முதல் முறையாக வாக்களிக்கப் போகிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?- வாக்காளர்களுக்கு வழிகாட்டி

By மு.அப்துல் முத்தலீஃப்

முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்த வழிகாட்டும் பதிவு இது.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் வாக்காளர்களுக்குப் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். யாருக்கு வாக்களிப்பது என்கிற குழப்பத்தை வாக்காளர்கள் அவர்கள் மனசாட்சிப்படி தீர்மானிக்க வேண்டும், ஆனால் எப்படி வாக்களிப்பது என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதற்கு இந்தப் பதிவு.

வாக்காளராகப் பதிவு செய்த அனைவரின் பெயர் வாக்குச்சாவடி எண், முகவரியுடன் வாக்காளர் பட்டியலாக கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் உங்களது பெயர் இருந்திருக்கும். இருந்தால் நீங்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர். உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கும்.

தேர்தல் நெருங்கிய நிலையில் முன்பெல்லாம் அரசியல்கட்சிகள் அவர்கள் சின்னத்துடன் வாக்களிக்கும் சீட்டு (பூத் ஸ்லிப்) வீடுதோறும் வழங்குவார்கள். ஆனால் அதற்குத் தடை விதிக்கப்பட்ட பின் மாநகராட்சி, நகராட்சி சார்பில் ஊழியர்கள் வீடுவீடாக பூத் ஸ்லிப் வழங்குவார்கள்.

அதில் எந்த இடத்தில் வாக்குச்சாவடி உள்ளது, எந்தப் பள்ளி, வாக்குச்சாவடி எண் உள்ளிட்டவை இருக்கும். வாக்களிக்கும் பள்ளிக்கு நீங்கள் சென்றால் பலவகையான அறைகளில் பல இடங்களில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருப்பார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது வாக்களிக்கப் போகும் முன் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்து பூத் ஸ்லிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பூத் ஸ்லிப் இல்லை என்றால் வாக்களிக்கப் போகும் வழியில் பல்வேறு கட்சிகள் சார்பில் டேபிள் அமைத்து வாக்காளர் பட்டியலுடன் அமர்ந்திருப்பார்கள்.

அவர்களிடம் உங்கள் பெயர், தெருப்பெயர், வீட்டு எண் சொன்னால் தேடி எடுத்து உங்கள் வாக்காளர் எண், பாகம் எண் உள்ளிட்டவற்றுடன் பூத் ஸ்லிப்பைக் கொடுப்பார்கள். அதில் உள்ள அவர்கள் கட்சி சின்னம் பகுதியை கிழித்துவிட்டு பூத் சிலிப்பை எடுத்துக்கொண்டு உங்களுக்காக ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் செல்லலாம்.

அங்கு ஏற்கெனவே குறிப்பிட்டபடி உங்களுக்குப் பள்ளி முழுவதும் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளைப் பார்த்து குழப்பம் வரும். அப்போது நீங்கள் செய்யவேண்டியது உங்கள் கையில் உள்ள பூத் ஸ்லிப்பில் பாகம் எண் என்று இருக்கும். அதைப் பார்த்து அங்குள்ள அறைகளில் எதில் உங்கள் பாகம் எண் உள்ளது என்பதைத் தெரிந்து அங்குள்ள வரிசையில் நிற்க வேண்டும்.

சில பாகங்களில் பெண்களுக்காக தனி அறை இருக்கும் அதையும் பார்த்து சரியான வரிசையில் நிற்கிறோமா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்கு போகும் முன் கவனிக்கவேண்டியது உங்கள் கையிலுள்ள பூத் ஸ்லிப் ஆவணம் அல்ல. அதை வைத்து வாக்களிக்க முடியாது.

ஆகையால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம். அவை என்னவென்றால்

1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை

2. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)

3. ஓட்டுநர் உரிமம்

4. ஆதார் அட்டை

5. மத்திய மாநில அரசு ஊழியர் என்றால் அந்த அடையாள அட்டை

6. புகைப்படத்துடன்கூடிய வங்கி, அஞ்சலக  கணக்குப் புத்தகங்கள்

 7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு)

 8. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதி வேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டது)

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

10. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்ச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

11. ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

12. அலுவலக அடையாள அட்டை (நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)

இதில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அனைவரிடமும் சாதாரணமாக இருக்கும். இதில் எதையாவது ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் அங்குள்ள வாக்குச்சாவடி அலுவலரிடம் உங்கள் பூத் ஸ்லிப்பைக் கொடுத்தால் அவர் வாங்கிப் பார்த்துவிட்டு சத்தமாக உங்கள் பெயர் வாக்காளர் எண்ணைப் படிப்பார். அதை அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் அவர்கள் வைத்துள்ள வாக்காளர் பட்டியலில் டிக் செய்து கொள்வார்கள்.

பின்னர் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை மற்றொரு அதிகாரி பரிசோதித்து பெயர், வாக்காளர் எண்ணை எழுதி கையெழுத்தை வாங்குவார். அதன்பின்னர் மற்றொரு அலுவலர் விரலில் மை வைத்து வாக்களிக்க அனுப்புவார்.

நீங்கள் வாக்களிக்க தனி இடத்தில் மேசைமீது வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அங்கு நீங்கள் சென்றவுடன் வாக்குப்பதிவு அலுவலர் பொத்தானை அழுத்துவார். அதன் பின்னர் நீங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் உங்களுக்கான சின்னம் உள்ள இடத்தின் அருகே உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.

அப்போது ஒரு பீப் சத்தம் கேட்கும். அப்படிக் கேட்டால் நீங்கள் வாக்களித்ததாக அர்த்தம். நீங்கள் அழுத்திய இடத்தில் சிவப்பு நிறத்தில் விளக்கு எரியும். அத்துடன் நீங்கள் வந்துவிடக்கூடாது.

பக்கத்தில் நீங்கள் எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தீர்கள் என்பதைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் நீங்கள் வாக்களித்த சின்னம் தெரியும். 7 வினாடிகள் இந்தச் சின்னம் தெரியும்.

அதில் நீங்கள் வாக்களித்த சின்னம் இல்லாவிட்டால் நீங்கள் புகார் அளிக்கலாம். இல்லாவிட்டால் ஜனநாயகக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிய திருப்தியுடன் வெளியே வரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்