உடுமலை அருகே பல ஆண்டுகளாக நடைபெற்ற மணல் கொள்ளையால் பாலைவனமாக மாறியது பாலாறு. குடிநீர் திட்டங்கள் செயல் இழந்ததால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு மழைக்காலங்களில் அதிக நீர்வரத்து இருக்கும்போது உபரி நீர் பாலாற்றின் வழியாக திறக்கப்படுவது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளில் உபரி நீர் திறக்கும் அளவுக்கு அணைக்கு நீர் வரத்து இல்லை. மழைக்காலங்களில் சிற்றோடைகளின் வழியாக செல்லும் நீர் பாலாற்றில் கலக்கும். திருமூர்த்தி மலையில் தொடங்கி பல்வேறு கிராமங்களைக் கடந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் ஆழியாற்றில் ஒன்றாக கலக்கிறது பாலாறு. இந்த ஆற்றில் பல ஆண்டுகளாக தொடர்ந்த மணல் கொள்ளையால் தற்போது பாலைவனமாக காட்சி தருகிறது. ஆற்றோர கிராம மக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய்களும், நீரூற்று கிணறுகளும் வறண்டு கிடக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘முன்பு மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றின் இரு கரைகளும் பசுமையாக காணப்பட்டது. ஆறு முழுவதும் மணல் திட்டுக்கள் நிரம்பி காணப்பட்டன. பருவ மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிவிடும். மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குள் அடுத்த பருவ மழை கைகொடுத்து விடும். அதனால் பாலாற்றை நம்பி ஊராட்சிகளின் சார்பில் பல இடங்களில் ஆழ்குழாய் மற்றும் நீரூற்று கிணறுகள் அமைக்கப்பட்டன. தொடர்ச்சியாக நடைபெற்ற மணல் கொள்ளையால் ஆறு முழுவதும் பாறை திட்டுகளாக மாறிவிட்டன. அதனால் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டாலும் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை.
1000 அடி வரை ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் இல்லை. நீரூற்று கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் பாலாறு பாலைவனமாக மாறிவிட்டதால் நூற்றுக்கணக்கான கிராம மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம், கரட்டூர், புங்கமுத்தூர், பாண்டியன் கரடு, நல்லார் காலனி உள்ளிட்ட கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் திட்டங்கள் செயல் இழந்தன. திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டம் மட்டுமே அப்பகுதி மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. பாலாற்றுக்கு நீரை சுமந்து வரும் நல்லாறு ஓடையில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள மணலை சிலர் திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். நல்லாறும் விரைவில் பாலாறைப் போல பாலைவனமாவது உறுதி. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்து வருகிறது’ என்றனர்.
உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) பாலசுப்பிரமணியம் கூறும்போது, ‘ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளில் சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். திருமூர்த்தி அணையில் இருந்து செயல்படுத்தப்படும் கணக்கம்பாளையம், பூலாங்கிணறு, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது தவிர 178 இடங்களில் கைப்பம்பு, 540 இடங்களில் ஆழ்குழாயுடன் இணைந்த மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வறட்சிக் காலங்களில் 100 ஆழ்குழாய் கிணறுகள் வற்றி விடும். மீண்டும் மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நீர் வரத்து ஏற்படும். திருமூர்த்தி அணையில் நீர் இருப்பதால் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பாலாற்றில் இருந்து தற்போது எந்த குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுவதில்லை’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago