வயநாடும், நீலகிரியும் தொகுதி நிலையிலும், மாநில அளவிலும்தான் வேறு வேறு. ஆனால் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு நிற்பதாலும், ஒன்றில் விஐபி ஆ.ராசாவும், அடுத்ததில் விவிஐபி ராகுலும் போட்டியிடுவதாலும் இரண்டறக் கலந்தே கலக்குகிறது. அதையொட்டி ‘ராசாவால் ராகுலுக்கு அனுகூலமா, ராகுலால் ராசாவுக்கு அனுகூலமா இவர்கள் இப்படி ஒட்டிய தொகுதிகளில் போட்டியிடுவதால் மக்களுக்கு அனுகூலமா?’ என்று இப்பகுதி அரசியல் நோக்கர்களிடம் வழக்காடு மன்றமே நடப்பதுதான் பேரதிசயம்.
நீலகிரி மக்களவைத் தொகுதியின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் கூடலூர் சட்டப்பேரவை தொகுதி என்பது தாயகம் திரும்பிய தமிழர்களும், கேரளத்திலிருந்து வந்தவர்களும் மட்டுமல்ல, பல்வேறு இன பழங்குடி மக்களும் நிறைந்துள்ளதாகும். கேரளவாசிகள் நிறைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி படு ஸ்டிராங்காகவும் உள்ளது. கூடலூரிலிருந்து சேரம்பாடி 5 கிலோ மீட்டர் தொலைவு. அங்கிருந்து கூப்பிடு தொலைவுதான் கேரளத்தின் வடுகன்சால்.
அதேபோல் பாட்டவயல், அய்யன் கொல்லி, நம்பியார்குன்னு ஆகிய கூடலூர் கிராமங்கள் வயநாட்டின் பத்தேரிக்கு அருகாமையில் இருப்பவை. எருமாடு கிராமத்தின் எல்லையில் இருக்கும் கிராமங்கள் தாளூர், சில்லிமேடு வயநாட்டிற்கு உரியவை. எல்லாமே மலையும், மலை நிறைந்த பகுதிகள். எது கூடலூர், எது வயநாடு என்றே பிரித்துணர முடியாத அளவுக்கு காடுகளால் சூழப்பட்டவை. வயநாட்டின் கலெக்டர் அலுவலகம் உள்ள கல்பெட்ட கூடலூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவு. அரசியல் ரீதியாக கூடலூரில் காங்கிரஸும், திமுகவும் பலம் என்றால் வயநாட்டின் இப்பகுதிகள் முழுக்க காங்கிரஸும், பாஜகவும் பலம்.
‘‘பொதுவாகவே இங்கே காங்கிரஸ் ஓட்டு அதிகம். அதுதான் போன தடவை ராசா நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றாலும், கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஓட்டு முன்னணி காட்ட வைத்தது. இப்போது ராகுலே வயநாட்டிற்கு வந்து போட்டியிடுவதால் அவருக்கான செல்வாக்கு ராசாவுக்கு கூடுகிறது. நெல்லுக்குப் பாயுறது புல்லுக்கும் பாயும் என்பது போல கூடலூரில் ராசாவின் வாக்கினை எகிற வைக்கும்!’’என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்.
தமிழகத்திலிருந்து தங்கபாலுவும், சுதர்சன நாச்சியப்பனும் வயநாடு தொகுதி தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டாலும், தமிழகத்திலிருந்து மற்ற யாரையும் வயநாட்டிற்கு ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக வரவேண்டாம் என்று கேரள காங்கிரஸாரே எழுதப்படாத அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
‘’ஏனென்றால் வயநாடு மற்ற பிரதேசங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நில அமைப்பு கொண்டது. இங்கே இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஓட்டுகள் அதிகம். காடுகளைக் காப்பாற்றுவதிலும், சூழல் கெடாமல் வைத்திருப்பதில் இயல்பாகவே இப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு அதிகம். தவிர மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலும் உள்ள பகுதி. அப்படியான சூழலில் வெளி ஆட்கள் வந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதனால்தான் நீங்கள் யாரும் வரவேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!’’என்றிருக்கிறார்களாம்.
