2011-ம் ஆண்டு தேர்தலின்போது திருச்சியில் ஆம்னி பேருந்து மேற்கூரையில் ரூ.5 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததுபோல இத்தேர்தலிலும் பணம் கடத்தப்படலாம் என்பதால் தமிழக ஆம்னி பேருந்துகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
வரும் 18-ம் தேதி தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பொதுத்தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளன. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தப்படுவதைத் தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கம், பணம்
இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதுடன் சந்தேகப்படும் வாகனங்கள், குறிப்பிட்ட வாகனத்தில் பணம் கடத்தப்படுவதாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தி தங்கம், பணம் போன்றவற்றை பறிமுதல் செய்கின்றனர். தமிழகத்தில் இதுவரை ரூ.105 கோடிக்கும் மேற்பட்ட ரொக்கமும், 807 கிலோ தங்கமும் பிடிபட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பல கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2011-ம்ஆண்டு தேர்தலில் திருச்சி ஷெட் ஒன்றில் ஆம்னி பேருந்தில் பணம்இருப்பதாக அப்போதைய தேர்தல்நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சங்கீதாவுக்கு நள்ளிரவில் தகவல் கிடைத்தது. உடனே அவர் தனது வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளருடன் அந்த ஷெட்டுக்குப் போய் ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் சோதனை செய்தார். அப்போது டிராவல் பேக்குகளில் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பதுக்கிவைத்து அவற்றின் மீது தார்பாய் போட்டுமூடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஆம்னி பேருந்துகளை தீவிரமாகக் கண்காணிக்கும்படி பறக்கும் படையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், அண்மையில் காரின் கதவுகளுக்குள் ஒளித்துவைத்து கோடிக்கணக்கான பணம் கடத்தியபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிக்கியதையும், திருவண்ணாமலையில் இருந்து சென்ற அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்தபார்சலில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதையும் எடுத்துக்கூறி, நூதனமுறையில் பணம் கடத்தப்படுவதைத் தடுக்க வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சோதனையிடும் பணிஇதையடுத்து ஆங்காங்கே ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனையிடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆல் ஆம்னி பஸ் ஓனர்ஸ் அண்ட் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் ஜெயம் பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தில் 2,000 ஆம்னி பேருந்துகள் உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை 1,500. பெரும்பாலான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பார்சலுக்காக தனியாக பார்சல் நிறுவனம் தொடங்கிவிட்டனர். அதனால், முன்புபோல ஆம்னி பேருந்துகளில் பார்சல்கள் ஏற்றப்படுவதில்லை.
மேலும், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் குளிரூட்டப்பட்டவையாக மாற்றப்பட்டுவிட்டதால், அவற்றின் மேற்பகுதியில் லக்கேஜ்கள் ஏற்ற முடியாது. அதன் அடிப்பகுதியில் பயணிகளின் லக்கேஜ்கள் மட்டும் ஏற்றப்படுகின்றன. ஏசி இல்லாத ஆம்னி பேருந்துகளில் மட்டும் மேற்பகுதியில் பார்சல் ஏற்றிச் செல்லப்படுகிறது.
பார்சலை ஸ்கேன் செய்யும் வசதி தற்போது இல்லை. எனவே, பார்சல் அனுப்புபவரே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறார். பார்சல் அனுப்பும்போது அசல் ரசீது, பார்சல் அனுப்பும் நிறுவன முகவரி, நிறுவனத்தின் பதிவு எண் ஆகியவை அவசியம்.
ஆதார் எண் கட்டாயம்
பார்சல் அனுப்ப வருபவரிடம் கட்டாயம் ஆதார் எண் இருக்க வேண்டும். தங்கம், பணம், கஞ்சா, அபின், பெட்ரோல், டீசல் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பார்சலில் அனுப்ப தடை உள்ளது. அதையும் மீறி அனுப்பினால் பார்சல் அனுப்பியவரே பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பார்சல் வாங்குவதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறோம்.
தற்போது தேர்தல் நேரம் என்பதால் மேற்கண்டவற்றை தீவிர கண்காணிப்புடன் சரிபார்த்து பார்சல் புக்கிங் செய்ய வேண்டும் என்றுபணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி பணம் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை புக்கிங் செய்தால்சம்பந்தப்பட்ட பணியாளரே சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் பணம் கடத்துவதற்கான வாய்ப்பில்லை.
இருப்பினும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சட்டவிரோதமாக பணம் கடத்துவதற்கு யாரும் உடந்தையாக இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதால், அரசு அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பார்சலை வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
பயணிகளைக் கண்காணிப்பதற்காக சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் முழுவதும் அண்மையில்தான் ரூ.25 லட்சத்தில் கண்காணிப்புகேமராக்களைப் பொருத்தியுள்ளோம்.
ஸ்கேன் கருவி
விமானத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்துவதைத் தடுக்க விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானநிறுவனங்களும் பார்சலை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவியை தனித்தனியாக வைத்திருக்கின்றன. அதுபோன்ற கருவியை நிறுவுவதற்கு, கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தனித்தனியே ஸ்கேன் கருவி பொருத்தவில்லை.
இருப்பினும், சென்னை கோயம்பேடு, திருநெல்வேலி, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆம்னி பேருந்து நிலையங்களில், எங்கள் சங்கம் சார்பில் பொதுவான ஸ்கேன் கருவியைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago