சேலம் என்று உச்சரித்த உடனேயே எல்லோருக்கும் ஞாபகம் வருவது மாம்பழம் மட்டும்தான். ‘மாம்பழமாம் மாம்பழம்… மல்கோவா மாம்பழம்…சேலத்து மாம்பழம்… தித்திக்கும் மாம்பழம்...’ என சேலத்தின் அடையாளமான மாம்பழத்தை குறிப்பிட்டு பாடலே எழுதப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் சுவையும், மனமும் கொண்டவை சேலத்து மாம்பழங்கள்.
கிருஷ்ணகிரி, தருமபுரியெல்லாம் சேலத்துடன் இணைந்திருந்தபோதுதான், மாங்கனிக்கு சேலம் சிறப்பு பெற்றிருந்தது என்று கூறுவோரும் உண்டு. ‘அதெல்லாம் கிடையாது. சுவையான மாம்பழம் என்றால், இன்றைக்கும் அது சேலத்து மாம்பழம் மட்டுமே’ என்கின்றனர் சேலம் மாவட்டத்தினர்.
மாம்பழ விற்பனையாளரும், ஓய்வுபெற்ற அரசு ஊழியருமான சந்திரசேகரன் கூறும்போது, “பண்டையக்காலம் முதலே மாம்பழ விளைச்சலுக்கு புகழ்பெற்றது சேலம். அப்போது 200-க்கும் மேற்பட்ட நாட்டு ரகங்களில் மாம்பழங்கள் இங்கிருந்தன. அவற்றில் பெரும்பாலான நாட்டு ரகங்கள் அழிந்துவிட்டன.
சுவையில் மயங்கிய ஆங்கிலேயர்கள்!
சேலம் மாவட்டம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி. மாக்னசைட், பாக்ஸைட், லைம்ஸ்டோன், கிரானைட், குவார்ட்ஸ் உள்ளிட்ட கனிமங்கள் இங்கு பரவலாகக் கிடைக்கின்றன.ஆங்கிலேயர் ஆட்சியின்போது சேலத்தில் வசித்த ஆங்கிலேயர்கள், மாம்பழத்தின் சுவையில் மயங்கினர். மாம்பழம் விளைந்த பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்தபோது, மண்ணில் கால்சியம் அதிகமுள்ள இடங்களில் விளைந்த மாம்பழங்கள் சுவையாக இருந்ததைக் கண்டறிந்தனர்.
குறிப்பாக, சேலம், மேட்டூர் வட்டாரங்களில் சுவையான மாங்கனிகள் கிடைத்தன. எனவே, இந்த வட்டாரங்களில் கால்சியம் அதிகமுள்ள பகுதிகளில் மாமரங்களை அதிக அளவில் நடுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். அவ்வாறு, ஆங்கிலேயர்கள் 120 ஆண்டுகளுக்கு முன்னர் நட்டுவைத்த மாமரங்கள் சில, அயோத்தியாப்பட்டணம் அருகேயுள்ள வரகம்பாடி, வாழையடித்தோப்பு கிராமங்களில் உள்ளன.
மல்கோவா, அல்போன்ஸா எனப்படும் குண்டு மாம்பழம், இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுச்சாலை ஆகிய ரகங்கள் சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனிகள். இவை, வரகம்பாடி, வாழையடித்தோப்பு, சேலத்தை அடுத்த செட்டிச்சாவடி, மேட்டூர் வட்டாரத்தில் வீரக்கல், சோரகை, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் விளைகின்றன.
கேக் போல துண்டாகும்; சாறு வழியாது!
இதுபோன்ற இடங்களில் விளையும் மாம்பழங்கள் கெட்டியாக இருக்கும். முதிர்ந்த பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் பழுத்த பின்னர், 15 நாட்கள் வரை அழுகாமல் இருக்கும். மாம்பழங்களைத் துண்டுகளாக நறுக்கும்போது, கேக் போல துண்டுகளாகும், ஆனால், சாறு வடியாது.
சேலம் மாவட்டம் தவிர பிற இடங்களில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அவற்றின் தரமும், சுவையும் சேலத்துக்கு அடுத்தபடியாகவே இருக்கும். அதனால்தான், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் இன்னமும் சீசன் தொடங்கியதும் சேலத்து மாம்பழங்களையே வாங்கிச் சுவைக்க விரும்புகின்றனர்” என்றார்.
சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வாழையடித்தோப்புக் கிராமத்தில், ஆங்கிலேயர்களால் நடப்பட்ட 120 ஆண்டுக்கும் மேலான பழமையான மாமரங்களை பராமரித்து வருகிறார் விவசாயி காசிராஜன்(50). அவரது தந்தை ஆறுமுகம் பராமரித்து வந்த மாந்தோப்பு, இவரால் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.
120 ஆண்டு பழமையான மாமரங்கள் குறித்து விவசாயி காசிராஜன் கூறும்போது, “ஒரு மரம் படர்ந்துள்ள பரப்பை வைத்தே அதன் வயதைக் கணக்கிட முடியும். எங்கள் தோட்டத்தில் 120 ஆண்டுக்குமேல் வயது கொண்ட சில மரங்கள் உள்ளன. இவை 30 அடி நீளம் வரை கிளைகளைப் படரவிட்டு வளர்ந்தன. அதிக எடை கொண்ட கிளைகள் சில முறிந்ததால், அது கீழே விழாத வகையில் மரத்தைச் சுற்றி மண்மேடு அமைத்தோம். கிளைகள் வெகு உயரமாக இருந்ததால், அவற்றையும் அவ்வப்போது கழித்துவிடுவோம்.
வயதால் கூடும் சுவை!
மரத்தின் அதிக வயது காரணமாக, அதன் பழங்களின் சுவை கூடிக்கொண்டே இருக்கிறது. சேலத்தில் விளையும் மாம்பழங்களின் சுவை காரணமாக, அவற்றை தேடி வந்து வாங்கிச் செல்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். மாங்கனிக்குப் புகழ்பெற்ற மாவட்டமாக சேலம் இருந்தாலும், மாம்பழ விவசாயத்தை மேம்படுத்த அரசிடமிருந்து உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இங்கு, மாங்கனி ஆராய்ச்சி மையம், மாம்பழங்களை விற்பனை செய்வதற்கான அங்காடி ஆகியவற்றை அமைத்தால், சேலத்து மாம்பழத்தின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும். அரசு கருணைகாட்ட வேண்டும்” என்றார்.
பழங்களின் அரசனாக கருதப்படும் `மாம்பழம்’...
மாங்கனிக்காக விநாயகரும், முருகனும் சண்டையிட்டுக் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மாங்கனி கிடைக்காத கோபத்தில்தான் ஆண்டிக்கோலம் பூண்டி பழனிக்குப் புறப்பட்டார் தண்டாயுதபாணி!
வரலாற்றின்படி பார்த்தால்கூட, இந்தியர்கள் மாம்பழங்களை 3,000 ஆண்டுகளுக்கும்மேலாக சுவைத்து மகிழ்ந்துள்ளனர். என்றாலும், ஐரோப்பியர்களுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் இதன் சுவை தெரிந்துள்ளது.
ஆங்கிலத்தில் `மாங்கோ’ என்கிறார்கள் மாம்பழத்தை. இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்த்துக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். அதனால்தான், விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சுவைத்துச் சாப்பிடுபவை போர்த்துக்கீசியர்களின் முயற்சியால் வந்தவை. உலகுக்கு மாம்பழங்களை அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். உலகில் ஏறத்தாழ 1,000 வகையிலான பழங்கள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.
ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருக்கும் மாமரம். கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். வெயிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க, மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்.
உருண்டையாக, சற்றே நீள் உருண்டையாக, முன்பாகம் கிளியின் மூக்குபோல வளைந்த நிலையில் என பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. இதேபோலத்தான் வண்ணங்களும் பலவிதம் உண்டு. கிரிக்கெட் பந்து அளவிலிருந்து, தர்பூசணி அளவு வரையிலும் வகைவகையான அளவுகளில் மாம்பழங்கள் உள்ளன. இந்தியாவும், ஆசியாவும் உலகுக்கு அளித்த பரிசுதான் மாம்பழம்.
வைட்டமின் ஏ, சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு, வேறு பல குணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மாம்பழம் வீட்டுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும், மாவிலைத் தோரணங்களை வீட்டு வாயில்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்டம் வரும் என்றும் நம்புகிறார்கள். உண்மையில் `பழங்களின் அரசன்’ மாம்பழம்தான் என்று உறுதியாய் கூறலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago