வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்கள்!- தவிப்பில் ஆட்டோ ஓட்டுநர்கள்

By க.சக்திவேல்

பேருந்துகளில் செல்ல விரும்பாதவர்கள் விரைவாகச் செல்லவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்கவும், ஆட்டோ, கால் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, ரயில்நிலையம், விமானநிலையத்துக்கு அதிக அளவிலான வெளியூர் பயணிகள் வந்து செல்வதாலும் வாடகை வாகனங்களின் எண்ணிக்கை கோவையில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தேவையைக் கருத்தில்கொண்டு கோவையில் கடந்த ஆண்டு ‘பைக் டாக்ஸி’ சேவையை ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. செல்போன் செயலி மூலம் நாம் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, ‘பைக் டாக்ஸி’ வேண்டும் என பதிவு செய்தால், அந்த இடத்துக்கே வந்து அழைத்துச்சென்று, நாம் கூறும் இடத்தில் இறக்கி விடுகின்றனர். பின்னர், அதற்கான தொகையை பெற்றுக்கொள்கின்றனர்.

இதில், பயணிகளைக் கவர கவர்ச்சிகரமான சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆட்டோ, வாடகை கார்களைவிட கட்டணம் குறைவு என்பதால், பயணிகள் சிலர் பைக் டாக்ஸியை நாடத் தொடங்கினர். இதனால், பல்வேறு வரிகளைச் செலுத்தி வாகனங்களை இயக்கி வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வரி செலுத்துவதில்லை!

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயவேல் கூறும்போது, “ஓராண்டு வாகனக் காப்பீட்டுத் தொகையாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்துகிறோம். இதுதவிர, ஆண்டுதோறும் வாகன தகுதிச் சான்றைப் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும், பாரமரிப்புச் செலவுகளும் உண்டு. ஆனால், இவை ஏதும் இல்லாமல், சொந்தமாக இருசக்கர வாகனத்தை வைத்துள்ள பலரும்,  தங்கள் இருசக்கர வாகனத்தை செல்போன் செயலி மூலம் வாடகைக்கு விடுகின்றனர்.

இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

சொந்த பயன் பாட்டுக்கான வாகனங் களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தகப் பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வர்த்தகப் பயன்பாடு எனில், அதற்கேற்ப வரி மாறுபடுகிறது. ஆனால், சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனத்துக்கு சில வரிகள் விதிக்கப்படுவதில்லை. இதனால், பைக் டாக்ஸியை இயக்குபவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே, எங்களைப் போன்றே,  அவர்களுக்கும் வாடகை வாகனத்துக்கான வரி விதிக்க வேண்டும். இல்லையெனில், அந்த வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்” என்றார். கோவை முழுவதும் சுமார் 200 பைக் டாக்ஸிகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்துள்ளனர்.

சட்டப்படி அனுமதி இல்லை

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டங்களின்படி, இருசக்கர வாகனத்தை வாடகைக்கு இயக்க அனுமதி இல்லை. தற்போது அனுமதி இல்லாமல்தான் செல்போன் செயலி மூலம் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருகின்றனர். வாடகைக்கு வாகனத்தை இயக்க வேண்டுமெனில், ஆண்டுக்கு ஒருமுறை வாகனத் தகுதி சான்று பெற வேண்டும். வாடகை வாகனத்துக்கான காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், வாடகை வாகனத்தை இயக்குவதற்கென தனியே ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். ஆனால், வாடகைக்கு இருசக்கர வாகனங்களை இயக்குபவர்கள் சீருடை அணிவதில்லை. பின்புறம், அமருபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. மாணவர்கள் மற்றும் அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் ஆகியோர் இந்த வாகனங்களை இயக்குகின்றனர். இதனால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

இருசக்கர வாகனத்தை,  டாக்ஸியாக இயக்க வேண்டுமெனில்,  தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும். அவ்வாறு திருத்தங்களை செய்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசிடம் மனு அளிக்க வேண்டும். சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனத்தை, வாடகைக்காக பயன்படுத்தப்படும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கான இழப்பீடு கிடைக்காது.சொந்த பயன் பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்கினால், ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், வாகன தகுதிச் சான்று (எஃப்.சி.), மாசு கட்டுப்பாட்டு சான்று (பியுசி) ஆகியவை இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்கிறோம். இதில், எஃப்.சி. இல்லையெனில் ரூ.500, பியுசி இல்லையெனில் ரூ.1,000, வாகனக் காப்பீடு இல்லையெனில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது.

எனவே, சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனத்தை வாடகைக்காக இயக்குபவர்கள் மீது jtccbe@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்