தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகளை அகற்றிவிட்டு, இந்தி மொழியில் உள்ள கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் இல்லை, மராத்தி மொழி கல்வெட்டுகளே உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ பதிவு குறித்து,பெரிய கோயிலின் இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர், தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி.985-ம் ஆண்டு அரியணையில் ஏறினார். கலை மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கியதால் தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டினார். கி.பி.1003-ம்ஆண்டு தொடங்கிய இந்தக் கோயிலின் கட்டுமானப் பணி 1010-ம் ஆண்டு நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின், சேரர்களை வெற்றிபெற்றதன் நினைவாக கேரளாந்தகன் நுழைவு வாயிலை ராஜராஜ சோழன் எழுப்பினார். ராஜராஜ சோழன் காலத்தில் கோயில் பணியாளர்கள் விவரம், கொடுக்கப்பட்ட தானங்கள், கோயில் நிர்வாகம், ஆட்சி முறை, பாதுகாப்பு முதலான பல தகவல்கள் அனைத்தும் கோயில் முழுவதும் கல்வெட்டுகளாகப் பதிவு செய்யப்பட்டன. இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் நேர்த்தியாக கோயிலில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
மராட்டியர் காலத்தில் கோயிலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகையின் சுவரில் மராத்தி மொழியின் தேவநாகரி எழுத்துகளைக் கொண்டு கோயில் திருப்பணிகள் தொடர்பான கல்வெட்டுகளைப் பொறித்து வைத்திருந்தனர்.
இவற்றையே, தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகளை அகற்றிவிட்டு புதிதாக வைக்கப்படும் இந்தி மொழியில் அமைந்த கல்வெட்டுகள் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும். இது, வரலாற்று ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருச்சுற்று மாளிகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், வாசகங்கள் அடங்கிய கருங்கற்கள் அனைத்தும் கோயிலின் கிரிவலப்பாதையை சீரமைத்தபோது பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. அவற்றைப் பாதுகாப்பாக கோயிலின் தென்மேற்குப் பகுதியில் பூட்டிய அறையில் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மொழி கல்வெட்டுகளுக்குப் பதிலாக இந்தி மொழி கல்வெட்டுகள் அமைக்கப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து, தமிழக நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் நேற்று பெரிய கோயிலுக்கு வந்து, அங்குள்ள மராத்தி மொழி கல்வெட்டுகளை பார்வையிட்டதுடன் அவற்றைப் படமாக பதிவு செய்துகொண்டு அங்கிருந்து சென்றனர்.
எத்தனை கல்வெட்டுகள் உள்ளன?
"தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனால் பொறிக்கப்பட்ட 64 கல்வெட்டுகளும், ராஜேந்திர சோழனால் பொறிக்கப்பட்ட 21 கல்வெட்டுகளும், 2-ம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு ஒன்றும், முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு ஒன்றும், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கால கல்வெட்டு ஒன்றும், மூன்றாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு ஒன்றும், பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும், விஜயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 4 கல்வெட்டுகளும், மராட்டியர் கால கல்வெட்டுகள் நான்கும் உள்ளன.
இந்த மராத்தி மொழி தேவநாகரி எழுத்துவடிவ கல்வெட்டுகள்தான் தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. இக்கல்வெட்டுகள் மராத்தி மொழியில்தான் பொறிக்கப்பட்டுள்ளன, இந்தி மொழியில் அல்ல. மராத்தி மொழியானது இந்தி-தேவநாகரி என்னும் வரிவடிவ அமைப்பில் எழுதப்படுவதால் பார்ப்பதற்கு இந்தி போலத் தோன்றும். ஆனால், இந்தியும் மராத்தியும் வேறு" என கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago