அண்மையில் வெளியான ரஜினியின் `பேட்ட’ திரைப்படம் பெரிய வெற்றி. மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்” என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு “சுப்பிரமணி சார் சொல்லிட்டா, மொத்த திரையுலகமும் சொன்ன மாதிரி. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் பதில் சொன்னார் ரஜினிகாந்த். தமிழ்த் திரையுலகில் சுப்பிரமணியத்துக்கு இருக்கும் செல்வாக்கிற்கு, சூப்பர் ஸ்டாரின் இந்த பதிலே உதாரணம். ஏற்ற, இறக்கம் நிறைந்த திரைத் துறையில் திரைப்பட விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர், ஃபைனான்ஸியர் என அனைத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக வெற்றியைத் தக்கவைத்திருப்பதே இவரின் சாதனை.
பெயரிலேயே திருப்பூரை தன் அடையாளமாக வைத்திருக்கும் சுப்பிரமணியம், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத மனிதர். வறுமை விரட்டியடித்துக் கொண்டே இருந்த வாழ்வில், வெற்றிக்கோட்டையை விரைவிலேயே எட்டிப்பிடித்தவர்.
வண்டிக்காரன் மகன்!
“கைவண்டி இழுக்கும் தொழிலாளியின் மகன் நான். திருப்பூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமராஜபாளையம் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி திருப்பூருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தோம். அளவான குடும்பம் என்றாலும்கூட, வீட்டில் நிரந்தர விருந்தாளி வறுமை. அப்பா, அம்மா, அக்கா மூன்று பேரும் வேலைக்குப்போய் உழைத்தாலும், நாளைய பொழுது கேள்விக்குறியாகவே தொடர்ந்தது.
கடைசிப் பையனாகப் பிறந்த காரணத்தால், எனக்கு பள்ளிக்கூடம் போகும் வாய்ப்புக் கிடைத்தது. ‘சுப்பிரமணி கணக்கில் கெட்டிக்காரன்’ என்று யாராவது சொல்லும்போது, எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியாக இருக்கும். கணக்குப் பாடத்தில் 100-க்கு 100 எடுக்கவில்லை என்றால், என்னால் தூங்க முடியாது. ஒரு மதிப்பெண் குறைந்தாலும் ‘எங்கே தப்பு கண்டுபிடிச்சீங்க’ என்று வாத்தியாரிடம் சண்டைபோடும் அளவுக்கு கணக்கில் ஈடுபாடு அதிகம்.‘ஒரு வேலையாக கோபிசெட்டிபாளையம் போய்வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப்போன அப்பா, திரும்பி வரவே இல்லை. ‘திடீரென இறந்துவிட்டார்’ என்ற தகவல்தான் எங்களுக்கு வந்தது. அப்போது எனக்கு வயது 13. நானும், அம்மா லிங்கம்மாளும் துணைக்கு ஒரு உறவினரை அழைத்துக்கொண்டு,அப்பாவின் சடலத்தைக் காண்பதற்குப் புறப்பட்டோம்.
வழியெல்லாம் கடவுளிடம் ‘அப்பா உயிரோடு இருக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்துகொண்டே போனேன். ஆனால், ஏமாற்றமே காத்திருந்தது. `இறந்தவரின் உடலை எந்த வண்டியிலும் ஏற்ற முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். அப்பாவின் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று, உறவினர்களுக்கு முகத்தையாவது காட்டிவிட வேண்டும் என்று அம்மாவுக்கு துடிப்பு இருந்தது. ஆனால், அந்த ஆசையை நிறைவேற்றும் சக்தி எங்களிடம் இல்லை. உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய சூழலில், ஊரில் இருந்த அக்காவுக்குகூட தெரியப்படுத்தாமல், நான்குபேர்கூட துணைக்கு இல்லாத நிலையில் அடக்கம் செய்துவிட்டு, ஊர் திரும்பினோம். சிறுவயதில் எனக்குள் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்பாவின் இழப்பைவிட, அந்த இயலாமை நிறைந்த தருணத்தை எப்போது நினைத்தாலும், கண்ணில் ஈரம் கசிந்துவிடும்.
வாழ்க்கைச் சக்கரம்!
அப்பா இறப்பதற்கு முன்பே, அக்காவுக்கு திருமணம் முடிந்திருந்தது என்பதே ஒரே ஆறுதல். அதன்பிறகு அம்மாவின் `தினக் கூலி’ வாழ்வில், வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக உருண்டுகொண்டிருந்தது. ஒரேயொரு
பள்ளிச் சீருடையை வாரம் ஐந்து நாட்களும் போடும் அளவுக்கு வறுமை சூழல். `சட்டையில் அழுக்குபட்டால், நாளைக்குப் பள்ளிக்கூடம் போகமுடியாதே’ என்பதே என்னுடைய சிறுவயதில் நான் அதிகம் பட்ட கவலை. தினமும் 12 கிலோமீட்டர் தொலைவு நடந்து பள்ளிக்குப் போகிற பிள்ளைக்கு செருப்பு வாங்கிக் கொடுக்க முடியாத அம்மாவிடம், மாற்றுச் சீருடை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கும் துணிவு எனக்கு கொஞ்சமும் இல்லை.
ஒன்றும் அறியாதவர்களை கொங்குப் பகுதியில் `வெள்ளச்சோளம்’ என்று குறிப்பிடுவார்கள். `அம்மா, நான் இதை செய்யப்போகிறேன்’ என்று சொன்னால், ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேட்கமாட்டார். `ஒருத்தர் ஒண்ணு சொல்லாதபடிக்கு நடந்துக்கப்பா’ என்று மட்டுமே சொல்வார். அப்பா இல்லாத பிள்ளை, தப்பா வளரக்கூடாது என்னும் கவலை மட்டும்தான் அவருக்கு. நானும், என் அம்மாவின் மனம் வருந்தும்படியான எந்த செயலையும் செய்தது இல்லை. அதேபோல, சிறுவர்களுக்கே உரிய எந்த ஆசையும் எனக்குள் இருந்ததில்லை. அம்மாவுக்கு நான் அடிக்கடி வைக்கிற ஒரே செலவு, சினிமா டிக்கெட் வாங்குவது மட்டும்தான்.
குறவஞ்சி!
1960-ல் கோவை ராயல் திரையரங்கில் நான் பார்த்த முதல் திரைப்படம் குறவஞ்சி. எட்டு வயதிலிருந்து 18 வயதுவரை நான் பார்த்த நூறு படங்களின் பெயர்களையும், தேதியையும் குறித்து வைத்திருக்கும் அளவுக்கு திரைப்படம் பார்ப்பதில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் அதிகம்.
நன்றாகப் படிக்கும் நான், நல்ல அரசாங்க வேலைக்குப் போகவேண்டும் என்பதே அம்மாவின் ஆசை. கல்லூரியில் பி.யூ.சி. வகுப்பு சேர ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அம்மாவிடம் கையில் பணமில்லை. நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கடன் கேட்டுப்போனார். `உன் பையன் படிச்சி என்ன கிழிக்கப்போறான். வேலைக்குப் போகச்சொல்லு’ என்று அவமானப்படுத்தி அனுப்பினார். கடன் தர முடியாது என்று அவர் சொல்லி
யிருந்தால்கூட பரவாயில்லை. அவமானப்படுத்தியது எனக்குள் பெரிய காயத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் பல இடங்களில் அலைந்து, வேறொரு உறவினரிடமிருந்து 100 ரூபாய் பணத்தை திரட்டிவிட்டார் அம்மா.
தாய் மீது சத்தியம்!
ஒருமுறை பணம் கட்டுவதற்கே இத்தனை அவமானங்களைச் சுமக்கிற அம்மா, நான் தொடர்ந்து படித்தால் அடிக்கடி இதேபோல கஷ்டப்படுவார் என்று தோன்றியது. அதனால், நான் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், படிக்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டேன். இனியும் வீட்டுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று சத்தியம் செய்துவிட்டு, ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.
திருப்பூரில் ஸ்ரீரங்க செட்டியார் சன்ஸ் என்ற கடைதான், எனக்கு புதிய வாயிலை திறந்துவிட்டது. மாதம் 40 ரூபாய் சம்பளத்தில் சேல்ஸ்மேன் வேலை. மாதத்தில் 11 நாட்கள் கேரளாவில் உள்ள கடைகளுக்குச் சென்று, ஆர்டர் பிடித்து வரவேண்டும்.
என் முதலாளி சதாசிவம், ஒரேயொரு முறை என்னுடன் வந்து, எப்படி கடைக்காரர்களிடம் பேசி, வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அதற்குப் பிறகு ஒருமுறைகூட அவர் வரவேண்டிய தேவை உருவாகவே இல்லை. வீட்டை மறந்துவிட்டு, கிடைத்ததைச் சாப்பிட்டு தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தினேன். கொடுக்கிற சம்பளத்துக்கு வேலைசெய்யாமல், நான் எடுத்துக்கொண்ட பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற மனநிலையோடு எப்போதும் வேலை செய்வேன். வேலை முடிந்தபிறகு அறையில் அடைந்துகிடக்காமல், தினம் ஒரு படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டேன். திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சின் போன்ற பெரிய நகரங்களில் புதிய படங்கள் உடனடியாக ரிலீஸ் ஆகும். மலையாளம், இந்தி, ஆங்கிலம் என ஏதோ ஒரு படத்தை தினமும் பார்த்துவிடுவேன். ஊருக்குத் திரும்பியதும் பார்த்த படத்தின் கதையை சக நண்பர்களிடம் உணர்வுப்பூர்வமாக விளக்கிச் சொல்வது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
ரசிகன்!
வேலைக்குப்போய் கையில் பணம் வரத் தொடங்கியபிறகு, தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால், புதுப் படங்களை முதல்நாளே பார்த்துவிடுவேன். அப்போது ஒரு நாளில் மாலை மற்றும் இரவுக் காட்சி என்று இரண்டு காட்சிகள் மட்டுமே இருக்கும். சிறப்பு தினங்களில் மட்டும்தான் நான்கு காட்சிகள். ஒரே நாளில் நான்கு திரைப்படங்களைப் பார்ப்பது, சாகசம் செய்த உணர்வைக் கொடுக்கும். பார்த்த படங்களில் கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால், நிச்சயம் இன்னும் சிலமுறை பார்த்துவிடுவேன். தெய்வமகன் திரைப்படத்தை 49 முறை பார்த்திருக்கிறேன்.
திரைப்பட செய்திகளை முதன்மைப்படுத்தி வரும் பொம்மை, பேசும்படம் போன்ற சினிமா பத்திரிகைகளை வாங்கி, ஒரு திரைப்படம் உருவானபோது நடந்த சுவையான நிகழ்வுகள், புள்ளிவிவரங்கள் போன்றவற்றை தெரிந்துகொண்டு, மற்றவர்களிடம் சொல்வதில் ஒரு பரவசம் கிடைக்கும்.
ஹவுஸ்ஃபுல்!
தமிழ்நாட்டில் சினிமா ஒரு தனி மதமாகவே இருந்தது. திரையரங்கமே கோயில். படித்தவர்கள், பாமரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என அனைவரும் படையெடுத்து வந்து படம் பார்ப்பார்கள். பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகஇருக்கும். இன்றைக்கும் இதே நிலைதான் தொடர்கிறது. மக்கள் எந்தக் காட்சியை ரசிக்கிறார்கள், எதற்கு கை தட்டுகிறார்கள் என்ற ரகசியங்களை என்னை அறியாமலேயே கற்கத் தொடங்கினேன். ஒரு படம் பிடித்துவிட்டால், சாதாரண நடிகர்கள் நடித்தபோதும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதையும், பிடிக்காதபோது எம்ஜிஆரே நடித்திருந்தாலும் எப்படிப் புறக்கணிக்கிறார்கள் என்பதையும் தொடர்ச்சியாக கவனித்து வந்திருக்கிறேன். அதேசமயம், ஏற்றுக்கொண்ட வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடித்துவிடுவேன். எந்தக் காரணத்துக்காகவும் என்னுடைய சினிமா பார்க்கும் ஆர்வம், வேலையில் இடைஞ்சலாக இல்லாதபடி பார்த்துக் கொள்வேன்.
ஈரோடு ஜவுளி சந்தையில் இரண்டு நாட்கள், பல இடங்களில் இருந்து வரும் வியாபாரிகளிடம் தரமான பொருட்களை நல்ல விலைக்குப் பேசி, கடைக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கும். 2 மணி நேரம் தூங்கிவிட்டு, பேய்த்தனமாக வேலை செய்யும் என்னை, முதலாளிக்கும் மிகவும் பிடிக்கும். விடுமுறை எடுக்க மாட்டேன். கணக்கு வழக்கில் மிகச் சரியாக நடந்து கொள்வேன். பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணத்தையும் என்னை நம்பி ஒப்படைப்பார்கள். திறமையாகவும், நேர்மையாகவும் இருந்தால், அனைவரும் நம்மை விரும்புவார்கள் என்ற உண்மை என்னை மிகவும் ஈர்த்தது.
காக்கிச்சட்டை!
என்ன வேலை செய்தாலும், கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தேன். ‘சுப்பிரமணி சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று மற்றவர்கள் நம்பும்போது, அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பேன். காவல் துறைக்கு ஆள் எடுப்பதாக விளம்பரம் பார்த்து, விண்ணப்பித்து, வேலைக்கு தேர்ச்சியும் அடைந்தேன். மாதம் 480 ரூபாய் சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தபிறகு, வாழ்க்கை செட்டிலாகி விட்டதாக தோன்றியது. நான் முதலாளியிடம் சென்று, பணியிலிருந்து விலகுகிறேன் என்றேன். ‘உன்னுடைய சுபாவத்துக்கு, போலீஸ் வேலை உனக்கு சரிவராது. சொந்தமாக தொழில் செய்தால் நல்ல உயரங்களைச் சீக்கிரமே அடைவாய்’ என்று ஆலோசனை கூறினார். அவர் சொல்வது சரியென எனக்கும் பட்டது.
முதலாளி!
நிரந்தரமற்ற வேலையில் 120 ரூபாய் சம்பளம் வாங்கும்போது, மாதம் 480 ரூபாய் வரும் அரசாங்க உத்தியோகத்தை வேண்டாம் என்று சொன்னேன். அந்த வயதில் இது பெரிய, துணிச்சலான முடிவு. என் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், `அடுத்த மாதத்தில் இருந்து உனக்கு 480 ரூபாய் சம்பளம்’ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதலாளி.
இருபத்தி ஐந்து வயது வரை வேலை செய்துகொண்டு, பொழுதுபோக்குக்காக படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, திரைத் துறையில் பங்கெடுக்கும் புதிய வாய்ப்பு திடீரென வந்தது. எங்கள் பகுதியில் ஓடாத ஒரு மின்சார மீட்டரை நண்பர்கள் கழட்டி வைத்தனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்து விட்டதாகக் கூறி, நண்பர்களை கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றபோது அதிர்ச்சியாக இருந்தது.
ஊரில் திமுகவில் செல்வாக்குள்ள, முன்னாள் எம்எல்ஏ உதவியுடன் காவல் நிலையம் சென்று முறையிட்டோம். `இது ஒரு குத்தம்னு சின்னப்பசங்கள புடிச்சிட்டு போறீங்களே?’ என்று அவர் சண்டை போட்டதும், வழக்கு எதையும் பதியாமல் விட்டு விட்டனர் போலீஸார்.
இந்த உதவிக்கு நன்றிக் கடனாக, அப்போது திமுகவில் நாவன்மையால் அனைவரையும் கட்டிபோடும் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் ‘நாவலர் மன்றம்’ தொடங்குவது என்று முடிவு செய்தோம். அதற்காக, நிதி திரட்டும் வகையில், திருப்பூரில் அதே கட்சியை சேர்ந்த, யூனிவர்சல் தியேட்டர் முதலாளியிடம் இரண்டு காட்சிகள் வாடகைக்கு எடுத்து, திரைப்படம்போட அனுமதி கேட்டோம். கோவிந்தராஜ், முத்துசாமி ஆகிய நண்பர்களுடன் நானும் இணைந்து, ஆளுக்கு ரூ.100 முதலீடு செய்தோம். ஆனால், போட்ட முதலீடு அனைத்தும் நஷ்டமானது. தியேட்டர் வாடகை பணம்கூட திரும்பிவரவில்லை.
நியாயமாக, ‘இது நமக்கு ஒத்துவராது’ என்று விலகி இருக்க வேண்டும். திரைப்படம் திரையிட்டு மொத்தப் பணமும் நஷ்டமடைந்துவிட்டது என்பதையறிந்தவர்கள், ‘உனக்கு எதற்கு இந்த வேலை’ என்று கேட்டனர். நஷ்டம் ஏமாற்றமாக இருந்தது என்றால், மற்றவர்களின் பரிகாசம் அவமானமாக இருந்தது.
இரு கோடுகள்...
ஆனாலும், நல்ல படத்தை திரையிடாமல், மக்கள் வந்து பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்றும் தோன்றியது. தோல்வியை ஏற்றுக்கொண்டு விலகிவிடுவது, அல்லது அடுத்த முயற்சியை இன்னும் கவனமாக மேற்கொள்வது என்ற இரு முடிவுகள் என் முன்னால் இருந்தன. எந்தக் கோட்டை நான் தொடுவது? நான் தோல்வியை பாடமாக ஏற்று, அடுத்த முயற்சியை கவனமாக மேற்கொள்வது என்ற முடிவை எடுத்தேன். அந்த முடிவுதான், என் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது...
இடைவேளை... நாளை வரை...
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago