முரண்பாடுகள் இருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

By செய்திப்பிரிவு

கோவைக்கு வியாழக்கிழமை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் அணுகினர். இதன் அடிப்படையில் கட்சியின் செயற்குழு கூடி பாஜக வேட்பாளர்களை முழுஅளவில் ஆதரித்து வெற்றிக்காக பாடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் நந்தகுமார் வெற்றி பெறுவதற்கு மதிமுக-வினர் தீவிரமாக உழைப்பார்கள். மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து கேட்டபோது, தொழில் முன்னேற்றம் அடைய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஜி.டி.பி. மதிப்பு உயர்ந்துள்ளது. பிரதமரின் ஜப்பான் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்கு மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதே வேளையில், மத்திய அரசு மேற்கொண்டுள்ள சமஸ்கிருத, இந்தி திணிப்பு, இலங்கை அதிபர் ராஜபட்சயை பதவியேற்பு விழாவுக்கு அழைத்தது போன்ற செயல்பாடுகளை எதிர்த் துள்ளோம். ராஜபட்சயின் வருகையை எதிர்த்து பணபலம், அதிகார பலம்கொண்ட கட்சிகள் கூட போராட்டம் நடத்தவில்லை. லட்சியத்தை மட்டும் வைத்துள்ள நாங்கள் போராட்டம் நடத்தினோம். தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். இவ்வாறு, ஒருசில முரண்பாடுகள் இருந்தாலும் வழக்கம்போல் எங்களது கூட்டணி தொடரும்’’ என்றார்.

வைகோவை பாஜக மேயர் வேட்பாளர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் தலைமையிலான அக் கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE