விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

By ச.கார்த்திகேயன்

சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில அளவில் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்துக்குச் சென்றுள்ளது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், எளிமையான நிர்வாகத்துக்காக மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஓர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் நியமிக்கப்படுகின்றனர்.

தேர்தல் பயிற்சி, பணியாளர் களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு, வாக்குப்பதிவு இந்திரங்களை அனுப்புதல், வாக்குகளை எண்ணுதல் ஆகியவை சட்டப்பேரவைத் தொகுதி அளவில் மேற்கொள்ளப்பட்டு, மக்களவைத் தொகுதி அளவில் ஒன்றிணைக்கப்படுகிறது.

56.34 சதவீத வாக்குகள்

நடந்து முடிந்த மக்களவை வாக்குப்பதிவில் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தென் சென்னையில்தான் மிகக் குறைந்த அளவாக 56.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை தொகுதி அளவில் பார்க்கும்போது, மாநில அளவில் 54.78 சதவீத வாக்குகளுடன் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 தொகுதிகள்

குறைவான வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகளில் மயிலாப்பூர் முதலிடத்திலும், சோழிங்கநல்லூர் தொகுதி 2-ம் இடத்திலும், சைதாப்பேட்டை தொகுதி 4-ம் இடத்திலும், தியாகராயநகர் தொகுதி 9-வது இடத்திலும், விருகம்பாக்கம் தொகுதி 10-வது இடத்திலும் உள்ளன.

அறிவுஜீவிகள் பகுதியாக அறியப்படும் மயிலாப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருப்பது அந்தத் தொகுதிக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது குறித்து, அத்தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறும்போது, “ஏழை,எளிய மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, படித்த மற்றும் மேல்தட்டு மக்களிடம் இருப்பதில்லை.

மேலும் அத்தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பிராமணர்கள் உள்ளனர். அவர்களைக் கவரும் வேட்பாளரை தென் சென்னையில் நிறுத்தாததும் அவர்களைக் கவரும்பேச்சாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தாததும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்” என்றார்.

மறுகுடியேற்றம்

மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நட்ராஜ் கூறும்போது, “இத்தொகுதியில் 262 வாக்குச்சாவடிகள் உள்ளன. நான் போட்டியிட்டு வென்றபோது 59 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இத்தொகுதியில் சீனிவாசபுரம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசித்தோர் பலர் கண்ணகிநகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களதுஓட்டுரிமை இன்றும் இத்தொகுதியில் உள்ளது. பலர் வீடு மாறி சென்றுள்ளனர். அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. அதை முறையாக செய்தால்தான் சரியான வாக்குப்பதிவு சதவீதம் கிடைக்கும்” என்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பது தொடர்பாக மயிலாப்பூர் மக்கள் நலச் சங்க செயலர் கே.விஸ்வநாதன் கூறியதாவது:இத்தொகுதியில் அபிராமபுரம், மத்திய அபிராமபுரம், ஜெத்நகர், சி.பி.ராமசாமி சாலை, லஸ்அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில்குறைவானவர்களே வாக்களிக்கவந்தனர்.

அது குறித்து விசாரித்தபோது, பலர் வாக்களிக்க வராமல் இருந்ததும், பல குடும்பங்கள் அப்பகுதியில் வாக்காளர் அட்டை வைத்துக்கொண்டு, வெளியூருக்கு குடிபெயர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாக்களிப்பது நமது உரிமை, நமது பெருமையும் கூட. அதை செய்யத் தவறுகிறவர்கள் மீது, ஆதார் அட்டை ரத்து போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒரு முறை, கணக்கெடுத்து, குறிப்பிட்ட வீடுகளில் வசிக்காதோரை, எத்தகைய பலம் மிக்கவராக இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறும்போது, “வாக்களிப்பதற்கான வசதியைத்தான் தேர்தல் ஆணை யம் செய்துக்கொடுக்கும். அவர்கள் வராவிட்டால், தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது.

எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களாலும் வாக்காளர்களின் மனதை மாற்ற முடியாது. அவர்களின் உரிமையை உணர்ந்து, அவர்களாக வாக்களிக்க முன்வர வேண்டும்” என்றார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, “வாக்காளர்கள் வாக்களிக்கவராதது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சொகுசாக இருப்பவர்கள்தான் வாக்களிக்க வருவதில்லை.

வாக்குப்பதிவு குறைவான பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்த இருக்கிறோம். இது ஜனநாயக நாடு. வாக்களிக்காதோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்