அப்படியும் ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கல்பெட்டா வந்த நாளில் மட்டும் கூடலூரிலிருந்து சென்ற காங்கிரஸார் ஐயாயிரத்தை தாண்டி விட்டார்கள். ‘‘அதற்கு காரணம் ராகுல் மீதான பிரியம் மட்டுமல்ல; நீலகிரி காடுகளில் மோடி அரசினால் பற்றி எரியும் பழங்குடியினர் பிச்சனையும் ஆகும்!’’ என்கிறார் கூடலூர் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் எம்.எஸ்.செல்வராஜ்.
இவர் பொறுப்பு வகிக்கும் சங்கத்தை உள்ளடக்கிய வாழ்வு மற்றும் சுயமரியாதைக்கான பிரச்சார இயக்கம் (CAMPAIGN FOR SURVIVAL AND DIGNITY) ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்ததை அடுத்து, ‘ராகுல் காந்திக்கு பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் ஏன் வாக்களிக்க வேண்டும்?’ என்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை நீலகிரி எல்லையில் இருக்கும் வயநாடு தொகுதி கிராமங்களில் ஒரு வார காலம் நடத்தியிருக்கிறது.
‘‘ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது பழங்குடி மக்களுக்கு பெரும் பாதுகாப்பை அளிக்கும். ராகுலின் வெற்றி கேரள தமிழக மாநிலங்களில் மட்டுமல்லாது நாடு முழுக்க உள்ள 1. 5 கோடி பழங்குடிகளின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வன உரிமைகளையும் மீட்டுக் கொடுக்கும். இதற்காகவே ராகுலை இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தித்து இங்கே போட்டியிடச் சொல்லி கோரிக்கை வைத்தோம்!’’ என்கிறார் இவர்.
எப்படி? அவரே விளக்கினார்.
‘‘சிஎஸ்டி எனப்படும் கேம்ப்பைன் ஃபார் சர்வைவல் அண்ட் டிக்னிட்டிங்கிற எங்க அமைப்பு தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம்னு பதினாலு மாநிலங்களில் உள்ள பல்வேறு சங்கங்களைக் கொண்டது. இக்கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரா உத்ரகாண்ட்டை சேர்ந்த சங்கர். காடுகள்ல வசிக்கும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் ‘வன உரிமை அங்கீகார சட்டம் 2006’ உருவாக்கப்பட இந்தக் கூட்டமைப்பும் ஒரு காரணம். அதற்கு நேர் எதிராக ஒரு நிலப்பிரச்சனை சம்பந்தமா அண்மையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு போட்டது.
அந்த உத்தரவு காடுகளில் வசிக்கும் பழங்குடிகளை வெளியேற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படியான உத்தரவு சூழலுக்கு காரணமே பாஜக அரசுதான். அவங்க சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து மூன்று வாய்தாவிற்கு ஆஜராகாததால்தான் இப்படியொரு உத்தரவே வந்துச்சு. நாடு முழுக்க உள்ள காடு, மலைகளில் உள்ள பழங்குடிகளை வெளியேற்றி அந்த நிலங்களை 600 மைன்ஸ் (கனிமச்சுரங்க) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கவே அரசு திட்டமிட்டிருந்தது. அதன் மூலம் மீத்தேன், நிலக்கரி என வரும் தாதுவளங்களை ஸ்வாகா செய்வதே அவர்கள் நோக்கம். அதை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் செஞ்சோம்.
அதன் பலன் பழங்குடிகளை காடுகளிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான தீர்ப்பை ஜூலை 28 வரை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். திரும்ப பாஜக ஆட்சிக்கு வந்தா உடனே அந்தத் தீர்ப்புக்கு உயிர் கொடுத்துடும் வன உரிமைச்சட்டம் 2006 பறிபோய்விடும். பழங்குடிகள் விரட்டப்படுவதை தடுக்க முடியாது. இந்த அதிபயங்கர நிலைமையை எடுத்துச் சொல்லித்தான் இரண்டு மாதங்கள் முன்பு டெல்லியில் ராகுலை சிஎஸ்டி சார்பில் சந்தித்தோம்.
பழங்குடியினர் வாழ்வாதாரத்தில் மட்டுமல்லாமல் விவசாயிகள் நலனிலும் பாஜக அரசு புகுந்து விளையாடுகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் விவசாயிகள் பிரச்சினை, தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை, புயல் நிவாரண நிதி இப்படி எதுவானாலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளைச் சொன்னால் காங்கிரஸ் காது கொடுத்துக் கேட்கிறது. அதுவே பாஜக கேட்பதேயில்லை. இதன் ஆழத்தையும், அழுத்தத்தையும் உணர்ந்து கொள்ள தென்னிந்திய தொகுதிகளில் ஒன்றில் நீங்களே வந்து போட்டி போட வேண்டும்னு சொன்னோம். அதை ஏத்துக்கிட்டார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்ன பல அம்சங்கள் இடம் பிடிச்சிருக்கு. அவரும் போட்டியிட வயநாட்டிற்கும் வந்திருக்கார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது எங்கள் விவசாயிகள், பழங்குடிகள் கடமை. அதற்காகவே அவர் வேட்பு மனுதாக்கலப்ப கூடலூரிலிருந்து ஆயிரக்கணக்கானவங்க கல்பெட்டா போயிருக்காங்க!’’ என்றார் செல்வராஜ்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘நாங்கள் எங்க சங்கப் பொருளார் விஜயசிங்கம் தலைமையில் 20 பேர் போனோம். ஒரு வார காலம் மானந்தவாடி, கல்பெட்டா, பத்தேரி, மேப்பாடி என வரும் வயநாடு சுற்றுவட்டார கிராமங்களிலேயே தொடர்ந்து தங்கினோம். அப்பகுதி மக்களையும் சந்திச்சோம். ‘வயநாடு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என சரிபங்கு இருக்கக்கூடிய பகுதி. இங்கே ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம் என்ற கோஷமெல்லாம் சரியாக இருக்காது. ராகுலுக்கு ஓட்டு போடுவதன் மூலம் மதவாதத்திற்கு மட்டுமல்ல, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறவர்களையும் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம்!’ என்பதை எடுத்துச் சொல்லி வந்துள்ளோம். திரும்பவும் இதே பிரச்சார இயக்கத்தை அடுத்த வாரமும் சென்று நடத்த உள்ளோம்!’’ என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் வயநாட்டில் மட்டுமல்ல நீலகிரியிலும் வலுவாகவே இருக்கிறது. இப்போது ராகுலும் போட்டிக் களத்தில் சேர்ந்துள்ளதால் நீலகிரியில் போட்டியிடும் ஆ.ராசா ஆதரவாளர்கள் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனராம். ‘‘பந்தலூர், மசினக்குடி, கூடலூர் பகுதிகளில் மட்டும் எங்கள் சங்கத்திற்கு 129 கிளைகள் இருக்கு. போன வாரம் 7, 8 தேதிகளில் ராசாவுடன்தான் நாங்கள் பிரச்சாரத்தில் இருந்தோம். அவர் ராகுல் போட்டியிடுவதை தனக்கு ரொம்ப சாதகமாகத்தான் பார்க்கிறார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசாங்கம் ஏற்படும்போது முதலில் பழங்குடி மக்களின் வன உரிமைச்சட்டம் 2006 ஸ்டிராங்காக அமல் படுத்துவோம்னும் உறுதி சொல்லியிருக்கிறார். ஆக, ராசா, ராகுல் இங்கே போட்டியிட்டு வெற்றி பெறுவதன் அவர்களில் யாருக்கு அனுகூலமோ இல்லையோ, இங்குள்ள பழங்குடி, விவசாயப் பெருமக்களுக்குத்தான் பெருத்த அனுகூலம்!’’ என தன் பேச்சை முடித்துக் கொண்டார் செல்வராஜ்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago