குழந்தை கடத்தலுக்கு சட்டவிரோத தத்தெடுப்பு முக்கிய காரணமா?- முறையான தத்தெடுப்பு சிக்கலானது, செலவாகும் ஒன்றா?- சட்டநிபுணர் ரமேஷ் விளக்கம்

By மு.அப்துல் முத்தலீஃப்

தத்தெடுப்பு பிரச்சினையில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவே குழந்தையில்லா பெற்றோர் இடைத்தரகர்களை நாடுகின்றனர் என்கிற கருத்து உள்ளது.

ராசிபுரம் விவகாரத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக தத்தெடுப்புக்காக விற்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான தத்தெடுப்பில் சிக்கல் அதிகம், நீதிமன்றத்துக்கு அலைய வேண்டும், பணம் செலவாகும், குழந்தையை கொடுக்கும் பெற்றோர் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து திரும்ப கேட்பார்கள் போன்ற அனாவசிய பயம் காரணமாக குழந்தையில்லா தம்பதிகள் இடைத்தரகர்களை நாடுகிறார்கள்.

 

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சந்தேகம், நடைமுறைச் சிக்கல் போன்றவை குறித்த சந்தேகங்களை சட்ட நிபுணர் ரமேஷிடம் இந்து தமிழ் திசை இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

 

தத்தெடுப்பு விவகாரத்தில் அவ்வளவு சிக்கல் இருக்கிறதா? அதனால்தான் சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்குகிறார்களா?

 

ஆமாம், கொஞ்சம் சிக்கலான ஒன்றுதான். காரணம் தத்தெடுப்பு என்பது பெரிய அளவில் வியாபாரமாகி போனது. அதிக அளவில் வெளிநாட்டினர் தத்தெடுப்பது, வீட்டில் வேலைக்காக தத்தெடுப்பது, தத்தெடுக்கப்பட்டப்பின் பாலியல் கொடுமை போன்ற பல விஷயங்கள் நடப்பது உள்ளிட்டவை அதிகரித்தது.

 

அதை ஒரு வியாபாரமாக செய்ய துவங்கியவுடன் தத்தெடுப்பது என்கிற பெயரில் குழந்தை கடத்தலும் அதிகரித்தது. அதை தடுக்கும் நடவடிக்கையாக அரசும், உயர் நீதிமன்றமும் புதிய விதிமுறைகளை வகுத்து கண்காணிக்க துவங்கினர். தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு, பெற்றோர் குறித்த விபரங்கள், தத்தெடுக்கும் நடைமுறைகள் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதால் அது சிக்கலாகத்தான் தெரிகிறது.

அரசு வகுத்த முறைப்படி குழந்தைகளை தத்தெடுப்பது அதிக சிக்கலான நடைமுறையா? அளவில் செலவு ஆகுமா?

நியாயமாக குழந்தை இல்லை என தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. யாரும் பிரச்சைனையைப்பார்த்து பயந்து ஓடத்தேவை இல்லை. குழந்தை இல்லை தத்தெடுக்க விரும்பினால் முறைப்படி அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்தால் நீதிமன்றத்துக்கு வந்து அதன் நிபந்தனைகள்படி தத்தெடுக்கவேண்டும்.

ஆனால் தத்து கொடுக்கப்படும் குழந்தைக்கு பெற்றோர் இருக்கிறார்கள் என்றால் நீதிமன்றத்துக்குகூட போகத்தேவை இல்லை. சம்பந்தப்பட்ட பெற்றோர் ஒப்புதலுடன் தத்துப்பத்திரம் எழுதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்து தத்தெடுக்கலாம்.

நியாயமாக தத்தெடுக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

தத்து கொடுப்பதில் எந்த இடத்தில் தவறு நடக்கிறது?

அதற்கு இடைத்தரகராக ஒருவர் இருந்து , பணம் வாங்கிக்கொண்டு கைமாறும்போதுதான் தவறு நடக்க ஆரம்பிக்கிறது. தத்தெடுக்கும் பெற்றோருக்கு ஒரு பயம் இருக்கும்.

