பெரியார் சிலை உடைப்பு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதை உறுதிசெய்கிறது; இரா.முத்தரசன்

By செய்திப்பிரிவு

பெரியார் சிலை உடைப்பு சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதை உறுதிசெய்கின்றன என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை, வகுப்புவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்காகவும், சாதி ஒழிப்புகாகவும், பெண்கள் விடுதலைக்காகவும், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும் தன்வாழ்வையே அர்ப்பணித்த பெரியாரின் சிலை வகுப்புவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.              

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழின் வார இதழில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.கி.வீரமணியை சுட வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் திருச்சியில் கலந்து கொண்ட தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் சோடா பாட்டில்கள் வீசப்பட்டன. கூட்டத்தில் பேசிவிட்டு திரும்பும் பொழுது ஆசிரியர் கி.வீரமணியின் வாகனத்தின் முன்பு கலவரத்தில் இந்துத்துவா சக்திகள் ஈடுபட்டனர். இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.               

இது போன்ற  நிகழ்வுகள் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறுவது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதை உறுதிசெய்கின்றன" என, இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.          

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE