இளங்காத்து வீசுதே: கோடையில் குளிர்ச்சி தரும் ‘பானை ஏர்கூலர்’!

By ஆர்.கிருஷ்ணகுமார்

வாட்டி வதைக்கும் வெப்பத்தால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, குளிரூட்டும் கருவிகள் உதவும். எனினும், அவற்றில் உள்ள சில ரசாயனத் தன்மையால் பயப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் `பானை ஏர்கூலரை’ தயாரித்துள்ளார் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். வெட்டிவேர், நன்னாரிவேர், கூழாங்கற்கள் என இயற்கையைச் சேர்ந்த பொருட்களையே இதற்குப் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடையின் கொடுமை இப்போதேதொடங்கிவிட்டது. மே மாதத்துக்கு முன்பே 103 டிகிரி, 104 டிகிரி என்றெல்லாம் வெயில் நம்மைப் பயமுறுத்துகிறது. அக்னி வெயில்வேறு நம்மைப் பாடாய்ப்படுத்த காத்திருக் கிறது. பகலில் நிலவும் வெப்பத்தால் இரவில் வீட்டில் தூங்கவேமுடியவில்லை. ஆழ்ந்து உறங்க ஏர்கண்டிஷனர், ஏர்கூலர் ஆகியவை உதவினாலும், குழந்தைகளுக்கும்,  முதியோருக்கும் இவை முழுக்கப் பொருந்த வில்லை. அதுமட்டுமல்ல, செயற்கை முறையிலான குளிர்காற்று குழந்தைகளை ஏதாவது செய்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த நிலையில், வீட்டிலேயே ஏர்கூலரை வடிவமைத்து அசத்துகிறார் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகதீஷ் (30). அதுவும், பானை, துளசிமாடம் என மண்ணாலான பொருட்களில் தயாரிக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவரை தேடிச்சென்றோம். செல்வபுரத்தில் ஒரு சிறிய குடியிருப்பில், ஒற்றை அறை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார் ஜெகதீஷ். அந்தக் குறுகிய இடத்திலேயே பானைகளும், துளசிமாடங்களும் ஏர்கூலராய் மாறிக் கொண்டிருந்தன. “அப்பா சண்முகம், சின்ன வயசுலேயே விட்டுட்டுப் போயிட்டார். அம்மா சாந்தி கூலி வேலைக்குப் போய், என்னையும்,ஒரு அக்கா, ஒரு தங்கச்சியையும் காப்பாத்தினாங்க. ராஜவீதியில இருக்கற வீராசாமி பள்ளிக்கூடத்துல 10-வது முடிச்சிட்டு, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளியில பிளஸ் 2 முடிச்சேன். சிங்காநல்லூர் கே.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. படிக்க வாய்ப்புக் கிடைச்சது.

வறுமை காரணமா, பிளஸ் 2 படிக்கும்போதே பகுதிநேர வேலைக்குப் போனேன். காலேஜ் படிக்கும்போதும், கணபதியிலே சுமை தூக்குற வேலைக்குப் போனேன். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும், லேத் பட்டறை வேலைக்குப் போனேன். 2013-ல கே.எஸ்.ஜி. கல்லூரியிலேயே சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் வேலை கிடைச்சது. மேலும், அங்கேயே பகுதி நேரமாக எம்.எஸ்சி. ஐ.டி. படிக்கவும் வாய்ப்பு கொடுத்தாங்க. படிப்பு முடிச்சிட்டு பயோ-லைன் லேபரட்டரிங்கற ரத்தப் பரிசோதனை நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன்.

2015-ம் வருஷத்துல என்னோட தங்கைக்குத் திருமணம் நடந்தது. அதே வருஷம் எனக்கும் திருமணமாச்சு. கல்யாண கடனைக் கட்ட இப்பவரைக்கும் போராடிக்கிட்டிருக்கேன். ஒரு மாதத்துக்கு முன்னாடி வெயில் காரணமாக என்னோட குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு. ஏர்கூலர் வாங்கற அளவுக்கு வசதியில்லை. இதனால், நானே ஏர்கூலர் தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சி, யுடியூப்ல பல்வேறுவிஷயங்களைக் கத்துக்கிட்டேன். தண்ணீரில பட்டு வரும் காத்து, குளிர்ந்த காத்தாகஇருக்கும்னு தெரிஞ்சிக்கிட்டு, இந்த அமைப்பை உருவாக்க முயற்சி செஞ்சேன்.

பொதுவா, ஏர்கூலர் காத்து, பெரியவங்களுக்கும், சின்னக் குழந்தை களுக்கும் ஒத்துக்காது. அதுல இருக்கற இலவம்பஞ்சு, தேங்காய் நார் மக்கி கெட்டுப் போனாலோ, கலப்படம் இருந்தாலோ, அதுல இருந்து வர்ற காத்து பிரச்சினைகளை உண்டாக்கும். அதேசமயம், பானையில இருக்கற தண்ணீர், உடம்புக்கு ரொம்ப நல்லது. அதனால, பானையை வாங்கி, அதுல ஏர்கூலர் செய்ய முயன்றேன்.

மீன் தொட்டிக்கான மோட்டார், எக்ஸாஸ்ட் ஃபேன், பி.வி.சி. பைப் மற்றும் வெட்டிவேர், நன்னாரிவேர், கூழாங்கற்கள், கற்பூரவல்லி இலை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏர்கூலரை செய்தேன். தேவையெனில் கற்பூரம் மற்றும் நீலகிரித் தைலத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீன் தொட்டிக்கான மோட்டார், தண்ணீரை சுழன்றுகொண்டே இருக்கச் செய்யும். எக்ஸாஸ்ட் ஃபேன் வெளியில் உள்ள சூடானக் காற்றை உறிஞ்சி, தண்ணீரில் செலுத்தி வெளியே தள்ளும்போது குளிர்ந்த காற்று கிடைக்கும். மேலும், ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்தில் அறையில் உள்ள வெப்பக்காற்றும் நீங்கி, குளிர்ந்த தட்பவெப்பம் உருவாகும். இதுல ரசாயனப் பொருட்கள் எதுவும் இல்லாததால, உடலுக்கு எவ்விதக் கேடும் இருக்காது. எவ்வளவு நாளானாலும் துர்நாற்றம் வீசாது. குறிப்பாக, ஆரோக்கியம்தான் முக்கியம்ங்கறதுல நான் உறுதியாக இருக்கேன்.

இதை நான் ஆரம்பிச்சப்ப, அக்கா கவிதா ரூ.10,000 கொடுத்து உதவினாங்க. முதல்ல பானையில மோட்டார், ஃபேனை பொருத்தி ஏர்கூலர் உருவாக்கினேன். இது நல்லா வேலை செஞ்சது. இதுபத்தி தெரிஞ்சிக்கிட்டவங்க, தங்களுக்கும் செஞ்சிக்கொடுக்க சொன்னாங்க. அதேபோல, சிலர் துளிசிமாடம் டைப்புல ஏர்கூலர் செஞ்சிக் கொடுக்கச் சொன்னாங்க. காலையில வேலைக்குப் போயிட்டு வந்து, மாலையில உட்கார்ந்து ஏர்கூலர்  தயாரிப்பேன். இந்த ஏர்கூலர்களுக்கு தென்றல், துளசிமாடம், யாழ்மொழினு பேர் வெச்சிருக்கேன். ஆர்மி மாடல் ஏர்கூலரும் ஒண்ணு தயாரிச்சிருக்கேன். துளசிமாடம் ஏர்கூலர்ல நைட்லேம்ப், செல்போன் சார்ஜரும் பொருத்த முயற்சி செஞ்சிக்கிட்டிருக்கேன்.

ஏர்கூலர் மாடலைப் பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை விற்கத் திட்டமிட்டிருக்கேன். இந்த தயாரிப்புக்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்திருக்கிறேன். நான் வேலை செய்யற நிறுவனத்தோட முதலாளி செந்தில்குமார், எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுக்கறாரு.

மனைவி விவேகா, தனியார் கம்பெனியில வேலைக்குப் போறாங்க.

அவங்களும், அக்கா மகனும்ஏர்கூலர் தயாரிக்க உதவறாங்க. இதை காட்சிப்படுத்தி, பெரிய அளவுல கொண்டுபோகணும்னா முதலீடு வேணும். அதுக்கு நான் முயற்சி செஞ்சிக்கிட்டிருக்கேன். ஒரு தனியார் நிறுவனம், தங்களோட சேர்ந்து இதை தயாரிக்கலாம்னு சொன்னாங்க. ஆனா, தயாரிப்புல மாற்றம் செய்யணும், லாபத்தை அதிகப்படுத்தணும்னு சொன்னாங்க. அதுக்கு நான் ஒத்துக்கலை.  ஏர்கூலர்ல இயற்கைக்கு மாறான எதையும் கலக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். இது எல்லோருக்கும் கிடைக்கணும். அதனால, லாபமும் அதிகம் வைக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்” என்றார் ஜெகதீஷ் உறுதியுடன்.

படங்கள்: ஜெ.மனோகரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்