அடுத்த 7 முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சித்திரை மாதம் கத்திரி வெயில்தான் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் தாக்கம் அதிகரித்து வந்தது. அதிலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக, 15-க்கும மேற்பட்ட தமிழகத்தின் நகரங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.
தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்மாவட்டங்கள், டெல்டா, கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. கோடைகாலம் தொடங்கி இன்னும் பாதி நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும், வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவற்றிலும் நிலத்தடி நீர் மட்டம் இறங்கத் தொடங்கி மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர்இருப்பு படுமோசமான நிலைக்குச் சென்று கல்குவாரிகளில் இருந்து நீரை எடுத்துச் சுத்திகரித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் விநியோகித்து வருகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்பதால், கோடையை குளிர்விக்கவாவது, மழை வருமா என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கன்னியாகுமரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை மாலை நேரங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஃபேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் 'தி இந்து தமிழ்திசை' இணையதளம் சார்பில் கேட்கப்பட்டது.
அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
''வழக்கமாக மார்ச் 15-ம் தேதி கோடைகால மழை வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை சற்றுதாமதமாக மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. கடந்த இரு நாட்களாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்பமும் கடுமையாக இருக்கும். அதேசமயம், மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். இதே சூழல் அடுத்த 10 நாட்கள் வரை இருக்கும்.
தமிழகத்தில் குறிப்பாக உள்மாவட்டங்களான சேலம், தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை அடுத்த 10 நாட்களுக்கும் நாள்தோறும் இல்லாவிட்டால்கூட சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.
அதேபோல, தெற்கு கடலோர மாவட்டங்களான வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களில் குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த இடியுடன் கூடிய மழை பெரும்பாலும் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில்தான் இருக்கும். கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
மற்றவகையில் அடுத்துவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறதே என கவலை வேண்டாம், வெயில் அதிகரிக்க, அதிகரிக்க மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம். கடற்கரையில் இருந்து வரும் காற்றும், வெப்பத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும்போதுதான் மழை ஏற்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளான நாளை கன்னியாகுமரியில் மாலைநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, நாளை கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் தென் மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அடுத்துவரும் நாட்களில்வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. மற்ற வகையில் சென்னைக்கு மழை இப்போது இல்லை'',.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago