திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளாவில் ஒரு நிலைப்பாடு என முரண்பட்ட கூட்டணி அமைத்துள்ளது என முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓமலூரில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு பேசியதாவது:
''திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளாவில் ஒரு நிலைப்பாடு என முரண்பட்ட கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணி கொள்கையற்ற கூட்டணியாக திகழ்கிறது. இங்கே காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளத்தில் அரசுக்கு எதிராக ஓட்டு கேட்பது அவர்களின் கூட்டணி நிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம்.
அதிமுக கூட்டணி கொள்கையோடு சேர்ந்துள்ள கூட்டணி. நாட்டில் நிலையான ஆட்சி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்துக்குத் தேவையான நிதியை கேட்டுப்பெற முடியும். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், காவிரி கோதாவரி நதி நீர் இணைப்புக்கு முதல் குரல் கொடுக்கப்படும்.
இரண்டு நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், அவர்கள் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை கூறுவதை விட்டுவிட்டு என்னைப் பற்றி குறைகூறி வாக்கு சேகரித்து வருகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத நிலையில், அது குறித்து பொதுமக்களிடம் கூற முடியாதபோது, அதிமுக ஆட்சியைக் குறை கூறி வருகிறது.
அதிமுகவைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ஆகியோர் காவிரி பிரச்சினைக்காக தொடர்ந்து 21 நாட்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர். திமுக ஆட்சியில் இருக்கும்போது காவிரி பிரச்சனையைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2011-ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு நிலவி வந்த நிலையில் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் மின்வெட்டு பிரச்சினையை அப்போதைய முதலவர் ஜெயலலிதா தீர்த்து வைத்தார்.
தற்போது 16 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. உபரி மின்சாரம் உற்பத்தி செய்ததற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் விருதினைப் பெற்றுள்ளது. இது அதிமுக அரசின் நிர்வாகத் திறமையைக் காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் ஏழைத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஓமலூரில் இருந்து மேட்டூர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும், ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago