22 கி.மீ. தூரம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை உயிருடன் மீட்ட மக்கள்

கீழ்பவானி வாய்க்காலில் விழுந்த 60 வயது மூதாட்டி, 22 கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நாகம்மாள் (60). இவர் எளையம்பாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் படித்துறைக்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு துணி துவைக்கச் சென்றார். அப்போது கால் தவறி தண்ணீருக்குள் விழுந்தார். வாய்க்காலில் வேகமாக நீர் செல்வதால், அதில் நாகம்மாள் அடித்துச் செல்லப்பட்டார். துணி துவைக்கச் சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். படித்துறையில் சென்று பார்த்தபோது கரையில் துணிமணிகள் இருந்தன. நாகம்மாளை காணவில்லை. இதனால் அவரை வெள்ளம் அடித்து சென்றிருக்கலாம் என கருதி வாய்க்காலில் பல கி.மீட்டர் தூரம் சென்று தேடினர்.

இந்த நிலையில் பெத்தாம்பாளையத்தில் இருந்து 22 கி.மீட்டர் தொலைவில் வெள்ளோடு கே.கே. வலசு பகுதியில் வாய்க்காலின் நடுவில் ஒரு பெண் அடித்து செல்லப்படுவதை வியாழக்கிழமை காலை 10 மணியளவில், கரையில் இருந்தவர்கள் பார்த்து, அவரை மீட்டனர். விசாரித்ததில் அவர் பெத்தாம்பாளையத்தை சேர்ந்த நாகம்மாள் என்பது தெரியவந்தது.

பெத்தாம்பாளையத்தில் இருந்து வெள்ளோடு 22 கி.மீட்டர் தூரம் உள்ளது. சுமார் 20 மணி நேரம் அவர் வெள்ளத்திலேயே தத்தளித்து சென்ற போதும், நீரில் மூழ்காமல் இருக்க கை, காலை நீரில் அடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனால், அவர் 20 மணி நேரம் நீரில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிர் பிழைக்க முடிந்துள்ளது. பெருந்துறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகம்மாள் வீடு திரும்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE