நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்: கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க பெற்றோர் வலியுறுத்தல்

By சி.பிரதாப்

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை அரசு முறையாக தெரிவிக்காததால் நிர்வாகங்கள் அதிக அளவு வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட 17,000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே அனைத்துவித தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி கல்வி கட்டணக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சார்பில் தனியார் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணையதளங்களில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன.

ஆனால், இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகங்கள் சார்பிலும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், அரசு அறிவித்தபடி பள்ளிகளிலும் கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படு வதில்லை.

இதற்கிடையே மாநிலம் முழுவதும்பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதிலும்சென்னை உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் பள்ளிகளில் கட்டண விகிதம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிக்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டண விவரங்கள் முறையாக விளம்பரம் செய்யப்படுவதில்லை. இதனால் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தவிக்கிறோம்.

முன்வைப்பு தொகை

சென்னையில் பல பள்ளிகளில் ரூ.60 முதல் ரூ.80 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எல்கேஜி முதல் 11-ம் வகுப்பு புதிய மாணவர் சேர்க்கை எனில் லட்சக்கணக்கில் நன்கொடை செலுத்த வேண்டும். சில பள்ளிகளில் முன்வைப்பு தொகை என்ற பெயரில் பணம் வாங்குகின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் 10% வரை கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுகுறித்து கல்வித் துறை அலுவல கங்களில் புகார் செய்தால் அந்தப் பள்ளியில் ஏன் பிள்ளையை சேர்க்கிறீர் கள். அங்கு போனால் அவ்வளவு பணம் கட்டத்தான் வேண்டும் என கூறுகின்றனர். அரசுப் பள்ளிகள் போதிய வசதிகளுடன் தரமாக இருந்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பிரச்சினைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர்.

தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச்செயலாளர் நந்தக்குமார் கூறியதாவது:தமிழகத்தில் கட்டணக் கொள்ளைக்கு கல்வித் துறையும், தமிழக அரசும்தான் முக்கிய காரணம். தனியார் பள்ளிகளின் வசதிகளைப் பொறுத்து நியாயமான கட்டணத்தை நிர்ணயித்தால் பிரச்சினை இருக்காது.

ஆனால், இதை கல்வித் துறை அதிகாரிகள் முறையாக செய்வதில்லை.

கண்துடைப்புக்காகவே குழு அமைப்புகண் துடைப்புக்காகவே கல்வி கட்டண நிர்ணயக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழு எந்தப் பள்ளிகளையும் சரியாக ஆய்வு செய்யாமல் சில ஆயிரங்களில் கட்டணத்தை நிர்ணயித்து விடுகின்றனர். இதை சமாளிக்க முடியாமல் பள்ளிகள் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்ய வேண்டியுள்ளது. எனினும், இந்த வாய்ப்பை பெரும்பாலான தனியார் பள்ளிகள் தவறாகவே பயன்படுத்தி அதிக அளவு கட்டணம் பெறுகின்றனர்.

சென்னையில் பிரபலமான சில தனியார் பள்ளிகளில் எல்கேஜிக்கே ஒரு லட்சத்துக்கும் மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்தப் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.

மாநிலத்தில் உள்ள பிளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் மேல், முறையான அங்கீகாரமில்லை. போதிய அடிப்படை வசதிகளின்றி சிறிய கட்டடங்களில் இயங்குகின்றன. அங்கு ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதை அறிந்தும் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக உதவுகின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போதிய அளவில் உள்ளன. எனவே, புதிய பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி அளிக்க வேண்டியதில்லை. மாறுபட்ட கல்விக் கட்டணத்தால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால் பள்ளி அங்கீகாரம், சொத்துவரி, வாடகை, ஆசிரியர் சம்பளம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச்சங்க மாநிலத் தலைவர் அருமைநாதன் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி மாசிலாமணி தலைமையிலான குழு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழு பள்ளிகளில் உள்ள வசதிகளின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது.

அறிவிப்பு பலகை

எனினும், இந்த நடைமுறை முடிந்து மே இறுதியில்தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால், அதற்குள் கல்விக் கட்டணத்தை பள்ளிகள் வசூலித்துவிடும். இதை சரிசெய்ய கட்டண விவரங்களை முழுவதும் பள்ளிவாரியாக இணையதளங்களில் வெளியிடுவதுடன், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்வதுடன், எல்லா பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.

மேலும், மாநிலத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அந்தப் பணிகளை கட்டணக் குழு விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு கல்விக் கட்டணக் குழு அதிகாரி ஞானசேகரன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 5,200 பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் விவரங்கள் https://tamilnadufeecommittee.com/schoolfees.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 2020-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இதே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இதுதவிர 2,300 பள்ளிகளுக்கு வழக்கு காரணங்களால் ஓராண்டு கால அனுமதியில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அனுமதியும் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

பள்ளிகளின் பட்டியலும் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதர பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் மக்கள் நேரிடையாக புகார் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்