ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பை உபதொழிலாக மேற்கொண்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மரச்செக்கு எண்ணெய் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இந்த தொழிலில் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது.
பெருகிவரும் நோய்களுக்கு உணவுப்பழக்கமே காரணம் என்பது பெரும்பாலான மருத்துவர்களின் கருத்து. நோயினைத் தவிர்க்க வேண்டுமானால், உணப் பழக்கத்தில் மாற்றம் அவசியம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை சமையல் எண்ணெய்.
கடந்த காலங்களில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கு எண்ணெய் என்ற நான்கு வகையான எண்ணெய் வகைகள்தான் சமையல் எண்ணெய் பட்டியலில் இருந்து வந்தன. இந்த பட்டியலில் எண்ணெய் பனையிலிருந்து எடுக்கப்படும் பாமாலின் நுழைந்த பின்பே, சமையல் எண்ணெய் சந்தையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. தற்போது சூரியகாந்தி எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் என பல்வேறு எண்ணெய் வகைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன.
இந்த வியாபாரப் போட்டிக் கிடையே உடல் நலம் காக்க இயற்கையின் பக்கம் திரும்பியே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வு காரணமாக, பாரம்பரிய முறையில் மரச்செக்கினால் ஆட்டப்படும் எண்ணெய்க்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் செக்கு அமைத்து எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் விவசாயிகளே நேரடியாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு மற்றும் அதனைச் சந்தைப் படுத்துவது தொடர்பாக, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், ‘சுவாசம்’ என்ற பெயரில் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் எல்.அருள் முருகன் கூறியதாவது:
எங்களது மரச்செக்கில் கடலெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிப்பை ஒன்றரை ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். 10 கிலோ கடலையை மரச்செக்கில் போட்டு ஒரு மணி நேரம் இயக்கினால் நான்கேகால் லிட்டர் எண்ணெய் கிடைக்கும். மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பின்போது ஒரு நிமிடத்திற்கு 15 முறை அரவைக்காக சுற்றுகிறது. அதுவே, இரும்பினால் செய்யப்பட்ட செக்கில் ஒரு நிமிடத்திற்கு 60 முறை சுற்றுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் கூடுதலான அளவு எண்ணெய் தயாரிக்க முடியும். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம், 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதில், உயிர்ச்சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை.
அதுவே, இரும்பு செக்கில் ஆட்டும்போது, அதன் வேகம் காரணமாக எண்ணெய் சூடாகிறது. ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது. மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும், என்றார்.
மரச்செக்கு எண்ணை என்ற பெயரில் இரும்புச் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயை விற்பனை செய்வது பரவலாக நடந்து வருகிறது. பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த எண்ணெய், உண்மையான மரச்செக்கு எண்ணெயை விட விலை குறைவாகவே விற்கப்படுகிறது.
இது குறித்தும், மரச்செக்கு அமைப்பதற்கான முதலீடு குறித்தும் அருள்முருகன் கூறியதாவது:
எங்களது மரச்செக்கு கடலெண்ணெய் லிட்டர் ரூ.230-க்கும், நல்லெண்ணெய் ரூ.380-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.250-க்கும் விற்பனை செய்கிறோம். இதுவே இரும்புச் செக்கில் ஆட்டி, மரச்செக்கு எண்ணெய் என்று விற்பனை செய்பவர்கள், இதை விட லிட்டருக்கு ரூ.30 வரை விலை குறைவாக விற்கின்றனர்.
ஒரு மரச்செக்கு ஆலை அமைக்க மரச்செக்கு, இடம், மின் இணைப்பு என ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எண்ணெய் தயாரிப்பு இடத்தை பார்வையிட்டு சான்றிதழ் வழங்குவதோடு, தொடர்ந்து ஆய்வு செய்தும் வருகின்றனர்.
மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பை மட்டும் பிரதான தொழிலாக செய்வதை விட, இதனை உபதொழிலாக செய்வது நல்லது. சம்பளத்திற்கு ஆள் போடாமல், தாங்களே பணிகளை செய்தால், கணிசமான வருவாய் கிடைக்கும். தரமான எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது மிக முக்கியமானது, என்றார்
உடல்நலத்தைக் காக்கும் மரச்செக்கு எண்ணெய்யை சந்தைப்படுத்துவதிலும், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்தால், புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்படுவதோடு, கிராமப் புற பொருளாதாரம் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும் என்கின்றனர் விவசாயிகள்.
எண்ணெய் வாங்க ஆலோசனை
மாடுகளைப் பயன்படுத்தி மரச்செக்கில் எண்ணெய் எடுப்பது முதல்தரமாகவும், மோட்டார் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் எடுப்பது இரண்டாம்தரமான எண்ணெய்யாகவும் கருதப்படுகிறது.
மரச்செக்கு எண்ணை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அடர்த்தி அதிகமாக இருக்கும்.
எந்த எண்ணெயாக இருந்தாலும், சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். முடிந்தவரை தயாரிக்கப்படும் இடத்தை ஒருமுறையாவது பார்த்து நேரிடையாக வாங்குவது நல்லது.
மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுக்கவேண்டும். இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிக்கவேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago