தகுதியானவர்களுக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வேண்டும்: வெளிப்படைத் தன்மை கோரி வழக்கு

தகுதியானவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்கும் வகையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை நிரப்புவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.விஜயகுமார் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

“தமிழ்நாட்டில் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். மாணவர்களை சேர்ப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இந்த மாணவர் சேர்க்கை வணிக ரீதியில் நடைபெறுகிறது.

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டிய குழு சரியாக செயல்படுவதில்லை.

ஆகவே, தற்போதைய மாணவர் சேர்க்கை முறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, தகுதியான மாணவர் களுக்கு மட்டுமே 2014-2015-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக் கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் விஜய குமார் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறை உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE