வரலாறு காணாத வெயில்...ஒவ்வொரு வருடமும் கோடைக்கு நாம் கொடுக்கும் அடைமொழி இது. கோடை வெயிலில் வாடி வதங்கும் மக்களை வரவேற்கக்காத்திருக்கின்றன குளிர்ச்சி மிகுந்த மலைகள். பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்க உள்ள சூழலில், மலைவாசஸ்தலங்களை நோக்கிப் படையெடுக்கத் தயாராகிவிட்டனர் பொதுமக்கள். குளுகுளு சூழலுடன், பசுமை போர்த்திய மலைப் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டன. இவ்வாறே, ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு மலைப் பிரதேசமும் பல்லாயிரக்கணக்கான பயணிகளை வரவேற்கக்காத்திருக்கிறது.
சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு பயணித்தால் ஏற்காடு அடிவாரத்தை சென்றடையலாம். அங்கிருந்து 27 கிலோமீட்டர் மலைப் பாதையில், 21 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால் ஏற்காட்டை அடையலாம். ஏரியும், அதைச் சுற்றிலும் காடும் இருக்கும் பகுதி ஏரிக்காடு. இதுவே பின்னர் ஏற்காடாக மருவியுள்ளது என்பார்கள்.
கடல் மட்டத்தில் இருந்து 5,326 அடி உயரத்தில் உள்ள ஏற்காட்டில் 62 மலைக் கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ 383 சதுர கிலோமீட்டர் பரப்பில் காபித் தோட்டங்களும், அதனூடே சவுக்கு மரங்கள், மிளகு கொடிகள் மற்றும் வனங்கள் நிறைந்த ரம்மியமான பகுதியே ஏற்காடு மலை.
ஏரியில் உல்லாச படகுச் சவாரி!
ஏற்காடு நகரின் நடுநாயகமாக உள்ளது நீர் நிறைந்த ஏரி. இதில், உல்லாசப் படகுச் சவாரி செல்வதே அலாதியான உற்சாகத்தைக் கொடுக்கும். ஏரிக்கு நடுவே அமைந்துள்ள மான் பூங்காவுக்குள் மான்கள் மட்டுமின்றி, தோகை விரித்தாடும் அழகிய மயில்கள், வாத்துகள், முயல்கள், புள்ளிமான் கூட்டங்கள் என பார்வையாளர்களை மகிழச் செய்யும் உயிரினங்கள் பல உண்டு.
ஏற்காட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியில் மழைக் காலங்களில், அருவியாய் கொட்டும் குளிர்ந்த நீர் சுற்றுலாப் பயணிகளைக் குதூகலப்படுத்தும்.
ஓடி விளையாடும் சிறுவர்களை மகிழ்விக்கும் பல வகையான விளையாட்டுகள், ஊஞ்சல், கோபுர சறுக்கல், வண்ண வண்ண ரோஜாக்கள், பல வகை மலர்கள் நிறைந்த அண்ணா பூங்காவில், இதமான குளிரில் உலவுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.
பழமையான பகோடா பாயின்ட்!
ஏற்காடு அண்ணா பூங்காவில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பகோடா பாயின்ட் சுற்றுலாத் தலம். இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கோபுரங்கள் உள்ளன. மலையின் முகடு பகுதியில், பலமாக வீசும் காற்றின் வேகத்தில், மரத்தடி நிழலில் பயணிகள் குட்டி தூக்கம் போடலாம். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள கற்கோபுரங்கள், உளி கண்டுபிடிப்பதற்கு முன்னரே மிக நேர்த்தியாக, வெப்பத்தால் சூடுபடுத்தி கற்களை உடைத்து, கோபுரம் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
பகோடா என்றால் திபெத் மொழியில் சமாதி என்றும் பொருள். சமாதிபோல இந்த கற்குவியல்கள் இருப்பதால், சிலர் தங்கள் முன்னோர்களை நினைத்து இவற்றை வணங்குவதாகவும் கூறப்படுகிறது.ஏற்காடு ஏரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேர்வராயன் கோயில், மிக உயரமான சேர்வராயன் மலைச் சிகரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு குகை கோயிலாகும். சேர்வராயன் மற்றும் காவிரி அம்மன் சிலைகள், குகை கோயிலின் முகப்பில் உள்ளன. இந்த குகைக்குள் குறிப்பிட்ட தொலைவுக்குள் மேல் செல்ல முடியாது. இந்த குகை, குடகு மலை வரை செல்வதாக செவிவழிச் செய்தி உலவுகிறது.
மலரே...குறிஞ்சி மலரே...
ஏற்காட்டின் தனிச் சிறப்பான குறிஞ்சி மலர்கள், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக் கூடியவை. மலைச் சரிவு முழுவதும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்வர்.
இதேபோல, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சிறுவர் பூங்கா, ரோஜா பூங்கா என பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். நடப்பாண்டு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்க அரசின் தமிழ்நாடு ஹோட்டல் உள்பட 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு, விடுதிகளில் ஆன்லைன் மூலமாக ‘புக்கிங்’ செய்து தங்கலாம். குறைந்த செலவில், அதிக மனநிறைவுடன் சுற்றுலா செல்ல ஏற்றது ஏற்காடு மலைப் பகுதி.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கற்காலம் முதல் உள்ள பாரம்பரியம் கொண்ட பகுதியாகும்.
செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர் காலத்தில், ஏற்காட்டில் மூடுபனி படர்ந்து ரம்மியமாய் காட்சியளிக்கும்.
ஏற்காட்டில் 1963-ல் அமைக்கப்பட்ட தேசிய தாவரவியல் பூங்கா 18.40 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு 3 ஆயிரம் வகையான மரங்கள், 1800 வகையான செடி, கொடிகள் உள்ளன.
ஏற்காட்டில் காபி, பலா, நீர் ஆப்பிள், அத்தி, பேரிக்காய், மலை வாழை, ஆரஞ்சு, கருப்பு மிளகு, ஏலக்காய் ஆகியவை விளைகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago