ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த ஆணையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், மருத்துவர் அல்லாத பணியாளர்கள் என பலர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முறையாக நடைபெறவில்லை, அந்த ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை என்பதால், அவர்கள் மருத்துவ தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்களை முறையாக பதிவு செய்யவில்லை.
எனவே இந்த ஆணைய விசாரணை, அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடையும் வரை அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், இல்லையெனில், அந்த ஆணையத்தில் 21 பேர் அடங்கிய மருத்துவர்கள் நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என அம்மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி, ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர்.
அதேபோல, ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், "ஆணையம் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே விசாரணை சென்று கொண்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை இது தொடர்பாக அளித்துள்ள சாட்சியங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு தேவையான சாட்சியங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
ஆணையத்தின் விசாரணையை தடை கோரும் அதிகாரம் அப்பல்லோ மருத்துவமனைக்கு கிடையாது. மேலும் 90% விசாரணை முடிவடைந்து விட்டது. இந்த சூழலில் விசாரணைக்கு தடை கோர முடியாது. எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்", என கோரினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்ப்பளித்தனர். அதில், ஆறுமுகசாமி விசாரணைக்கு தடை கோரியும், 21 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கக்கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஏற்கெனவே 90% விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க முடியாது.
இருந்தபோதும், ஆணையம் தனது வரம்புக்குட்பட்டு விசாரணையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago