கராத்தேயில் கலக்கும் தள்ளுவண்டி கடைக்காரர் மகன்

By த.சத்தியசீலன்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார், கோவையைச் சேர்ந்த தள்ளுவண்டி கடைக்காரர் மகன் எஸ்.நாகேந்திரன். கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த இவரது தந்தை வி.சுப்பிரமணியம், தள்ளுவண்டியில் மீன் வறுவல் வியாபாரம் செய்து வருகிறார். கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வெழுதியுள்ள மாணவர் நாகேந்திரன்(16), கராத்தே போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற, தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற இவர், ‘குமுத்தே’ எனப்படும் சண்டைப் பிரிவில் தங்கம் வென்றார்.  அதே மாதம், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியிலும், குமுத்தே பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

2018 டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் குமுத்தே, குழு கட்டா போட்டிகளில் தலா ஒரு தங்கம், தனி நபர் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  2015 மற்றும் 2017-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், மாநிலப் போட்டிகளிலும் வென்று, தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை குவித்து வருகிறார்.

“ஐந்தாம் வகுப்பு முதல் கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். புரூஸ்லீ,  ஜாக்கிசான் உள்ளிட்ட தற்காப்புக்கலை வீரர்கள் என்னை மிகவும் கவர்ந்தனர். அவர்களைப்போல நானும் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது.

எனது விருப்பத்தை அறிந்த தந்தை, கராத்தே பயிற்சியாளர்களைத் தேடி, பின்னர் பயிற்சியாளர் ஆர்.சண்முகத்திடம் சேர்த்து விட்டார். அப்போதிலிருந்து அவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். கராத்தே மட்டுமின்றி, ஆளுமைத் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளவும் அவர்  வழிகாட்டினார்.

நான்  6-ம் வகுப்பு படிக்கும்போது கோவையில் நடைபெற்ற, கராத்தே கிளப்புகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றேன். கராத்தேவில் நான் வென்ற முதல் பதக்கம் அதுதான். வாழ்வில் மறக்க முடியாத தருணம்.

தொடர்ந்து 2015-ல்  முதல்முறையாக மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றேன். அதில், `குமுத்தே’ பிரிவில் தங்கம் வென்றேன். தேசியப் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம், டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் கராத்தே போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். மீன் வறுவல் வியாபாரம் செய்துதான், என்னையும், எனது தங்கையையும் பெற்றோர் படிக்க வைக்கின்றனர். குடும்பத்தினரும், பயிற்சியாளர் ஆர்.சண்முகமும் உறுதுணையாக உள்ளனர். ஆசிய கராத்தே போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

மலேசியாவில் நடைபெற உள்ள ஆசிய கராத்தே போட்டியில் பங்கேற்கத்  தகுதியும் பெற்றுள்ளேன். அந்தப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன்” என்கிறார் எஸ்.நாகேந்திரன். கராத்தே மட்டுமின்றி, கூடைப்பந்து விளையாட்டிலும் வல்லவரான இவர், பள்ளியின் கூடைப்பந்து அணி கேப்டனாகவும் பொறுப்பு வகிக்கிறார். மேலும், படிப்பிலும் சிறந்து விளங்குகிறார். அவ்வப்போது, தள்ளு வண்டிக்  கடை யில் தந்தைக்குஉறுதுணையாகவும் பணிபுரிகிறார். ஏழ்மையில் தத்தளித்தாலும், தளராத நம்பிக்கையுடன் முன்னேறி வரும் அவரது கனவு நனவாக பலரும் வாழ்த்துகின்றனர்.

கராத்தே பயிற்சியாளரான காவலர்...

இவரது பயிற்சியாளர் ஆர்.சண்முகம், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். பணிக்கு இடையே, மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்து, ஊக்குவித்து வருகிறார்.  சரவணம்பட்டி அருகேயுள்ள விசுவாசபுரத்தில் கே.டி.கராத்தே அகாடமியிலும், கே.ஜி. தியேட்டர் வளாகத்திலும் கராத்தே வகுப்புகளை நடத்தி வரும் இவரிடம் 100-க்கும் மேற்பட்டோர் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவரது மாணவர்கள் இம்மானுவேல், சாய் குந்தவி, சந்தோஷ் அமால், லயாஷிகா ஆகியோர் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

2014, 2015, 2018-ல் நடைபெற்ற,  காவல் துறையினருக்கு இடையிலான மாநில கராத்தே போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும்  தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் ஆர்.சண்முகம். இப்போட்டியில் ஒருவர் அதிகபட்சமாக  4 பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கலாம். இவர் 4  பிரிவுகளிலும் பங்கேற்று, பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

“நான் ஆரம்பத்தில் கராத்தே போட்டிகளில்   பங்கேற்று, பதக்கங்கள் வென்றேன். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். என்னிடம் பயின்ற பலரும்,  பதக்கங்களை வென்றுள்ளனர். மாணவர் நாகேந்திரன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், திறமை மிகுந்தவர். அவரது வெற்றிகள், உயர் கல்வி மற்றும் அரசுப் பணிக்குச் செல்ல உதவியாக இருக்கும்.

இன்றைய சூழலில் தற்காப்புக் கலை அனைவருக்கும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார் ஆர்.சண்முகம்.

உலக கராத்தே சம்மேளனம்...

தற்காப்புக் கலைகளின் பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. தற்காப்புக் கலைகளில் ஒன்றான கராத்தே, ஜப்பானிய தீவுக் கூட்டங்களில் ஒன்றான `ரியூக்யுத் தீவு’க்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ சண்டை முறையும் கலந்து உருவானது என்கிறார்கள். சீனாவிலிருந்து வந்தவர்களால் ரியூக்யுத் தீவு பகுதியில் தற்காப்புக் கலைகள் பரவியுள்ளன. கராத்தே ஒரு முதன்மையான தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் இந்தக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தே பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. உலக கராத்தே சம்மேளனம், மிகப் பெரிய கராத்தே விளையாட்டு அமைப்பாகும். இது, ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே போட்டிக்குப் பொறுப்பாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, பல்வேறு பாணி கராத்தே விளையாட்டுகளுக்கும் பொதுவான விதிகளை மேம்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான கராத்தே போட்டிகளை, அந்தந்த நாடுகளில் இயங்கி வரும் தேசிய கராத்தே கமிட்டிகள் ஒருங்கிணைக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்