 

ஆள் தெரிந்து குழந்தையை தத்து கொடுத்தால் ஒரு ஐந்து வருடம் கழித்து திரும்ப வந்து கேட்பார்களோ, கூடுதல் தொகையை மறுபடியும் கேட்பார்களோ என்கிற பயம் இருக்கும். இங்குதான் இடைத்தரகர்கள் நுழைகிறார்கள்.

 

முகம் தெரியாத இடத்திலிருந்து இந்த மாதிரி குழந்தை, இவ்வளவு விலை என எங்கிருந்தாவது ஏதாவது ஒரு வழியில் குழந்தையைக் கொண்டுவந்து தருகிறார்கள். இதுதான் சட்டவிரோதம். இங்குதான் தவறே ஆரம்பிக்கிறது. அமுதா செய்ததும் அந்தத்தொழில்தான்.

 

தத்தெடுக்க என்ன நிபந்தனை உள்ளது?

 

தத்தெடுப்பதில் இந்து முறைப்படி உள்ள பெற்றோர் தத்தெடுக்கும் முறை ஒன்று உள்ளது. இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் சிறுபான்மையினர் தத்தெடுப்பதில் ஒரு வகை உள்ளது.

 

தத்து எடுப்பவர் 21 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். அவருக்கும் தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் 21 வருடம் வயது இடைவெளி இருக்கவேண்டும். 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களைத்தான் தத்தெடுக்க முடியும். போன்ற நிபந்தனைகள் உள்ளது.

 

தத்தெடுப்பு எத்தனை வகைப்படும்?

 

3 வகையாக பிரிக்கலாம். 1. இந்து மத முறைப்படி தத்தெடுப்பு இதில் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் இதற்குள் வருவார்கள்.

 

2. இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், பார்சிகள் இவர்களுக்கு தனியாக தத்தெடுப்பு சட்டம் எதுவும் இல்லை. அதனால் இவர்கள் பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டத்தின்படி அல்லது குழந்தைகள் நீதி சட்டத்தின்படிதான் அவர்கள் போக முடியும்.

 

3. அனாதை குழந்தைகள், ஹோம்களில் இருக்கும் குழந்தைகள், தொட்டில் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் இவர்கள் அடங்குவர்.

 

இந்து தத்தெடுப்பு முறை:

 

இதில் இந்துக்களுக்கு இந்து தத்தெடுப்புச்சட்டம் பொருந்தும். இந்தச் சட்டப்படி  ஒரு ஆண் மனைவி இல்லாமல் இருந்தால் தனியாக இருந்தாலும் தத்தெடுக்கலாம், மனைவி இருந்தால் மனைவியின் சம்மதத்துடன்தான் எடுக்கவேண்டும்.

 

இதேபோன்று பெண் தனியாக இருந்தாலும் தத்தெடுக்கலாம், கணவர் இருந்தால் அவர் அனுமதியுடன்தான் தத்தெடுக்க வேண்டும். ஆண் குழந்தை இருந்தால் பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது. பெண் குழந்தை இருந்தால் ஆண் குழந்தையை தத்து எடுக்கவேண்டும்.

 

ஏற்கெனவே சொன்னது போன்று 21 வருட இடைவெளி இருக்கவேண்டும். 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இந்த முறைக்கு தத்தா (சுவீகாரம்) ஹோமம் என்பார்கள், திருமணம் எப்படி நெருப்பைச் சுற்றி வருவதுபோல் செய்வார்களோ அதுபோன்று செய்வது.

 

இதை பெற்றோர் இருவரும் பதிவும் செய்துக்கொள்ளலாம். இதற்குப்பின் அந்த குழந்தை தத்தெடுக்கும் பெற்றோருக்கு வாரிசுக்கான அனைத்து உரிமையும் பெறுகிறது.

 

சிறுபான்மையினர் தத்தெடுக்கும் முறை:

 

இஸ்லாம், கிருத்துவ மதங்களில் தத்தெடுக்கும் முறை இல்லை. இந்தவகை பெற்றோர்கள் தத்தெடுக்க நினைக்கும் குழந்தைக்கு தன்னை பாதுகாவலராக இருப்பதற்கு நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு அவர்கள் குழந்தையை நல்லபடியாக பார்த்துக்கொள்ளும் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துவரவேண்டும்.

 

அதன்பின்னர் அவர்கள் பாதுகாவலராகத்தான் நியமிக்கப்படுவார்கள், ஆனால் இவர்கள் 18 வயதுவரை உள்ள குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

 

இவர்கள் இதுவல்லாமல் இந்தியச்சட்டப்படி தத்தெடுக்க முடியுமா?

 

இந்திய சட்டப்படி தத்தெடுப்புச் சட்டம் இல்லை. மேற்சொன்ன இரண்டு முறைகளில்தான் தத்தெடுப்பு முறை உள்ளது.

 

இவை அல்லாமல் ஒரு அனாதை இல்லத்தில் இஸ்லாமியரோ அல்லது வேறு பெற்றோரோ எடுக்க விரும்பினால் எப்படி தத்தெடுப்பது?

 

அதுதான் மூன்றாவது வகை, இதில் அனாதை இல்லங்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், தொட்டில் குழந்தைகள் வருகிறார்கள், இவர்களை தத்தெடுக்கும் முறையில் பெரிய அளவில் வழிகாட்டுமுறைகள் இல்லாமலிருந்தது.

 

பின்னர் 2017-ம் ஆண்டு மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் 2015-ம் ஆண்டு (JJ ACT) குழந்தைகள் நலச்சட்டத்தின்கீழ் ஒரு வழிமுறையை அளித்துள்ளார்கள். அது மிகப்பெரியது. 90 பக்கம் வருகிறது. அதன்பெயர் ‘தத்தெடுப்பின் வழிமுறைகள்’ என்பார்கள். அது சட்டமாக்கப்படவில்லை.

 

அந்த வழிகாட்டுமுறை-2017-ன் கீழ்தான் அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், தொட்டில் குழந்தைகள் உள்ளிட்டோர் வருகிறார்கள். இவர்களை தத்தெடுக்க இந்த வழிகாட்டுமுறையின்கீழ் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

 

அதன் பெயர் கேரா (CARA) அந்த அமைப்பில் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் தங்கள் விபரம், தேவைப்படும் குழந்தை உள்ளிட்டவற்றை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

 

அதன் அடிப்படையில் அவர்கள் பின்னணியை விசாரித்து, பெற்றோர் உண்மையிலேயே குழந்தையை வளர்க்கத்தான் தத்தெடுக்கிறார்களா? வேறு நோக்கத்துக்கு எடுக்கிறார்களா? என ஆராய்ந்து சரியாக இருந்தால் எங்கெங்கு எந்த விடுதியில் குழந்தைகள் உள்ளது என சொல்வார்கள்.

 

அதன்படி குழந்தையை தேர்வு செய்தபின்னர் அனைத்தையும் பரிசீலித்து நீதிமன்றத்தில் உத்தரவு வாங்குவார்கள். இந்த இடத்தில்தான் குழந்தைகள் நல கமிட்டி உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் சோதனைக்கு வருவார்கள். அவர்கள் தத்து கொடுக்கப்பட்டபின்னர் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் எனவும் சோதிப்பார்கள்.

 

இதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் உள்ளது என்கிறார்களே?

 

ஆமாம், நான் மேலோட்டமாகத்தான் சொன்னேன், அதில் உள்ள முழு அம்சத்தையும் நான் படிக்கவில்லை. அதேப்போன்று இதில் காலதாமதம், காத்திருத்தல், பல்வேறு வழிமுறைகளை தாண்டி வரவேண்டியநிலை, நீதிமன்ற வழிமுறைகள் என பல உள்ளது.   

 

இதனால்தான் சட்டவிரோத தத்தெடுப்பு நடக்கிறதா?

 

ஆமாம், இந்த நடைமுறைகளை தவிர்க்க நினைப்பவர்கள், காலதாமதத்தை விரும்பாதவர்கள், நீதிமன்றத்துக்கு எல்லாம் எதற்கு செல்லவேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள்தான் இடைத்தரகர்கள் கையில் சிக்குகின்றனர். அவர்களுக்கு இது எளிதாக இருப்பதால் பெற்றோர்கள் நாடுகிறார்கள்.

 

இடைத்தரகர்கள் எளிய முறையில் செய்து தருகிறார்கள், யாரிடம் இருந்து வாங்குகிறோம் என தெரியக்கூடாது எனப்பெற்றோர் நினைப்பதால் அதை பயன்படுத்தி குழந்தைகளை கடத்தி தருவது, கைவிடப்படும் குழந்தைகள் போன்றவைகளை வாங்கி தருகிறார்கள்

 

ராசிபுரம்விவகாரத்தில் ஒருபடி மேலேபோய் அந்த அமுதா கூடுதலாக பணம் கொடுத்தால் பிறப்புச் சான்றிதழே வாங்கித்தருகிறார் எனும்போது சட்டப்படி இவர்கள் குழந்தையாகவே ஆகிவிடுகிறது அல்லவா? இதைத்தான் சட்டப்படி குற்றம் என்கிறோம்.

 

இடைத்தரகர்கள் எங்கு, எப்படி குழந்தைகளை தேர்வு செய்கிறார்கள்?

 

இடைத்தரகர்கள் பெரும்பாலும் குறிவைப்பது அரசு மருத்துவமனை. அதுவும் சாதாரண நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு வரும் மருத்துவமனை. இவர்கள் அங்கு வரும் வறுமையில் வாடும் பெற்றோர், புதிதாக பிறக்கும் குழந்தையை பராமரிக்க முடியாமல் இருப்பார்கள் அவர்களை குறி வைப்பார்கள்.

 

அடுத்து திருமணமாகாமல் குழந்தைபெறுபவர்கள், அடுத்து அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பெறுபவர்கள் இந்த மூன்று வகை பெற்றோரை பிடிக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு இருக்காது.

 

அதிலும் ராசிபுரம் அமுதா என்பவர் செவிலியர் என்கிறார்கள் அவருக்கு எளிதாக அனைத்து மருத்துவமனையும் தொடர்பு இருக்கும்.

 

தத்தெடுப்பில் பரஸ்பரம் இரண்டு பெற்றோர் தங்களுக்குள் முடிவெடுத்து குழந்தையை தத்துகொடுக்க வாய்ப்புள்ளதா?

 

இந்து சட்டத்தின்படி அதுபோன்று வழிமுறை உள்ளது.

 

நான் கேட்பது யாகம் சுவீகாரம் முறை சொன்னீர்களே அதுபோன்று இல்லாமல் பரஸ்பரம் எளிதாக இருதரப்பும் பேசி தத்துகொடுக்க முடியுமா?

 

தாரளமாக செய்யலாம். தத்தெடுப்பு என்பதே ஒரு ஒப்பந்தம்தானே. ஆகவே பரஸ்பரம் பேசி அதற்கான ஆவணம் தயார் செய்து அதை பதிவு  செய்யலாம்.

 

அது சட்டப்படி செல்லுமா?

 

தாரளமாக செல்லும். இந்துமதம் தத்தெடுப்பை ஒப்புக்கொள்வதால் ஒப்பந்தம் போட்டு சாட்சிகள் முன்னிலையில் தத்தெடுப்பு சட்டத்தின்படி உள்ள அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறோம் என பேசி ஒப்பந்தம்போட்டு தத்தெடுக்கலாம்.

 

ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ பெற்றோர் இதுபோன்று பரஸ்பரம் தத்தெடுக்க வாய்ப்புள்ளதா?

 

கிடையாது. சிறுபான்மை மதத்தில் தத்தெடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் காப்பாளர் சட்டத்தின் கீழ்தான் இதிலும் குழந்தையை தத்தெடுக்க முடியும்.

 

ஒரு சிறுபான்மை மதத்தவர் அவர் மதத்தை சேர்ந்த இன்னொரு பெற்றோருடனும் பரஸ்பரம்பேசி தத்தெடுப்பை பதிவு செய்ய முடியாதா?

 

அவர்கள் ஒரே மதமாக இருந்தாலும் மாற்று மதத்துக்குள் பரஸ்பரம் பேசி எடுத்தாலும் அங்கு தத்தெடுப்புச் சட்டம் அனுமதிக்காது. காப்பாளராகத்தான் பதிவு செய்ய முடியும். இங்கு அனைத்துச் சட்டங்களும் குழந்தைகள் நலன் நோக்கித்தான் உள்ளது, இயற்றப்படுகிறது.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்