தமிழகத்தை நோக்கி ஃபானி புயல் வருமா?- கனமழை எப்போது இருந்து பெய்யும்?- தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

By க.போத்திராஜ்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், தமிழகத்தை நோக்கி ஃபானி புயல் நகருமா, தமிழகத்துக்கு மழை எப்போது இருந்து பெய்யும், கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏப்ரல் 29ம் தேதியன்று தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்புள்ளதாகவும், இப்புயலுக்கு ‘ஃபானி’ என பெயரிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுமா?, தமிழகத்தை நோக்கி வருமா?, குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் உருவாகும் புயல் திசைமாறிச் செல்லும் என்று கடந்த கால நிகழ்வுகள் கூறுகின்றன.

இந்த புயலால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா?, எப்போது இருந்து மழை கிடைக்கும்? என்பது குறித்து ஃபேஸ்புக்கில் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் இந்து தமிழ்திசை(ஆன்லைன்) சார்பில் விளக்கம் கேட்டோம். அவர் அளித்த பதில் :

தமிழக கடற்பகுதியில் எம்ஜேஓ(MJO) என்ற காரணியால் ஏற்பட்ட வெப்பச்சலனத்தால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், வரும் நாட்களில் இந்த மழை குறைந்து நின்றுவிடும்.

அதற்கு பதிலாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் நாட்களில் மண்டலமாக வலுப்பெற்று, அதன்பின் புயலாக மாறும். அதற்க 'ஃபானி' என்று வங்கதேசம் சார்பில் பெயரிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஏப்ரல் மாதம் நமக்கு மழை கிடைக்கும் மாதம் அல்ல. கடந்த கால ஆய்வுகளைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் உருவான பெரும்பாலன புயல்கள் அனைத்தும் பர்மா கடற்பகுதியை நோக்கியே சென்றுள்ளது. ஒரேமுறை மட்டுமே அதாவது கடந்த 1966-ம் ஆண்டு உருவான புயல்மட்டுமே தமிழகத்தில் மழையைக் கொடுத்திருந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் புயல் கரையைக் கடந்து மழையைக் கொடுத்தது

அதன்பின் தற்போது உருவாகி இருக்கும் ஃபானி புயல் தமிழகத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக ஐரோப்பிய மாடல்களும், ஜிஎப்எஸ் ஆகிய இரு மாடல்களும் தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஆனால், இது தமிழகத்தை நோக்கி வரவும், தமிழகத்தில் கரையைக் கடக்கவும், அல்லது தமிழகக் கடற்கரையொட்டி வந்து அங்கிருந்து திசைமாறி ஆந்திரா கடற்பகுதியை நோக்கி திரும்பி கரையைக் கடக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை கடலூர் கடற்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்து நெல்லூர் பகுதிச் சென்றால் மிகபலத்த மழையைக் கொடுக்கும். அதேபோல சென்னைக்கு அருகே வந்தாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையைக் கொடுக்கும்.

ஆனால் இப்போதுள்ள நிலையில் புயல் குறிப்பிட்ட திசையில்தான் நகர்ந்து வருகிறது என்பதை உறுதியாகக்கூற முடியாது. ஏனென்றால், இம்மாதம் 30-ம் தேதியில் இருந்துதான் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், இன்னும் 5 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.

 புயல் தமிழகத்துக்கு அருகே வரப்போகிறது என்பது உறுதி, ஆனால், எந்த அளவுக்கு அருகே வரப்போகிறது, மழை எவ்வளவு கிடைக்கும், எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கும் என்பதை அடுத்து வரும் நாட்களில் அறியலாம்.

கனமழை பெய்யுமா?

இப்போது உருவாகியுள்ள புயல் மேற்கு திசையை நோக்கி, உயர்அழுத்தத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எப்போதும் புயல் உயர்அழுத்தத்தின் அருகேதான் நகரும். அரேபியக் கடலில் இருந்து உருவாகியுள்ள இந்த உயர்அழுத்தம் இந்த புயலை தடுத்து நிறுத்துகிறது.

இதனால் புயல் அங்கேயே நிற்க வாய்ப்புள்ளதால், தமிழகத்துக்கு நல்ல மழையை அதாவது கனமழை முதல் மிக கனழை வரை  பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இவையெல்லாம் முதல்கட்ட கணிப்புகள்தான். இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், வடதமிழகத்தில் நல்ல மழை பெய்வதற்கான சூழல் இருக்கிறது.

இன்னும் இரு நாட்களில் தமிழகத்துக்கு எவ்வளவு மழை கொடுக்கும், காற்று எப்படி வீசும், எந்தெந்த மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஆகியவிவரங்கள் தெளிவாகத் தெரிந்து விடும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்