொகை தர வேண்டும். அப்போது தான் அவர்கள் வளர்வார்கள்.

முதல்வர், மு.க.ஸ்டாலின், கனிமொழி என எல்லோரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். நான் வெற்றி பெற்ற பின்னர், தமிழக அரசு சார்பாக என்னிடம் பேசப்பட்டது. எனக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வர் எங்கள் வீட்டுக்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக அம்மா சொன்னார். அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. அது என்னவென்று நான் ஊருக்குச் சென்று படித்துப் பார்த்தால் தான் தெரியும். தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை.

என்னைப் போன்றவர்களுக்கு உதவித்தொகை கொடுத்தால், சத்தான உணவுகளுக்கு அந்த உதவி பயன்படும். எனக்கு இதனை செய்யவில்லைய என்றாலும், ஜூனியர் பிள்ளைகளுக்காவது செய்தால் இன்னும் நான் சந்தோஷமாக இருப்பேன்.

நான் ஒலிம்பிக்கில் வெற்றி பெற வெளிநாட்டில் பயிற்சி எடுக்க அனுப்பினால் உறுதுணையாக இருக்கும். அப்படி செய்தால், நிச்சயம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்.

2015-ல் சீனாவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 4-ம் இடம் வந்தேன். அதன்பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு என் விளையாட்டு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று தான் நினைத்தேண். ஆனால், அதிலிருந்து மீண்டு உழைத்ததால் தான், இது சாத்தியமாகியுள்ளது.

சிறு வயதில் நான் பயிற்சியெல்லாம் எடுக்கவில்லை, எனக்கு ஸ்போர்ட்ஸ்னா என்னவென்று கூட தெரியாது. பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு அரசு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். நான் 12 ஆம் வகுப்பு வரை ஷூ இல்லாமல் வெறும் கால்களுடன் ஓடியிருக்கிறேன். எனக்கு வேலை இருப்பதால் இப்போது பிரச்சினையில்லை. ஆனால், வேலை இல்லாதவர்களுக்கு மிகவும் கஷ்டம்.

தமிழ்நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசை. எனக்கு 30 வயதாகி விட்டதால், என்னால் வேகமாக ஓட முடியாது என சொன்னார்கள். ஆனால், சாதிக்க வயது தடையே இல்லை. பயிற்சியும் கடின உழைப்புமே முக்கியம்"

இவ்வாறு கோமதி மாரிமுத்து பேசினார்.

கோமதி மாரிமுத்துவுக்கு டிடிவி தினகரனின் அமமுக சார்பாக ரூ. 10 லட்சமும் திமுக சார்பாக ரூ.10 லட்சமும், தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.5 லட்சமும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ ஷங்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்